பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

02.02.2012 - இன்றோடு ஒரு வருடம்


எங்கள் அண்ணன் ஆ.இராசா கைது செய்யப் பட்டு இன்றோடு ஒரு வருடமாகிவிட்டது.

தலைவர் கலைஞர் சொன்னது போல பொட்டல் காட்டிலிருந்து கிளம்பி, டெல்லியிலே முத்திரை பதித்து, திகாரில் அடைக்கப் பட்டுள்ளார்.
ஊடகத்தால் ஒரு செய்தி, தங்களது வியாபாரத்திற்காக  எந்த அளவுக்கு ஊதி பெருக்கப்  படும் என்பதற்கு உதாரணம் 2ஜி. மொத்த லைசென்ஸும் தனக்கு வழங்கப்படாததால் , ஏர்டெல் நிறுவனம் ஊடகங்கள் உதவியோடு நடத்திய நாடகங்கள்  தான் இவை. ( அரசு விளம்பரத்திற்காக , தமிழகத்தில் , நிலைமாறும்  தினதந்தி போல, ஏர்டெல் விளம்பரத்திற்காக துணை போகும் ஊடகங்கள் ).
ஏலத்தில் முறைகேடு என கார்பரேட் தாக்குதல் முதல் கட்டம். சிஏஜி அறிக்கையை தயாரித்து  நாடாளுமன்றத்திற்கு முன்பாக , பத்திரிக்கைகளில் கசியவிட்டு  நடத்திய தாக்குதல்  இரண்டாம் கட்டம். ( சிஏஜி அறிக்கையே பணத்தால் தயாரிக்கப்பட்டது. சிஏஜி முத்திரையோடு கூடிய அட்டையுடன் வர வேண்டிய அறிக்கை இது. புலனாய்வு பத்திரிக்கைப் போல் வண்ண அட்டையோடு வெளிவந்தது இதுதான் முதல்முறை.)
ஊக நஷ்டம் என்று முதலில் சொல்லி, பிறகு நஷ்டம் என்று அடித்து சொல்லி, அடுத்து அதையே ஊழல் என்று அரசியல் கட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது மூன்றாம் கட்டம்.
கையாலாகாத காங்கிரஸ் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் , தற்காலிகமாக திமுக தலையில் கட்டிவிட்டு தப்பிக்க நினைத்தது நான்காம் கட்டம். 
பெரிய வழக்கு என ஊடகங்களின் பிரச்சாரத்தை மட்டும் காதில் வாங்கி , மறு தரப்பு வாதத்தையே  காதில் வாங்காமல், வழக்கை சிபிஐ கையாண்டது ஐந்தாம் கட்டம். ஊடக கண்காணிப்புக்கு பயந்து வழக்கை கையாளும் நீதித் துறை தற்போதைய கட்டம்.
இலவசமாக அரிசி வழங்குவது எப்படி அரசின் நலத் திட்டமோ,அது போன்றே குறைந்தக் கட்டணத்தில் செல்போன் சேவை வழங்குவதும். அது எப்படி நஷ்டக்கணக்கில் வராதோ, அப்படியே இதுவும் .  இது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவில் லாப நஷ்டக் கணக்கு பார்க்க சிஏஜிக்கு வேலை இல்லை. அந்த சிஏஜியும் கடவுள் இல்லை. சிஏஜி தயாரித்திருக்கிற அறிக்கையில் இருக்கிற தவறை எடுத்துக் காட்ட எந்த ஊடகமும் தயாரில்லை.
வழக்கை விசாரிக்காமல், வாதிடாமல், மறுதரப்பு நியாயத்தையும் கேட்காமல், ஒரு வருட சிறை தண்டனைய சிபிஐ-யும் , நீதிமன்றமும் இன்றைக்கு அளித்திருக்கின்றன. 
ஊடகங்களே வழக்கை தங்கள் போக்குக்கு இழுத்து, இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றன, இதுதான் ஊடக பயங்கரவாதம்.
இந்த நியாயம் சிதம்பரத்துக்கு கிடையாதா ? அருண்ஷோரிக்கு கிடையாதா ? லாபம் அனுபவித்த முதலாளிகள் டாடாவுக்கு கிடையாதா ? அம்பானிக்கு கிடையாதா ?
இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன...... காலம் வரும் போது வெளி வரும்.
எது எப்படி இருந்தாலும் எங்கள் மண்ணை வளப்படுத்திய, எங்கள் அண்ணன் ராசாவை, எங்கள் மண் தலையில் தூக்கிவைத்து தான் ஆடும்.
தலைவர் கலைஞரிடம் இருந்த நெருக்கத்தை தனது வளர்ச்சிக்கு மாத்திரம் பயன் படுத்தியிருக்க முடியும், ஆனால் அதை பயன் படுத்தி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி , பாலிடெக்னிக், ஐடிஐ என பெற்று தந்தவர் அவர்தானே. 
அனைத்து கிராமங்களுக்கும் கூட்டுகுடி நீர்  திட்டம் பெற்று தந்தவர் அவர் தானே.
இன்னும் பல திட்டங்கள், பட்டியலிட இடமில்லை....
வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டிற்கு வரும் பெரும் வழக்கறிஞர்களே வியந்து போகிறார்கள், வருபவர்களை பார்த்து...
அவர் பதவியிலிருந்த பன்னிரண்டு வருடங்கள் அனுபவித்தவர்கள் பெரம்பலூர்காரர்கள், அதனால் அவர்கள் வரலாம்.
ஆனால் வெற்றி பெற்று ஒரு வருடம் தான் ஊட்டிக்கு சேவையாற்றினார். மீதி நாட்கள் பிரச்சினையிலும், சிறையிலும் கழிந்துக் கொண்டிருக்கிறது. 
அந்த  நீலகிரியிலிருந்து அவரை பார்க்க , காய்ந்த தலையும், அழுக்கு வேட்டியும், அப்பட்டமான ஏழ்மையுமாய் , ரயிலேறி, மொழிதெரியாத பிரதேசத்திற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்களே ....எதற்கு ?
அவர் மீண்டு வருவார் ....மீண்டும் வருவார்.... தங்களுக்கு சேவை செய்ய என்ற நம்பிக்கையோடு...
இது தான் அவரது  வெற்றி. இதே வெற்றியை அனைத்திலும் பெறுவார்.   
மீள்வார்.........( கைது செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவுற்ற நாளன்று முகநூலில் பகிர்ந்து கொண்ட உணர்வு )