பிரபலமான இடுகைகள்

புதன், 29 ஆகஸ்ட், 2012

வெளி நடப்பு - வெளியேற்றம்.


கேள்வி நேரம் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்தது. சுற்றுலாத் துறையில் நிறைய கேள்விகள்  அனுமதிக்கப் பட்டன. கோகுல இந்திராவும் சமாளித்துக் கொண்டிருந்தார். சேத்துப்பட்டு ஏரியில் படகு விட படுமா?, சித்தன்னவாசல் காக்கப் படுமா ?,என  எதை கேட்டாலும் "புரட்சித் தலைவி அம்மாவின் அரசு கவனித்து நடவடிக்கை மேற்க் கொள்ளும்", என திறமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். 

கல்லணையில் சுற்றுலா நடவடிக்கை மேம்படுத்துவது குறித்த கேள்விக்கு துணைக் கேள்வியாக, நமது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன் ஒரு கேள்வி கேட்டார். "கல்லணையில் சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். தற்போது அமைச்சரும் தொகை ஒதுக்கியுள்ளதாக சொன்னார்கள். கல்லணை இருந்தால் தான் , சுற்றுலாவை மேம்படுத்தமுடியும் . கல்லணையை சுற்றி பல இடங்களில் அளவுக்கு மீறி மணல் அள்ளுவதால், கல்லணைக்கே ஆபத்தாக இருக்கிறது. முதலில் கல்லணையை காத்து , சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் படுமா ? " , என சாதுர்யமாக கேட்டார்.
 " மணல் அள்ளுவது எனது துறை சம்பந்தமான கேள்வி அல்ல " என பதிலளித்து விட்டு அமர்ந்த அமைச்சர் , சுதாரித்துக் கொண்டு " கேள்வி நேரத்தில் குற்றம் சுமத்துகிறார். அதை நீக்க வேண்டும் " என்றார். உடனே சபாநாயகர், எல்லா மணலையும் நீக்க உத்தரவிட்டார். 

கலகலப்பான கமெண்டுகளுடன் அவை லேசாக இருந்தது. 

இதற்குள், ஜெ வந்துவிட, அதிமுக-வினர் கஞ்சிப் போட்ட காக்கிச் சட்டையாக முறைப்பாக அமர்ந்தனர். சபாவும் சிரீயஸ் ஆனார்.
ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் , முதல்வர் பதிலளிக்கும் வைபவம்,அவரது பேச்சு அடங்கிய ஸ்பைரல் பைண்டிங் நோட்டை எடுத்துக் கொண்டு எழுந்தார். நோட்டின் கனத்தை பார்த்து , பண்ருட்டியை அசத்தும் முடிவோடு வந்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் ஜெ-வின் பதிலால் , அன்றே அசந்து போன பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று சபைக்கு வரவேயில்லை. அசத்தும் அறிவிப்புகளுக்காக சபை காத்திருக்க, ஜெ -யோ சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். " சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். மக்கள் பிச்சினைகளை சபையில் பேச வேண்டும் " என சிறப்பான அறிவுரைகளை வழங்க ஆரம்பித்தார். 
 " இந்த விவாதத்தில் பேசிய பலர் (அவங்க கட்சி) வரவேற்று பேசினார்கள். சிலர் குறை கூறவேண்டுமென குறை பேசினார்கள்" என்று அடுக்கிக் கொண்டே போனவர், தலைவர் மீது பாய ஆரம்பித்தார். " சபையில் பணியாற்ற வேண்டிய மூத்த உறுப்பினர், சபைக்கு வராமலே, வெளியே இருந்துக் கொண்டு குறைகூறுகிறார்" , எனும் போது எழுந்தார் அண்ணன் துரைமுருகன். அதிமுக-வினர் "ஓ" என ஓலமிட ஆரம்பித்தனர். சபாநாயகர்  பாயிண்ட் ஆப் ஆர்டர் கொடுக்க மறுத்தார். 
அறிவுரை சொல்கிறவர் கடந்த கழக ஆட்சி காலத்தில் சபையில் எப்படி பணியாற்றினார், எத்தனை நாள் வந்தார் என்பதை, துரைமுருகன் எடுத்து கூறிவிடுவார் என்பதால், அனுமதி மறுத்தார் சபா. 
அதிமுக அமைச்சர்களும் எழுந்து சத்தம் போட ஆரம்பித்தனர். நாங்களும் எழுந்து துரைமுருகன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கேட்டோம்.

சபாநாயகர் எழுந்து நின்றுக் கொண்டார். ( சபாநாயகர் எழுந்தால் அனைவரும் அமர வேண்டும் என்பது மரபு. ) ஆனால் அதிமுகவினர் , அமைச்சர்கள் உட்பட , நின்று கொண்டே இருந்தனர். இதற்கு மேல் இவர்களிடம் நியாயம் கிடைக்காது என அண்ணன் துரைமுருகன் , வெளி நடக்க ஆரம்பித்தார். 
நான் சபாநாயகரை பார்த்து அவரை பேசவிடுங்கள் , ஏன் பயப்படுகிறீர்கள் எனக் கேட்க, அதிமுக தரப்பிலிருந்து லட்ச்சார்ச்சனை. குறிப்பாக மந்திரி முனுசாமி ( பாடிலாங்குவேஜ் ), சாமி வந்தது போல் ஆடிக்கொண்டிருந்தார். போடா, வாடா என வார்த்தைகள் இறைந்தன.

கிட்டதட்ட எல்லோரும் வெளியேறிய நிலையில்  ( நான் எப்போதும் கடைசி, யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், குறிப்பாக போட்டோவுக்கும், தொலைக்காட்சிக்கும் ) முன்னாள் அமைச்சர் மைதீன் கானும்  , நானும் வெளியேறிக் கொண்டிருந்தோம். 
சபையில் வைக்கப் பட்டிருந்த ஒரு புத்தகம் ' தொப் ' என்று அவர் அருகில் வந்து விழுந்தது. திரும்பிப் பார்த்தால் , விக்கெட் எடுத்த பவுலருக்கான பெருமையும் ஆவேசமுமாய் வெற்றிவேல். 
சபாநாயகரை பார்த்து, நானும், மாமா மைதீன் கான் அவர்களும் " தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" எனக் குரல் எழுப்பினோம். அவர் எழுந்து நின்று ஒரு தீர்ப்பு கொடுத்தார், " சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கிற இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். வெளியேற்ற உத்தரவிடுகிறேன் ".
சபைக் காவலர்கள் எங்கள் இருவரையும் சூழ்ந்தார்கள். நாங்கள் தொடர்ந்து குரலெழுப்பினோம். நெட்டி தள்ளி லாபியில் கொண்டு வந்து விட்டார்கள். 
வெளி நடப்பும், வெளியேற்றமுமாய் வெளியில் வந்தோம்.

( சபையிலிருந்து வெளிவந்து அலைபேசியை செயல் ஊக்கினேன். தொகுதியிலிருந்தும், மாவட்டத்திலிருந்தும் தொடர்ந்து அழைப்புகள்.... 
" சபாஷ். தூக்கிகிட்டு வந்து வெளியே போட்டாங்களா ? விடாதே..."
" அவ்வளவு தானா ? இன்னும் எதிர்பார்க்கிறேன் ..." என..
அடுத்த கூட்டத்தொடர் எப்போது ? ரெடி...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக