பிரபலமான இடுகைகள்

புதன், 29 ஆகஸ்ட், 2012

தளபதி - சோர்வை போக்கும் விசிறி


தளபதியை வாழ்த்த வந்த விசிறி சாமியார்.

தளபதியை சந்திப்பதற்கு, நிர்வாகிகள் வரக் காத்திருந்து , அரங்கத்தை அடைந்த போது மணி 8.45 . 9.00 மணிக்கு வரிசையில் நின்று நகர ஆரம்பித்தோம்.
நல்ல நெரிசல். மூன்று பாதையாக தடுத்து வாடி கட்டப்பட்டுள்ளது. நடு வாடியில் நாங்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் என்று.
ஒரு புறம் மெல்லிசைக் கச்சேரி. மடைதிறந்து ஆடும் நதிகளில் நான் இசைக் கலைஞன்....... இசைஞானியின் உற்சாக கீதம். இங்கே வியர்வை நதி பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
திருவண்ணாமலை இளைஞர் அணி வழக்கம் போல் அதிர் மேளம் முழங்க உள்ளே நுழைய , நிகழ்ச்சி களைக் கட்ட துவங்கியது.
திடீரென மெல்லிய காற்று வீச ஆரம்பித்தது.

தலைக்கு மேல் ஒரு விசிறி சுழன்று கொண்டிருந்தது. பனைவோலையில் செய்யப்பட்ட விசிறி. யார் வீசுவதென்று பார்த்தால், ஒரு சாமியார். காவித் துண்டு, பச்சை நிறத் துணியில் தலைப்பாகை. நீண்ட தாடி, நெற்றியில் நீரு, உருத்திராட்சக் கொட்டை என்ற கோலம். நான்கு பக்கமும் திரும்பி, எல்லோருக்கும் விசுறுகிறார்.
இயல்பான ஈரோட்டு பார்வையுடன் அவரை நோக்குகிறேன். இருந்தாலும் தளபதியை காண வந்திருக்கிறாரே.....அதற்குள் அவர் என்னை பார்த்து புன்முறுவல் பூக்கிறார். நேரம் 10.00.
அய்யாவுக்கு எந்த ஊர் என்று கேட்டேன். தஞ்சாவூர் என்றார். பக்கத்து ஊர் தான் நாங்கள் எல்லாம் அரியலூர் மாவட்டம் என்றேன். மகிழ்ச்சி என்றவர், எங்களுக்கெல்லாம் மிட்டாய் கொடுத்தார்.
பெயர் என்ன என்றேன். " முருகன் ஆனால் எல்லோரும் விசிறி சாமியார் என்று தான் அழைப்பார்கள்" என்றார்.
திருவண்ணாமலை யோகி சுரத் ராம் குமார், உண்மையான விசிறிசாமியார், நான் டூப்ளிகேட் என்றார். செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, அவர் யாருக்கு விசிறுவார் என்று கேட்டார். யாருக்கும் விசிற மாட்டார் என்றார். எங்களுக்கெல்லாம் விசுறுகிற நீங்கள் தான் உண்மையான சாமியார், என்றோம்.
சாமியார் சொன்னார்" தொண்டருக்கு தலைவர் அவர், அதனால் வாழ்த்த வந்தேன். நீங்கள் அவரின் தொண்டர்கள். உங்களுக்கு விசுறுவதன் மூலம் நான் சிறு தொண்டு செய்கிறேன் " என்றவர், தொடர்ந்து விசிறிக் கொண்டே வந்தார்.
ஒரு வாடியை நிறுத்தி, மறு பகுதியை அனுப்பினார்கள். சாமியார் எங்களுக்கு முன்பாக மேடையேறினார். மணி 11.00. சாமியார் தளபதி அவர்களை நெருங்கிவிட்டார். கொட்டாங்குச்சியில் வைத்திருந்த கல்கண்டை தளபதிக்கு கொடுத்து வாழ்த்துகிறார். சுற்றிலும் நிற்பவர்கள் மத்தியில் சிரிப்பலை.
இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து, துறவு பூண்டவர்களும் வாழ்த்துகின்ற அளவுக்கு தளபதி அவர்களுடைய பணி சிறப்பு, அதனால் தான் அமெரிக்கவும் " மாண்புமிகு தளபதி " என்கிறது.
நாங்கள் தளபதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மலர்ந்த முகத்தோடு , ஒவ்வொருவருடைய வாழ்த்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை பார்த்ததில் , இவ்வளவு நேரம் வரிசையில் நின்ற சோர்வு அகன்று, உற்சாகமானோம். அருகில் அழைத்து கைகுலுக்கினார். எனக்கு பிறந்த நாளாய் உணர்ந்தேன். உற்சாகத்தில் பறந்தேன்.


அதே நேரம் சாமியார் மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். அவர் கையில் விசிறி  நிற்காமல், அடுத்தவர்களுக்காக சுழன்றுக் கொண்டே இருந்தது, மற்றவகளுடைய சோர்வைப் போக்கிக் கொண்டே இருந்தது......
 தளபதி அவர்களைப் போல.....