பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சிறு நிகழ்வுகள் தான் .... அவை தாம் வரலாறு.


திராவிடர் கழக மாணவரணியின் மாநிலத் துணை செயலாளர் சென்னியப்பன் அவர்களது திருமணம் , பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரது பூமியான ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நடைபெற்ற இரு நிகழ்வுகளை குறிப்பிட்டாக வேண்டும்.



அதற்கு முன்பாக பெரியாரது வெற்றியை இங்கு பதிந்தாக வேண்டும். திருமணத்தில் காவி சேலையை உடையாக உடுத்திய ஒரு சாமியார் கலந்துக் கொண்டார். அவரை வாழ்த்த அழைத்தார்கள். குனிந்த முதுகுகளை நிமிர்த்திய பெரியார் என்று ஆரம்பித்தார். தமிழர்களுக்கு இன்று எல்லா இடத்திலும் பிரச்சினை, அதற்கு உடன் குரல் கொடுப்பவர் ஆசிரியர் அவர்கள் தான் என திராவிடர் கழகத்தின் அவசியத்தை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார்.



பள்ளி மாணவர்கள் திராவிடர்கழக வெளியிடுகளை வாங்கிக் கொண்டு வந்து ஆசிரியர் அவர்களிடம் கையொப்பம் பெற்று மகிழ்ந்தார்கள். அந்த பிள்ளைச் செல்வங்களை அன்போடு , பெயர் என்ன ?, என்ன படிக்கிறீர்கள் ?, என்னவாகப் போகிறீர்கள் ? என வினவிக் கொண்டிருந்தார்கள். 50 பிள்ளைகளுக்கு மேல் வந்தார்கள். மாவட்ட ஆட்சியர், மருத்துவர், பொறிஞர் என பதில் வந்தது. 



அப்போது அஸ்வின் என்ற சிறுவன் வந்தான். அவனிடம் பேசிய அய்யா, சிறுவன் கையிலிருந்த காவி நிற கயிற்றை கவனித்து விட்டார். நீ தினமும் குளிப்பாயா ? என்று கேட்டார். குளிப்பேன் என்றான். இவ்வளவு சுத்தமான பிள்ளை கையில் இந்த கயிற்றை அணிந்துருக்கிறாயே, ஈரமாகும் போது இதில் கிருமிகள் உருவாகுமே, உடல் நலத்திற்கு கேடானதாயிற்றே, எனவே யோசனை செய்து முடிவெடு என பெரியவர்களிடத்தில் பேசுவது போல மிகப் பக்குவமாக சொன்னார். தலையாட்டிவிட்டு தனது பெற்றோரிடம் சென்று நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தான். இதற்கிடையில் வாழ்த்துபவரது பேச்சில் எனது கவனம் சென்று விட்டது. அய்ந்து நிமிடம் கழித்து அஸ்வின் திரும்ப மேடைக்கு வந்தான், கையில் அறுத்த கயிற்றோடு. அய்யா நெகிழ்ந்து அவனை தட்டிக் கொடுத்து,பாராட்டி அனுப்பினார். பேச்சிலும் வாழ்த்தினார். அடுத்த தலைமுறையும் தயாராகிறது, தயார் படுத்தப்படுகிறது.



அடுத்த நிகழ்வு. வாழ்த்துரைகளுக்கு பிறகு, மணவிழா. மணமக்களின் பெற்றொர்கள் அழைக்கப்பட்டு பெருமை படுத்தப்பட்டார்கள். மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆசிரியர் அவர்கள் மலர் மாலையை மணமக்கள் கையில் கொடுத்து மாற்றிக் கொள்ள சொன்னார். மாற்றிக் கொண்டார்கள். மேடையில் நின்றுக் கொண்டிருந்தவர்களை அமரச் சொன்னார் ஆசிரியர் அவர்கள். நாங்கள் மங்கல நாண் அணிவிக்கிற நிகழ்ச்சிக்காக நின்று கொண்டிருந்தோம். அய்யா " மலர் மாலை மாற்றியதோடு மணவிழா நிறைவுற்றது. அடிமை சின்னமாம் தாலி தேவையில்லை என மணமக்கள் சொல்லிவிட்டார்கள் " என்றபோது தான் நாங்கள் உணர்ந்தோம்.



சிறிய கிராமத்திலிருந்து, ஏழ்மை சூழ் நிலையிலிருந்து, ஒடுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், பெரியார் திடலில் வளர்கிற பிள்ளை என்பதை சென்னியப்பன் நிருபித்து விட்டார். இதில் குறிப்பிட வேண்டிய செய்தி, மணமகளின் பெற்றோர் துவக்கத்தில் திருமணத்திற்காக கோவிலிலே குறி கேட்டு, சாமியாரிடம் குறி கேட்டு , சரியான ஒப்புதல் இல்லை என திருமணத்திற்கு தயங்கியிருக்கிறார்கள். அவர்களை தாலியே இல்லாத திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்தது தான், பெரியாரின் புரட்சியின் வெற்றி.



( # திகார் சிறையிலிருந்து மணமக்களுக்கு அண்ணன் ஆ.ராசா அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியை டிஜிட்டல் பேனராக , மண்டபத்து வாயிலிலே மணவீட்டார் கட்டியிருந்தது, அவர் மீது அவர்கள் கொண்டிருக்கின்ற அன்பை காட்டியது )
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக