பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஆமை புகுந்த வீடு உருப்படாது...






இணையத் தோழர்களை சந்திக்க பெரியார் திடலில் காத்திருந்த நேரத்தில், சகோதரர் பிரின்ஸ் அவர்கள், திரு.ஒரிசா பாலு அவர்களை அறிமுகப்படுத்தினார். நீண்ட காலம் ஒரிசா மாநிலத்தில் தங்கியிருந்ததால் இந்தப் பெயர் . ஆமைகள் கு
றித்து ஆய்வு மேற்கொள்பவர்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆமைகள், பழந்தமிழர்களின் கடல் பயணம், உலகில் தமிழ் பரவியிருக்கும் விதம் என அவர் பேச,பேச ஒரு தகவல் களஞ்சியத்தை புரட்டுவது போல இருந்தது.

ஒரிசாவில் இருக்கும் போது, ஆமைகள் மீது RFID கருவியை பொருத்தி அவை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு நாள் ஆமை நீந்தாமல் மிதந்து செல்வதை காண நேரிட்டிருக்கிறது. எப்படி நீந்தாமல் பயணிக்கின்றன என ஆய்ந்தப்போது தான், கடல் நீரோட்டங்களில் அவை செல்லும் போது, நீந்தத் தேவையில்லாமல் இழுத்து செல்லப்படுகின்றன என கண்டுபிடித்திருக்கின்றார்.

RFID கருவியில் இருக்கும் ஆண்டெனா மூலம் சாடிலைட்க்கு கிடைக்கும் சிக்னலை தொடர்ந்தப் போது, ஆமைகள் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளுக்கு செல்வது தெரியவந்தது. அவைகளை மியான்மர், மலேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக்தீவுகள், மெக்சிகோ, ஆப்ரிக்கா, ஐஸ்லேண்ட் ஆகிய கடற்கரைகளுக்கு ஆமைகளை தொடர்ந்து பாலு அவர்கள் பயணித்தப்போது இன்னும் ஒரு புதிய செய்தி கிடைத்திருக்கிறது.

அங்கு பல ஊர்கள்,துறைமுகங்களின் பெயர்கள் தமிழில் இருந்திருக்கின்றன. தமிழா, சோழவன்,கூழன், ஊரு, வான்கரை, குமரி, சோழா, தமிழிபாஸ் என தமிழ் பெயர்கள். இன்றைக்கும் அதே பெயரோடு இருப்பது தான் இன்னும் வியப்பு.

தொடர்ந்த ஆய்வில், சோழர் சார்ந்தப் பெயர்கள் மூலம் சோழ மன்னர்கள் கடல் கடந்து படையெடுத்து ஆட்சி நடத்தியிப்பது தெரிய வருகிறது. ஆமை குறியீடுகள், ஆமை உருவம் கொண்ட படகுகள் போன்றவற்றின் மூலம் ஆமைகளை பின்பற்றியே இவர்கள் பயணித்திருப்பதும் உறுதியாகிறது.

இப்படி ஆமைகளை பற்றி தொடங்கிய திரு.பாலு அவர்களின் ஆய்வு, பழந்தமிழரின் கடல் பயணம், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் என விரிந்துக் கொண்டிருக்கிறது. அரசின் உதவி இல்லாமலே தனது ஆய்வை திரு. பாலு அவர்கள் தொடர்ந்து வருகிறார். விரைவில் இது குறித்து ஆவணப்படுத்தி புத்தகம் வெளியிட இருக்கிறார்.

இவரது ஆய்வுகளை ஆவணப்படுத்த உதவி வரும், எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சகோதரர் Prince Ennares Periyarஅவர்களுக்கு நன்றி. Orissa Balu அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.http://www.facebook.com/orissa.balu

ஆமைகளை பின் தொடர்ந்து, வீட்டை மறந்து, நாடு நாடாக கடல் பயணம் மேற்கொண்டதால் தான் , ஆமை புகுந்த வீடு உருப்படாது எனப்பட்டிருக்கிறது.

# ஆனால் ஆமையை பின்பற்றிய பயணமே உருப்பட்டிருக்கிறது, பல வழிகளை திறந்திருக்கிறது, அன்றும்,இன்றும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக