பிரபலமான இடுகைகள்

புதன், 5 செப்டம்பர், 2012

நெஞ்சு பிளக்கும் துயரம்...


குன்னம் வட்டத்திற்கு உட்பட்டது பெரியம்மாபாளையம் கிராமம். 02.09.2012 நண்பகல், குட்டையில் குளிக்கச் சென்ற நான்கு குழந்தைகளும், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவரும் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

ஊருக்கு ஒதுக்குபுறமாக, விவசாயத்திற்கு வெட்டப்பட்ட பண்ணைக் குட்டையில், சமீபத்தில் பெய்த மழையால் நீர் பிடித்திருந்தது. அதில் ஆழம் தெரியாமல் இறங்கி மாட்டிக் கொண்ட பிள்ளைகளும் காப்பாற்ற சென்றவரும் மரணம்.

பெரம்பலூர் தலைமை மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்கு காத்திருந்தன. உடன் பரிசோதனை மேற்கொள்ள நானும் நேரில் சென்று முயற்சி செய்தேன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) தமிழ்செல்வனும் நேரில் வந்து முயற்சி செய்தார். இரவு பரிசோதனை மேற்கொள்ளகூடாது என்பது அரசு விதி என்பதால் மறுநாள் தான் பரிசோதனை.

பிணவறையில், அந்தப் பிள்ளைகளின் உடல்களை பார்த்தேன். தூங்குவது போன்றே இருந்தனர். கனவில் கூட அந்தக் காட்சியை காணக்கூடாது

மறுநாள்அந்த கிராமத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றோம். அனைத்துக் கட்சியினரும், சுற்று வட்டாரத்தினரும் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மூன்று குடும்பங்களில் மரணம். மன்னாதி (45 வயது) அவரது மகன்கள் சிந்தனைச்செல்வன் (12), சுரேஷ்மேனன்(9) ஆகியோரை இழந்து இவரது மனைவியும், முதல் மகனும் துடிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று மரணம் பெரும் சோகம், பெரும் இழப்பு.

சச்சின் (10) குடும்பத்து சோகம் இன்னொரு வகை. ஒரே மகன். இவரது தந்தை, சச்சின் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது துபாய் சென்றவர் , என்ன ஆனார், எங்கிருக்கிறார் என தெரியாத நிலை. கணவன் நிலை அறியாத, அவரது தாய் ஒரே ஆதரவான சச்சினையும் இழந்து இன்று தனிமரம்.

அருண்குமார் (13). இவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அண்ணனும் , தங்கையும் சரியாக நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள். இந்த குடும்பத்தின் நம்பிக்கையாக விளங்கிய துடிப்பான அருண்குமாரை இழந்து தவிக்கிறது இந்தக் குடும்பம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சோகம். ஒட்டு மொத்த ஊரும் பேரிழப்பில் தவிக்கிறது. மயானத்தில் எங்கு நோக்கினும் விசும்பல் குரல். யாரை பார்த்தாலும் கலங்கியக் கண்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென தெரியாமல் தடுமாற்றம். பச்சிளம்பிள்ளைகளை எரிக்காதீர்கள், புதையுங்கள் என சிலர் குரல்.

சூரியன் மறையும் நேரம், ஒரே நேரத்தில் , அருகருகே அடுக்கி தீ வைக்கப்பட்டன அந்த ரோஜாக்கள் . மூன்று குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கைகள் பொசுக்கப்பட்டன. வெள்ளந்தி மக்களாய் வாழும் இந்த கிராமத்து மக்களுக்கு ஆண்டுகணக்காகும் இந்தக் கெட்டகனவிலிருந்து மீள.

காலம் தான் மருந்து, இவர்களை தேற்ற ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக