பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஆழம் - கிழக்கு பதிப்பகத்தின் புதிய முயற்சி


ஆழம் - மாத இதழாக மலர்ந்திருக்கிறது. எட்டாவது இதழாக செப்டம்பர் இதழ் வந்திருக்கிறது, ஒரு வித்தியாசமான கட்டமைப்பில். இதில் அரசியல் இருக்கிறது, சினிமா இருக்கிறது, சமூகப் பிரச்சினைகள் இருக்கிறது, விளையாட்டு இருக்கிறது, நடப்பு நிகழ்வுகள் இருக்கிறது, வர்த்தக செய்திகள் இருக்கிறது. ஆனால் மேலோட்டமாக இல்லாமல், அலசலாக, விவாதமாக.


கடந்த மாத இதழின் முகப்பு செய்தியாக, நரேந்திர மோடி குறித்த கட்டுரை. அதையொட்டி "மோடி பிரதரமாக வேண்டும்", " மோடி பிரதமராகக்கூடாது" என இரண்டு கட்டுரைகள். முகப்பு செய்தியில், மோடி குறித்து பாரபட்சமற்ற செய்திகள். மோடி வேண்டும், என்ற கட்டுரை ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரால் எழுதப்பட்டது. முழுவதும் எதிர் கருத்தாக ஒரு கட்டுரை. இவற்றை படித்து வாசகர்களே முடிவுக்கு வர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இதழில் டெசோ மாநாடு குறித்த அலசல்.  டெசோ குறித்த இரண்டு பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள், ஈழத்தமிழர்கள் இருவரின் பார்வைகள் என அலசப்பட்டுள்ளது. டெசோவால் விளையக்கூடிய நன்மைகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் என விரிவாக ஆரயப்பட்டுள்ளது.


அசாம் குறித்த அலசல், திருப்பூர் வர்த்தக சரிவு குறித்த கட்டுரை, சமூக வலைதளங்கள் குறித்த பார்வை என ஒருபுறம், விளையாட்டு தலைப்பில் ஒலிம்பிக்ஸ் சாதனைகளும் சோதனைகளும் என இன்னொருபுறம். துணுக்கு செய்திகளாக இல்லாமல், சினிமா விமர்சனம் நறுக்கென இருக்கிறது .


இலக்கியத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், பாகிஸ்தான் எழுத்தாளர் ராசா நயீம் என்பவருடன் ஓரு அழுத்தமான நேர்காணல், புத்தக அறிமுகமாக மூன்று புத்தகங்கள் குறித்த சிறு விமர்சனம். வரலாறு பகுதியில் சிரியா நாட்டை குறித்து கட்டுரை. மாநிலங்கள் பகுதியில் பிகார் மாநிலத்தில் ரண்வீர் சேனா என்ற அமைப்பின் சாதி வெறியாட்டம் குறித்த கண்டனக்குரல் என விரிகிறது புத்தகம்.


அனைத்து பதார்த்தங்களையும் கொண்ட ஓர் தலை வாழை விருந்தாக இருக்கிறது. அதே சமயம் சில பத்திரிக்கைகளை போல் நொறுக்கு தீனியாக போய்விடாமல், சத்தான உணவுகளுடன் கூடியதாக இருக்கிறது.


துப்பறியும் பத்திரிக்கையாக, ஜனரஞ்சக பத்திரிக்கையாக, இலக்கியப் பத்திரிக்கையாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது . இதே திசையில் நகர வேண்டும்.  விற்பனையை உயர்த்த திசை மாறிவிடக்கூடாது.


மாறுபட்ட அனுபவத்திற்கு படியுங்கள்.


#   இடைவெளியை இட்டு நிரப்புகிறது  - ஆழமாக....