பிரபலமான இடுகைகள்

சனி, 3 நவம்பர், 2012

2012 - 2013 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எனது உரை


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ,
                                        இந்த அவையிலே நான் பேசுவதற்கு காரணமாக இருந்த-நான் மட்டுமல்ல, உங்களை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடப்பதற்கும், கல்வி கற்பதற்கும், இந்த அவைக்கு வருவதற்கும் காரணமாக இருந்த-அடிப்படையாக இருந்த தந்தை பெரியார் அவர்களை நினைவு கூறுவது காலத்தின் கட்டாயம்.

காரணம் இன்றைக்கு ...(அமைச்சர்கள் குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
எதை, எதைப் பேசவேண்டும், எதை எதை பேசக்கூடாது என்று நீங்கள் முன்னாலேயே முன்னுதாரணத்தைக் கொடுத்துவிட்டால்... (குறுக்கீடுகள் )

திராவிடத்தால் பயன்பெற்று வாழ்வுபெற்று முகவரி பெற்றவர்கள் இன்றைக்கு திராவிடத்தை மறந்தாலும், அந்தத் திராவிடத்தின் தந்தை இனப் பகலவன் பெரியாரை நினைவு கூறுவது எங்கள் கடமை.
அவர்தம் வழி தோன்றலாய் போராடும்.... (தொடர்ந்து குறுக்கீடுகள்)

பெரியாரைப் பற்றி பேசுகிறேன். நான் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசக் கூடாதா ?

புறநானூற்று வரிகளாம்
 " என்றும் உள்ள இந்நகர் கலியுகத்தில்
இலங்குவேற் கரிகாற் பெருவளத்தோன்
வன்திறற் புலி  இமயமால் வரை மேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை "
என்ற வரிகளுக்கேற்ப விளங்குகின்ற எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

ஒல்காப் புகழ் வள்ளுவர் வாக்கிக்கேற்ப
  " வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண்
    ஊறு எய்தி உள்ளப்படும் "
என்ற குறளுக்கேற்ப ' செயல்திறனால் பெருமைப் பெற்று, உயர்ந்த வினைத் திட்பத்தால் நாட்டரசால் மதிக்கப்படுவான் என்கின்ற வாக்கியத்திற்கேற்ப தம் செயல் திறத்தால், திறமையால், தியாகத்தால் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு எங்கள் தளபதி வந்தாலும், தொடர்ந்து பணியாற்றுகின்ற அவருடைய பணியை இறைக்கு அமெரிக்க நாட்டு, கெண்டகி மாநில அரசு மதித்திருக்கிறது. கெண்டகி கர்னல் விருது வழங்கியிருக்கிறது. அவரை வணங்குகிறேன்.

தலைவர் கலைஞர் வழங்கிய திட்டங்கள் ;
எங்களது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஒரு காலத்தில் வறண்ட மாவட்டங்கள். அவற்றை முன்னேற்றப் பாதையில் அடிபோட வைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். அரியலூருக்கென்று தனி மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், குன்னத்திலே அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூரிலே அரசு பொறியியல் கல்லூரி, பெரம்பலூரில் அரசு கலைக் கல்லூரி, பெரம்பலூரிலே பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ.கள் இரண்டு என்ற கல்விக்கான நிறுவனங்களையெல்லாம் வழங்கி, அதே போல மதனத்தூர்- நீலத்தநல்லூர் பாலத்தை எங்களுக்கு வழங்கி, பருத்திக்கு ஒரு ஆராய்ச்சி நிலையம். இப்படி வறண்ட மாவட்டத்தை உயர்த்துவதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் வழங்கிய திட்டங்களுக்கு இந்த நேரத்திலே நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
(உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கரை பேசவிடாமல் அமைச்சர்கள் குறுக்கீடுகள்).

நன்றியை மறக்கிறவர்கள் நாங்கள் கிடையாது. வரலாற்றை மறைக்கிறவர்கள் நாங்கள் கிடையாது. இந்தத் திட்டங்களையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு தருவதற்கு உற்ற உறுதுணையாக இருந்து எங்கள் மாவட்டம் முன்னேறுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் ஆ.இராசா அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அவையிலே இரண்டாம் முறையாக பணியாற்ற வாக்களித்து. வெற்றி பெற செய்த குன்னம் தொகுதி எம் மக்களுக்கு எனது பணிவாக நன்றியை இந்த நேரத்திலே சமர்ப்பிக்கிறேன். 

கலைஞர் ஆட்சியின் நிதி நிலை அறிக்கை, ஒரு நிதிநிலை அறிக்கை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம், 2006ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள். அந்த அறிக்கைகளிலே புதிய அறிவிப்புகள் இருக்கும் (அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்தனர்)
*  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த திட்டங்கள் இருக்கும்.
* எதிர்கால தலைமுறைக்கான தொலை நோக்குத் திட்டங்கள் இருக்கும்.
* அந்தந்த ஆண்டுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகள் இருக்கும்.
* புதிய கல்லூரி பற்றிய அறிவிப்புகள் இருக்கும்.
* பழைய திட்டங்களை விரிவு படுத்துகின்ற அறிவிப்புகள் இருக்கும்.
அப்படி அறிவிக்கின்ற திட்டங்களையெல்லாம் செயல்படுத்துகின்ற திறன் இருக்கும்.

அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தமிழகத்திலே இருந்த குடிசை வீடுகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றுகின்ற கலைஞர் வீடு வழங்கும் திட்டம். (மேசையை தட்டும் ஒலி) அந்தத் திட்டத்திலே ஆறு இலட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன... (குறுக்கீடுகள் )

எங்களது தளபதி அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டடம் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை ஊராட்சிகளுக்கும் நிதி வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
இதே போன்றுதான் உயர் கல்வித் துறையாக இருந்தாலும், விவசாயத்துறையாக இருந்தாலும், மக்கள் நல்வாழ்வுத் துறையாக இருந்தாலும், பல்வேறு திட்டங்கள் அந்த நிதிநிலை அறிக்கையிலே வழங்கப்பட்டது.

அந்த நிதிநிலை அறிக்கைகளை இன்றை நிதி அமைச்சர் அவர்கள் மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. ( குறுக்கீடு )

அது நாங்கள் கொண்டு வந்த திட்டம், எங்களுடைய அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுடைய தொகுதிக்கு வழங்கப்பட்ட நிதி அது...(குறுக்கீடு).

குன்னத்திலே கொடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை நீக்கி, 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டதை நிறுத்தியிருக்கின்றீர்கள்....(குறுக்கீடுகள்).

குற்றம் சொன்னால் மட்டும்... (அமைச்சர்கள் குறுக்கீடு).

மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் கூடி கம்யூனிஸ்ட் கட்சிக்கான அறிக்கையை தயாரித்தார்கள். அதுதான் Manifesto of communism . ஆனால் அந்த அறிக்கை உயிர் பெற்றது 70 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவிலே கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான்.
ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் 2006-லே கொடுத்த தேர்தல் அறிக்கைதான் மற்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதை ஒட்டிய அறிவிப்புகள் வழங்கப்பட்டன. அதே போன்றுதான், தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்திற்குக் கொடுத்த திட்டங்களை விரிவுபடுத்துவதும்.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு "தாய்" என்று பெயர் மாற்றுவதுமாக. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள்தான் இந்த திட்டத்திற்கெல்லாம் "தாயாக" இருக்கிறார். எனவே அவரை மறந்து விடக்கூடாது.

இந்த நிதிநிலை அறிக்கையிலே..... - ( குறுக்கீடு )
சரி உங்களுக்குப் பிடித்த மாதிரி பேசுகிறேன். பணிவின் உருவாய், கனிவின் மறுவாய், அன்பின் இருப்பாய், பண்பின் உறுப்பாய், விசுவாசத்தின் வடிவாய் விளங்கும், தலைவர் கலைஞர் அவர்களால் பச்சைத் தமிழர் என்று அழைக்கப்பட்ட அன்பிற்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்-பிடித்திருக்கிறதா? (சிரிப்பு)
தனது தலைமையிடம் காட்டும் விசுவாசத்தை.... (குறுக்கீடு).... (சிரிப்பு).

( ஓ.பி.எஸ் விளக்கம் ) 
 இல்லை நான் தவறாக சொல்லவில்லை. பணிவின் உருவாய், கனிவின் மறுவாய், அன்பின் இருப்பாய் - அப்படித்தான் சொன்னேன். அதுபோல காட்டுகின்ற விசுவாசத்தை மக்களுக்கும் காட்ட வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதன்படி அவர் போட்டிருக்கின்ற அந்த நிதிநிலை அறிக்கை வெற்றிக்களிப்பிலே ஒரு வெண் குதிரையாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
நாங்கள்கூட எதிர்பார்த்தோம்,  கடந்த முறை போட்டதைப் போன்று வெள்ளை நிறத்தைப் பூசிய ஒரு குதிரையாகவாவது வரும் என்று பார்த்தோம். அப்படியும் இல்லை. இப்படியும் இல்லை.
தறிகெட்ட வரிக் குதிரையாக இந்த நிதி நிலை அறிக்கை இன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

நாட்டு மக்கள் இந்த நிதிநிலை அறிக்கையைப் பார்த்து வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். எனவே அந்த நிதிநிலை அறிக்கையிலே இருக்கின்ற குற்றத்ததைச் சொன்னால் உடனே தவறு என்று சொல்கிறீர்கள். இந்த நிதிநிலை அறிக்கையிலே மட்டுமல்ல.... (குறுக்கீடு).

உங்கள் முதலமைச்சர் சொன்ன கருத்துக்கு எங்கள் உறுப்பினர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்னதற்கு, பேசுகின்ற உறுப்பினர் சொல்லட்டும் என்று சொன்னீர்கள். அந்த விளக்கத்தினைச் சொல்லவாவது எங்களை விடுங்கள்."
இவ்வாறு உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது அதிமுக அமைச்சர்கள் எழுந்து பேசவிடாமல் குறிக்கீடு செய்து கொண்டு இருந்தனர். பேரவைத் தலைவரும் உறுப்பினர் சிவசங்கருக்கு பேச அனுமதி மறுத்ததால் தமது பேச்சினை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை.

( நன்றி - முரசொலி )
20 நிமிடங்கள் எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம். 8 நிமிடம் தான் நான் பேச அனுமதிக்கப்பட்டேன். 
கூடுதலாக 16 நிமிடங்களை குறுக்கிடவும், எனக்கு பதில் அளிக்கவும் அமைச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.  
எங்கெங்கு குறுக்கீடு இருக்கிறதோ அங்கெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.....