பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

முந்திரிக்காட்டு வீரப் பெண்மணி...இன்று கழகத் தோழர் ஒருவரது தாயார் மறைவையொட்டி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர் இல்ல நிகழ்ச்சி என்ற அளவிலே கலந்துக் கொண்டு படத்தை திறந்து வைத்தேன். உள்ளூர்காரர்கள் பேசும் பொழுது தான் அவரது பெருமை புரிந்தது.

அது ஆண்டிமடம் அருகில் இருக்கும் வல்லம் கிராமம். ஒரு காலத்தில் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைமையகம். அந்த கிராமத்தை சுற்றியுள்ள முந்திரிக் காடுகளை உள்ளூர் மக்களுக்கு பயனில்லாமல், அரசு வனத் துறை அதிகாரிகள் சுரண்டித் தின்னக் காலம்.

உள்ளூர் மக்கள் பயன் பெறும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப் பட வேண்டும் என மக்கள் குரல் கொடுக்கத் துவங்கினர். அதற்கான போராட்ட்த்திற்கு இயக்கத்தினர் வியூகம் வகுத்து தந்தனர்.

காவல்துறை இதை காரணம் காட்டி ஊரில் உள்ள அனைவரையும் “ நக்சலைட்டுகள் “ என முத்திரை குத்தத் துவங்கினர். வழக்குகள் புனையப்பட்டன. அந்த ஊருக்கு மட்டும் அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை.

ஒரு கட்டத்தில் ஊரிலுள்ள ஆண்கள் தலைமறைவாக வேண்டிய சூழல். பெண்கள் தான் குடும்பப் பொறுப்பையும் சுமக்க வேண்டும், தலைமறைவாக இருக்கிறவர்களுக்கும் உதவ வேண்டும்,காவல்துறையையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை.

அந்த நேரத்தில் தலைமறைவாக இருந்த முண்ணனித் தோழர்களுக்கு, தாய் பாசத்தோடு உணவு சமைத்து கொடுத்தவர் இந்த “ சின்னப் பிள்ளை அம்மாள் .

காவல்துறைக்கு பயப்படாமல், உணவு தயாரித்து, முந்திரி காட்டுக்குள் கொண்டு போய் கொடுத்து, அவர் காட்டிய பாசத்தை, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று மிச்சம் இருக்கின்ற தோழர்கள் பதிவு செய்தனர்.

சித்தாந்தம் புரிந்தவரல்ல, இயக்கத்தில் இருந்தவரல்ல, ஆயுதம் ஏந்தியவரல்ல, வழக்கில் சிக்கியவரல்ல ஆனால் அவர் நூறு சதவீதம் “ போராளி “. உரிமைக்கு போராடியவர்களுக்கு உயிர் கொடுத்த போராளி !

அவரது மகன் இயக்கப் பணியாற்றியவர், இன்று கழகத் தோழர்.


# “ சின்னப் பிள்ளை அம்மாள் படத்தை திறக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு பெருமைப் பட்டேன். இந்த மண்ணில் பிறந்ததற்கு கர்வப்பட்டேன்.