பிரபலமான இடுகைகள்

சனி, 8 டிசம்பர், 2012

மக்கள் சந்திப்பு 2 – அந்தூர் ஊராட்சி....





அந்தூர் ஊராட்சி சற்றேறக்குறைய 3000 மக்கள் தொகை கொண்ட கிராமம். குன்னம் தொகுதியின், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ளது. இங்கு ஒரு காலத்தில், மக்கள் ஏரித் தண்ணீரை குடித்து வந்தார்கள்.

தற்போதும் மின்சாரம் இல்லாவிட்டாலோ, மோட்டார் பழுதானாலோ சில நாட்கள் அதே ஏரி தண்ணீர் தான் வழி. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் விநியோகமாகிற நீரும் உள்ளூர் தண்ணீர் கிடையாது. உள்ளூர் தண்ணீர் உப்புத் தண்ணீர், குடிப்பதற்கு சரி வராது.

13 கி.மீ தூரத்தில் உள்ள வெண்மணி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து தான் தண்ணீர் வருகிறது. 13 கி,மீ தூரம் வருகிற நீர் நேரடியாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஏற்ற முடியாமல், பல நாட்கள் தண்ணீர் தட்டுப்பாடு.


இது குறித்த கோரிக்கை தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த வருடம் இது வரை மழை இல்லை. இதே நிலை நீடித்தால், கோடையில் மிக கடுமையான குடிநீர் பஞ்சம் வரும். இதை எந்த வகையில் தீர்ப்பது, என்பதை மக்கள் கருத்து அறிந்து தீர்க்க தான் இன்றைய மக்கள் சந்திப்பு.

மக்கள் சந்திப்பில்,ஊர் மக்கள் கூடியிருந்தனர்.  பொதுமக்களிடம் நேரடியாக விவாதித்தோம். தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி அமைத்தால் தான், இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற முடிவு எட்டப்பட்டது. அதனை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டோம்.


குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களிடம் அலைபேசியில் பேசி, எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை கேட்டுக் கொண்டு, கூட்டத்திலேயே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ஏழு லட்ச ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தேன்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததில், மக்கள் சந்திப்புக்கு வந்த பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களுக்கும் ஆத்ம திருப்தி, நீண்ட நாள் பிரச்சினையை தீர்ப்பதில். இன்றே மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்.

அந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமப்புற நூலகத்திற்கு பெரியார் களஞ்சியம் 15 பாகங்கள் உடபட 31 புத்தகங்கள் அன்பளிப்பாக, நான் நிர்வகிக்கிற பெரியார் அறிவு மய்யத்தின் சார்பாக வழங்கினேன். புரவலர் நிதியாக ரூபாய் ஆயிரமும் வழங்கினேன்.



#  அடிப்படை பணியோடு, அறிவுப் பணியும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக