பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 28 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 2

வகுப்பின் துவக்கமாக, பயிற்சிக்கு புதிதாக வந்திருந்த ச.ம.உ-க்களுக்கு, பயிற்சி பட்டறையின் நோக்கம் மற்றும் PRS –ன் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.


பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 32 ச.ம.உ-க்கள் வந்திருந்தனர். புதுச்சேரியிலிருந்து 11 பேர் வந்திருந்தனர், பாண்டி மினி சட்டசபை போல் இருந்தது.

அடுத்ததாக ச.ம.உ-க்களின் பொறுப்பு மற்றும் செயற்பாடு குறித்த வகுப்பு. இது நாங்கள் கடந்த பயிற்சியிலேயே கேட்ட பாடம் தான், இருந்தாலும் சில புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

வகுப்பெடுத்தவர் PRS நிறுவனத்தின் இயக்குநர் திரு.மதுக்கர். உலக வங்கியில் பணிபுரிந்து, உலக பொருளாதார அமைப்பால், 2008-ஆம் ஆண்டுக்கன Young Global Leader ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

“ பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், மக்கள் நினைப்பது, அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் அரசியலமைப்புப்படி சட்டமன்ற உறுப்பினரின் கடமை, இயற்றப் படுகிற சட்டங்களை விவாதிப்பது தான்.

தற்போதைய அரசியல் சூழலில், எந்த மாநில சட்டமன்றத்திலும் விவாதங்கள் இல்லாமலே, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப சட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

பதவி உயர்வில், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பு பாராளுமன்ற மக்களவையில் மூன்றரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இது போன்ற வாய்ப்பு சட்டமன்றத்தில் மறுக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சிறப்பான முறையில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்துக் கடிதம் எழுதுகிறார் என்ற தகவலை சொன்னபோது, நானே சிரித்துக் கொண்டேன்.

தமிழக சட்டப்பேரவையில், எங்களுக்கு பேசவே வாய்ப்பு தரப்படுவதில்லை, மீறி பேச முயன்றால் தூக்கி வெளியேற்றப்படுவதை எங்கே சொல்லி அழ...

இதை போன்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்தான வழிமுறைகள் ஆராயப்பட்டன. அவ்வப்போது அனுப்பும் ஆய்வறிக்கைகளை பயன்படுத்திக் கொள்ள கூறினர்.

( தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த ஆய்வறிக்கைகளை, கடந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். )

விவசாயக் கடன் தள்ளுபடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றின் நோக்கம், அதன் பயன்பாடு, தேவையானவர்களை சென்றடைந்த்தா போன்ற விவாதங்கள் நட்த்தப்பட வேண்டும்.

ஆனால் நமது சட்டமன்றங்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. விவாதங்களுக்கான தயாரிப்புகளுக்கான நேரம் இல்லை, சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினாலும் பாராட்டு இல்லை என்ற நிலை தான் நிலவுகிறது.

* சட்டமன்றம் செயல்பட்டாலும், நம் திறனுக்கேற்ப பங்களித்திருக்கிறோமா ?

* எவ்வாறு சிறந்த தலைவர்கள் விவாதத்தை ஏற்படுத்தினார்கள் ?

* நமது கருத்துகளை பதிவு செய்ய வேறு தளம் இருக்கிறதா ?

போன்ற கேள்விகளோடு வகுப்பு முடிவுக்கு வந்தது.

கிடைக்கின்ற வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பிரகாசிப்பது என மற்ற உறுப்பினர்களின் கருத்துகள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.


( தொடரும்...)