பிரபலமான இடுகைகள்

வியாழன், 26 டிசம்பர், 2013

சில நிமிடம் சாண்டா கிளாஸ் ஆன நினைவு...

கிறித்துவ கிராமங்கள் நிறைய, ஆண்டிமடம் சிறு நகரை சுற்றி. வரதராசன்பேட்டை, தென்னூர், கூவத்தூர், கீழநெடுவாய், மேலநெடுவாய், பட்டிணங்குறிச்சி என. அதனால் குடும்ப நண்பர்கள் நிறைய பேர் கிறித்துவர்கள். தவறாமல் கேக் கிடைக்கும், கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்கு. நிறையப் பேர் உறவினர்கள் போலவே.

வீரமாமுனிவர் முதன்முதலில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியது வரதராசன்பேட்டையில் தான். பிறகு ஏலாக்குறிச்சியில் பணியாற்றினார். அப்போது தான் காவலூர் கலம்பகம் நூலை எழுதினார். அப்போது இந்தப் பகுதியில் கல்வியும், மருத்துவமும் மிஷனரிகளால் எல்லோருக்கும் கிடைத்தது.

அப்படி வரதராசன்பேட்டையில் அமைக்கப்பட்டது தான் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி. சென்னையில் இருக்கும் தொன்போஸ்கோ பள்ளியின் குழுமம் தான். இங்கு இடம் கிடைப்பது இன்றைக்கும் சிரமம் தான்.

வரதராசன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் அரசுப்பணியிலும், தென்னூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்திலும் நிறையப் பேர் இருப்பதற்கு காரணம் இந்தப் பள்ளி. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நிறையப் பேர் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும்.

நான் இங்கு ஆறாம் வகுப்புப் படித்தேன், மாணவர் விடுதியில் தங்கி. சில ஒழுங்குமுறைகளுக்கு பழகிக் கொண்டது இங்கு தான், சமூகப்பணி, விளையாட்டு, படிப்பு நேரம், இதர கலையார்வங்கள் என.

அந்த வருடம் கிறிஸ்துமஸ் கோலாகலம். பள்ளி வளாகத்தினுள், புதிய சர்ச் ஒன்று திறக்கப்பட்டது. அதனால் அந்த ஊரில் பிறந்து வெளியூரில் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் குவிந்திருந்தனர். ஊர்மக்கள், மாணவர்களும்.

காலையில் இருந்தே பள்ளியில் விழாக் கோலம். விடுதியில் கூடுதலாக. சிறப்பான விருந்திற்கு பிறகு கலை நிகழ்ச்சிகள். அதன் ஊடாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் வந்து பரிசுப் பொருட்களை கொடுத்தார்கள். என்றும் மறக்காத கிறிஸ்துமஸாக அமைந்தது.

எனக்கு ஒரு சாண்ட கிளாஸ் தன் பையையே பரிசாகக் கொடுத்தார், கூடுதலாக சிலப் பொருட்களுடன். தொப்பியும் கிடைத்தது. அன்றிலிருந்து பள்ளி விடுமுறை. விடியற்காலை கே.ஆர்.வி பஸ்ஸை பிடித்தோம்.

பஸ்ஸில் அந்தத் தொப்பியுடனும், அந்தப் பையுடனும் பயணம். பையிலிருந்த பேனா, பென்சில்கள் சிலவற்றை உடன் வந்த நண்பர்களுக்கு வழங்கி, சில நிமிடம் சாண்டா கிளாஸ் ஆன நினைவு நிழலாடுகிறது, மகிழ்வானத் தருணங்களாக.

# சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், சாண்டா கிளாஸ் ஆவோம். மற்றோரை மகிழ்விக்க !


                             Santa Claus Christmas Wallpaper HD

புதன், 25 டிசம்பர், 2013

எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....

ஆட்டோவில் போகும் போது பார்த்தேன், சாலை ஓரத்தில் ஒரு நாற்காலி. நாற்காலி மேல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படம். மாலை போடப்பட்டிருந்தது. நாற்காலி அருகே பிளாட்ஃபார்ம் மீது ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். கண்களில் லேசான கலக்கம். “விழியே கதை எழுது” கனவுப் பாடலாகக் கூட இருக்கலாம்.

                                                       

.........................................

1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்திராகாந்தியின் மரணமும், எம்ஜிஆரின் உடல் நலக்குறைவும் தேர்தலில் பிரதிபலித்தன. “சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு” கிராமத்து வழக்கில்.

பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். 1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.

இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்.ஜி.ஆரை தீவிரமாக விமர்சித்தவன்.

1987. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்கள். திடீரென ஊரே மயான அமைதி. எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி.

நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். தலைவர் கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.

எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தில், எல்.ஐ.சி அருகே இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் சிலை உடைக்கப்பட்டது. அது குறித்து மறுநாள் தலைவர் கருத்து, “அந்தத் தம்பி நெஞ்சில் தானே குத்தினார், முதுகில் குத்தவில்லையே”

.......................................

அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்.

என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம். “எப்படி தெரியும்பா?” “என்னாப்பா எம்ஜிஆர தெரியாதா?”

ஆட்டோ சிறிது தூரம் சென்றது. பெரிய ஜெயல்லிதா வரவேற்பு டிஜிட்டல் பேனர். கீழே ஏழு,எட்டு நபர்கள். அதிமுக நிர்வாகிகளாக இருக்கலாம். இப்போதே லேசாக வளைந்து தயாராக இருந்தார்கள். கொடநாடு போக ஜெ கார் வரப் போகுது போல. எம்ஜிஆர் காலத்தில் இந்தக் கூன் விழவில்லை, அதிமுகவினருக்கு.

# எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....

உண்மை புரட்சியாளனுக்கு இறுதி மரியாதை

GMT 1042. க்ரீன்வீச் நேரம். இந்திய நேரம் 04.15, காத்திருந்த 21 துப்பாக்கிகள் முழங்கின, இறுதி மரியாதைக்காக.

10.44: பத்து நாட்கள் இறுதி மரியாதைக்கு பிறகு அவரது உடல் அமைதியை நோக்கி... உடல் அடக்கம்.

10.56: ஜெட் விமானங்கள் இடுக்காட்டை வலம் வந்தன, மரியாதை செலுத்த...

11.15: மயானத்திலிருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு வரும் குரல், ஆப்பிரிக்காவின் பாரம்பரியமானது, இறுதி சடங்கிற்க்காக. ஒட்டு மொத்த உலமும் மனதார இறுதி மரியாதை செலுத்தியது.

அது கியூனு கிராமம். தென்னாப்பிரிக்காவின் ஒரு மூலையில் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமம். தென் ஆப்பிரிக்காவின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலாவின் சொந்த கிராமம். இறுதி மரியாதை நெல்சன் மண்டேலாவுக்கு.

                              

--------------------------------------------------------

அதே நாள். சென்னை. அண்ணா அறிவாலயம். மாலை 5.00 மணி, இந்திய நேரம். தி.மு.க பொதுக்குழுவின் மாலை அமர்வு.

இறுதியாக தலைவர் கலைஞர் உரை. பேச்சை துவங்கியவர், மண்டேலாவை குறிப்பிட்டார், “இப்போது இந்தப் பொதுக்குழுவில் காலை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானமாக அமைந்தது, நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து நமது மன வேதனையை வெளிப்படுத்திய அனுதாபத் தீர்மானமாகும்.”

"Honesty, sincerity, simplicity, humility, pure generosity, absence of vanity, readiness to serve others - qualities which are within easy reach of every soul - are the foundation of one’s spiritual life. இதனைத் தமிழிலே சொல்ல வேண்டுமேயானால் நேர்மை, உண்மை, எளிமை, பணிவு, தாராள மனப்பான்மை, தற்பெருமை இன்மை, மற்றவர்க்குச் சேவை செய்யத் தயாராக இருக்கும் மனநிலை ஆகிய குணநலன்களே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படையாகும்”. இது நெல்சன் மண்டேலாவினுடைய வார்த்தைகள்.

அது மாத்திரமல்ல; மேலும் சொல்கிறார். “மாறாததும் மாறுவதும் - வலிமையானதும் வலுவிழந்ததும் - புகழ் மிக்கதும் புகழ் இழந்தது மான முரண்பாடுகள் மிக்க ஆண்களோடும், பெண்களோடும் வாழ்க்கையில் நாம் பழகுகிறோம்; கடவுளர்களோடு அல்ல; நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களுடனேயே நாம் பழகுகிறோம்” இதுவும் நெல்சன் மண்டேலா எடுத்துச் சொன்ன வாசகம் தான்.

“எந்த மண்டேலா அவர்களுக்கு நாம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இங்கே நம்முடைய கண்ணீரைக் காணிக்கையாக்கினோமோ, அந்த மண்டேலா உதிர்த்த வார்த்தைகளை, வாசகங்களை, வழிமுறைகளை, மனித சமுதாயத்தைப் பற்றிய மகோன்னதமான எண்ணங்களை, ஆண்டவனைப் பற்றி அவர் சொன்ன உண்மைகளை, மனதிலே பதிய வைத்துக் கொண்டால் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மாத்திரமல்ல...

அவருடைய கருத்துக்களை, எப்படி பெரியாருடைய கருத்துகளை, அண்ணாவின் எண்ணங்களை நாம் பின்பற்றி நடக்க இன்றைக்கு நம்மைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறோமோ, அதற்குப் பெரும் உதவியாக நான் இங்கே எடுத்துச் சொன்ன இந்த வாசகங்கள், நெல்சன் மண்டேலாவின் வாசகங்கள் துணை புரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதைத் தான் நான் இங்கே உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.”

இது தலைவர் கலைஞர் அவர்கள் பொதுக்குழுவில் மண்டேலா அவர்கள் நினைவாக ஆற்றிய உரை.

--------------------------------------------------------------------

ஒரு பிளாஷ்பேக்...... 1990 பிப்ரவரி 11. திருச்சி தி.மு.க மாநாடு. காலை அமர்வு. மக்கள் வெள்ளம்.

திடீரென தலைவர் கலைஞர் ஒலிவாங்கி முன் வருகிறார். “எல்லையற்ற மகிழ்ச்சியை ஏந்தி வந்துள்ள செய்தி. 27 ஆண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா நாட்டின் கருப்பர் இனத் தலைவன் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு விட்டார்.”

மாநாட்டு பந்தலே திணறியது, கைத்தட்டல் ஒலியில். தலைவர் கலைஞர் கையமர்த்துகிறார், “போதும், போதும்” என கையொலி அடக்க.

பிளாஷ்பேக் சொல்லக் காரணம், இரங்கல் தீர்மானம் மட்டுமல்ல அவர் விடுதலை அடைந்த போதே கொண்டாடியவர் தான் கலைஞர்.

தென்னாப்பிரிக்கர்கள் வாக்குகளோ, மண்டேலா மீது பிரியம் கொண்டவர்கள் வாக்குகளோ தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போவதில்லை.

# கலைஞர் மண்டேலாவுக்கு செலுத்தும் மரியாதை, உண்மை புரட்சிக்கான மரியாதை !

திங்கள், 23 டிசம்பர், 2013

ஜட்ஜாக எனது ஆட்டத்தின் முடிவு இது.

நீதியரசர் ஏ.கே.கங்குலி - ஒரு கட்டுரை வரைக.


                        


முன்னுரை: 

நீதியரசர் ஏ.கே.கங்குலி அவர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவர் 1.கண்டிப்பானவர். 2.நேர்மையானவர். 3.அப்பாவியானவர். 4.வெளிப்படையானவர். 5.உண்மையானவர்.

1.கண்டிப்பானவர்: 

"8000 ஆவணங்களை ஆய்வு செய்திருக்கிறீர்கள். ஆனால் இன்னும் நீங்கள் பறவையை விட்டு விட்டு இன்னும் புதரை தான் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். குற்றம் தெளிவாக தெரிகிறது. சி,பி.ஐ-யால் ரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நடவடிக்கை தேவை.

"எங்களது கேள்வி குறிப்பானது. நீங்கள் ராஜாவை விசாரித்தீர்களா ? இதில் அவரது ஈடுபாடு தொடர் நடவடிக்கைககளால் முழுமையானது"

இப்படி சி.பி.ஐயை வறுத்தெடுத்தார். (26.நவம்பர்.2010). இதன் மூலம் இவர் கண்டிப்பானவர் என்பதை நாம் அறியலாம்.

2.நேர்மையானவர்:

"எப்போதெல்லாம் அரசியலமைப்பு சட்டப் பிரச்சினை அல்லது அரசு கொள்கை பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு வருகின்றனவோ, அப்போதெல்லாம் நீதிமன்றங்கள் உறுதிபடுத்துபவை, அவை எடுக்கின்ற முடிவுகள் அதன் மேல் மக்களுடைய நம்பிக்கையை மேம்படுத்துபவையாக அமையும், 2G உரிமங்கள் ரத்திலும் இந்த பென்ச் அதே போல முடிவு எடுத்திருக்கிறது."

"எல்லா தீர்ப்புகளும் மக்களுடைய நம்பிக்கையை பெற வேண்டும். அதே போல இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறதா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்"

இப்படி 122 உரிமங்களை ரத்து செய்த போது நேர்மையாக தீர்ப்பளித்தார். (2.பிப்ரவரி.2012)

(ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு தீப்பளித்தார் என்ற குற்றச்சாட்டை இங்கு நினைவுக் கொள்ளக் கூடாது)

3.அப்பாவியானவர்:

"என் மீதான குற்றங்களை மறுக்கிறேன். நான் சந்தர்ப்பத்தால் குற்றவாளியாக்கப் பட்டிருக்கிறேன். நான் அதிர்ச்சியடைந்துள்ளேன், நொறுங்கி விட்டேன்."

"என் மீது பாலியல் புகார் அளித்தப் பெண்ணின் சத்தியப்பிரமாணம், உச்ச நீதிமன்றக் குழுவுக்கு முன் அளிப்பது. அது ரகசியமாகக் காக்கப்பட வேண்டியது. எப்படி அது வெளியில் வந்தது ?"

"நான் எங்கு புகார் சொல்வது ? யார் நான் சொல்வதை காது கொடுத்துக் கேட்கிறார்கள் ?"

(இவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை எனபதை இப்போது நினைவு கூறக் கூடாது)

இப்படி அளித்த பதில், அவர் அப்பாவி என்பதை நிரூபிக்கிறது. (16.டிசம்பர்.2013)

4.வெளிப்படையானவர்:

"ஜட்ஜாக எனது ஆட்டத்தின் முடிவு இது. நான் அதை எப்படி விளையாண்டேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நேரான மட்டையால் விளையாண்டேன். நான் எப்படி விளையாண்டேன் என்பதை நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்."

(but I always tried to play with a straight bat, என்பதற்கு தவறான அர்த்தம் கொள்ளக் கூடாது)

"சட்டத்தை நான் அளவான அறிந்திருக்கின்ற வகையில், முன்பு அளிக்கப்பட்டிருக்கின்ற தீர்ப்புகள், சரியான விகிதத்தில் இல்லை"

இப்படி எல்லாம் தன்னுடைய ஓய்வு பெறும் விழாவில் வெளிப்படையாகப் பேசியவர். (2.பிப்ரவரி 2012)

5.உண்மையானவர்:

நீதியரசர் கங்குலி மீது பல தரப்பினரின் கண்டனங்கள் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மனித உரிமை அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குரலும் ஓங்குகிறது. பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை எதிரொலித்திருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும், பத்திரிக்கைகளும் குரல் எழுப்பியுள்ளன.

"நான் எப்படி விளையாண்டேன் என்பதை நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்." என்ற தனது வார்த்தைகளின் படி மற்றவர் தீர்ப்பிற்கு தலை வணங்கி "உண்மையானவர்" என்று நிரூபிப்பாரா என்ற வினா எழுந்துள்ளது.

"விசாரணை செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டவர் "விசாரணைக்கு உட்படுவாரா ?", "நியாயம் கேட்காமல், லைசென்ஸை ரத்து செய்தவர், தன் பதவியையும் அது போல் ராஜினாமா செய்வாரா ?" 

                             
முடிவுரை:

இப்படிப்பட்ட நீதியரசர் "முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்","தன் வினைத் தன்னைச் சுடும்" போன்ற பழமொழிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

சனி, 21 டிசம்பர், 2013

ஏம்பா இவ்வளவு பெரிய லைனா சொன்னீங்க. ..

"சூர்யா project-அ அப்பா கூட உக்காந்து முடிச்சுடு"

பிராஜக்ட்ன உடனே college-ன்னு நினச்சிடாதீங்க. 2 தான். அட +2 இல்லிங்க. ரெண்டாவதுங்க.

"அம்மா நீங்களே முடிச்சுடுங்கம்மா. அப்பாவல்லாம் புடிக்க முடியாது"
"தமிழ் அப்பாவுக்கு தான் சரியா வரும். சோஷியல் நான் வந்துடறேன்"

சரி தப்ப முடியாதுன்னு, ipad-ஐ கீழே வைத்தேன்.

"அப்பா, டைட்டில்ஸ் காந்தி, நேரு, திருப்பூர் குமரன்."

A4 பேப்பரில் அவர்கள் படங்கள் ஒட்டி கோடு போட்டு வைத்திருந்தார். 4, 5 வரிகளில் குறிப்புகள் தயார் செய்ய சொன்னார். நாமே 9, 10 பாரா ஸ்டேடஸ் அடிக்கிற ஆளு. 4, 5 வரியிலன்னு மூச்சு முட்டிடுச்சி.

                                    

தயார் செய்து கொடுத்தேன். ஜவகர்லால் நேரு, திருப்பூர் குமரன் எழுதி முடித்தார். மகாத்மா காந்தி எழுதிக் கொண்டிருந்தார். "அப்பா இன்னும் ஒரு கோடு பாக்கியிருக்கு. இன்னும் கொஞ்சம் சொல்லுங்க"

"இந்திய நாடு ஆங்கிலேயர்களால் அடிமைப் படுத்தப் பட்டிருந்தது. மகாத்மா காந்தி அறவழியில் போராடி விடுதலை பெற்று தந்தார். மகாத்மா இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்."

யோசிச்சி அடுத்த வரியை சொன்னேன். "காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது"

எழுதும் போதே முனகினார். "ஏம்பா இவ்வளவு பெரிய லைனா சொன்னீங்க. கஷ்டப்பட்டு நெருக்கி எழுத வேண்டியதா இருக்குப் பாருங்க."

"இல்லப்பா, நானே உலக அமைதி நாளா கொண்டாடுறத விட்டுட்டு ஷார்ட்டா தான் சொன்னேன்"

"பாரா பாராவா ஸ்டேட்ஸ் போடும் போதே தெரியும். அதுக்கு வேற லைக் போடுறாங்க. அதே மாதிரி லெங்க்த்தா இருக்கு"

# எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு தெரியுது !

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இசை இடைவெளியை நிரப்புவாரா இமான் ?

தோசைக் கல் சூடாகி விட்டதா என பார்க்க தண்ணீர் தெளித்தால், சொய் என்று ஓசை வரும். அதே போல "சொய் சொய்" பாடல் வந்தப் போதே தமிழ் திரையுலகம் சூடாகி விட்டது. நீண்ட நாள் காத்திருந்த "கையளவு நெஞ்சங்களில் கடலளவு இடம்" பிடித்தார் இமான்.

                                

மெல்ல இமான் பக்கம் பார்வைகள் திரும்பின. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்கள் நிறைந்திருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சம் நிறையவில்லை. இளையராஜாவுக்கு பிறகு கிராமத்து இசையை ரசிக்கக் கொடுப்பதில் ஒரு தேக்கம் தான்.

இமான் நடிகர் விஜயின் "தமிழன்" படத்தில் தன் இசைப் பணியை துவக்கியிருக்கிறார். அதற்கு பிறகு வருடம் இரண்டு, மூன்று படங்கள் என தன் இருப்பை நிலை நிறுத்தி வந்தவர் "மைனா"வில் தன் வித்தியாச இசை மூலம் இறக்கை கட்டினார். "மனங்கொத்தி பறவை"யில் மறுபடியும் பறந்தார்.

"கும்கி"யில் தான் மக்கள் மனதை, கரும்பு வயலில் புகுந்த யானையாக துவம்சம் செய்தார். "ஒன்னும் புரியல", "அய்யய்யோ ஆனந்தமே", "சொல்லிட்டாளே", " நீ எப்போ புள்ள" என எல்லாப் பாடல்களுமே ஹிட். மலையை களமாகக் கொண்ட படத்தில் பிண்ணனி இசையில் நமமை அங்கேயே வாழ வைத்தார்.

அடுத்தப் படம் "சாட்டை". பள்ளிக்கூடத்தில் நடைபெறும் கதை. இசைக்கு எங்கே ஸ்கோப் என்று நினைக்க முடியாத அளவிற்கு பாடல்களும் அருமை, பிண்ணனி இசையும் அருமை. அதிலும் கேரக்டர்களுக்கு ஏற்றவாறு வித்தியாச இசை.

தொடர்ந்து "தேசிங்குராஜா". மீண்டும் எல்லாப் பாடல்களும் ரசிக்கத் தக்க அளவில். "பாம், பாம்" வித்தியாசமாக. "நெலா வட்டம் நெத்தியிலே" சரியான குத்துப்பாடல். "அம்மாடி, அம்மாடி" சிறந்த மெலோடி. நல்ல வெரைட்டி.

மொத்த தமிழ் நாட்டையும் "வருத்தப்படாத வாலிபர் சங்க"த்தின் உறுப்பினர்களாக ஆக்கியதில் இமானின் பங்கு பெரிது. எல்லோரையுமே இளைஞர்களாக்கி, "இந்தப் பொண்ணுங்களே, ஊதாகலரு ரிப்பன்" என்று பாட வைத்தார், தாளம் போட்டுக் கொண்டு. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்று முணுமுணுக்காத வாய் உண்டா ?

                  

அடுத்து "பாண்டியநாடு" படையெடுப்பு. "டையரே, டையரே" பாடலில் கிராமத்து இசையில் குத்தி எடுத்து விடுகிறார். "ஃபை ஃபை கலாய்ச்சிஃபை" பாடலில் இளமைத் துள்ளல். "ஏலே மருது" மெலோடி. "ஒத்தக்கட ஒத்தக்கட மச்சான்" நம்மை ஆட வைக்கும்.

ஒத்தக்கட -ல் ஒரு இசைக் கருவியை தனியாக இசைப்பார்," ஃப ஃபா", என்ற ஓசை இடையில் வரும். அது நம்மை சுண்டும். கவனிக்காதவர்கள், இனி கவனிக்கவும். ஒவ்வொரு பாடலிலுமே, இதே போன்று ஒரு தனி நச். இந்த வித்தியாச முயற்சிகள் தான் ஒரு இசையமைப்பாளரின் தனி முத்திரை.

முயற்சி எடுத்து இதே போன்று இமான் தொடர்ந்தால், இந்த வெற்றிகள் தொடரும்.

# ஒத்தக்கட ஒத்தக்கட மச்சான், இவன் ரெண்டு கண்ணையும் இசை மேல வச்சான்...

                         

அதிகார போதை ஒரு நாளும் தன்னை தீண்டாமல் ...

அது 2007 உள்ளாட்சி மன்ற தேர்தல் நேரம். பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அன்றைய நிதித்துறை அமைச்சர். அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதற்கு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. 

அரியலூர் வந்து ஓய்வு எடுத்து விட்டு பிரச்சாரம் செய்வது போல் திட்டம். அந்த நேரத்தில் அரியலூரில் அமைச்சர்கள் தங்கும் அளவிற்கு, லாட்ஜ்கள் கிடையாது. அரசினர் விருந்தினர் இல்லங்களில், அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் தங்க தடை.

அதனால் அரியலூருக்கு அருகே உள்ள தனியார் சிமெண்ட் ஆலையின் கெஸ்ட் ஹவுஸில் தங்க அனுமதி கேட்டோம். ஒப்புக் கொண்டனர். வருகைக்கு முதல் நாள் அறையை பார்த்து ரெடி செய்ய போனோம். திடீரென அறைகள் காலி இல்லை என கைவிரித்தனர்.

அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு பேசிப் பார்த்தோம். "வட இந்தியாவிலிருந்து ஆலைப் பராமரிப்பிற்கு வந்த பொறியாளர்கள் தங்கியுள்ளனர். ஒரு அறையும் காலி இல்லை" என்று சொல்லி விட்டனர். என்ன செய்வது என்று புரியாத நிலை.

பேராசிரியருக்கு தகவல் கொடுத்தோம். ஒன்றும் பிரச்சினை இல்லை, பிரச்சார நிகழ்ச்சிக்கு நேரே வருகிறேன் என்று தெரிவித்து விட்டார். அதே போல் நிகழ்ச்சிக்கு நேராக வந்தார். நாங்கள் வருத்தம் தெரிவித்தோம்.

"இதுல என்னய்யா இருக்கு. அவன் ரூம் இல்லன்னு சொன்னா நீங்க என்ன பண்ண முடியும் ? அவங்ககிட்டயும் ரூம் இல்லன்னா, என்ன பண்ணுவாங்க. நான் வர்ற வழியில கார நிறுத்தி முகத்த கழுவிகிட்டு வந்துட்டன். விடுங்கய்யா" என்றார்.

அவர் முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். கலெக்டரை அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதும், குவாரியில் இருந்து ஒரு பிடி சுண்ணாம்புக் கல் போகாமல் தடுக்க முடியும், ஃபேக்டரியே ஓடாது. ஆனால் அவருக்கு அந்த சிந்தனையே கிடையாது.

அதிகாரம் என்பது போதை போன்றது. ஆனால் அது ஒரு நாளும் தன்னை தீண்டாமல் பார்த்துக் கொண்டவர். அதிகாரம் தவிர்த்து, என்றும் எளிமையாக இருந்து பழகிக் கொண்டவர். அவரது நீண்ட பொதுவாழ்வில் அவரது மாறாத அடையாளம் எளிமை.


                  

 92-வது பிறந்தநாள் காணும் இனமானப் பேராசிரியரை போற்றி வணங்குவோம்.

# அரசியலில் மிளிர நினைப்பவர்களுக்கு அவரது எளிமை ஒரு முன்மாதிரி !

புதன், 18 டிசம்பர், 2013

நிகழ்கையில் சாரல், நினைக்க நினைக்கத்தான் மழை !

ஒரு கார் வந்து நின்றது. யார் இறங்குகிறார்கள் என்று பார்ப்பதில் எங்கள் பேச்சு தடைபட்டது. அது சேலம். அண்ணன் ஈசன் இளங்கோ அவர்களின் ஷோரூம். வந்தவர் தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை.

எங்களுக்கு ஆச்சரியம். வரவேற்றோம். எனக்கு அறிமுகம் கிடையாது என்பதால், இளங்கோ என்னை அறிமுகப்படுத்தினார். அரசியல்வாதி என்று தெரிந்த உடன் அவரிடத்தில் சிறு தயக்கம். நான் மேலே ஓய்வுக்கு செல்கிறேன் என்று சென்று விட்டார்.

அவர் ஆழ்ந்த தமிழ் பற்றாளர். கவியுலகில் நீண்ட அனுபவம். திரையுலகிலும் பங்கு உண்டு. ஆனால் வர்த்தகத்திற்கு இரையாகாதவர். சிறுகதை, கட்டுரைகள் என தொடர்ந்து பத்திரிகைகளில் பிரகாசிப்பவர். தீவிர ஈழ உணர்வாளர். எங்களுக்கு பக்கத்து ஊர்காரர்.

அவரிடம் விடை பெறலாம் என்று மாடிக்கு சென்றேன். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். "உங்களைப் பற்றி இப்போது தான் சொல்லிக் கொண்டிருந்தார்" என்று உடன் வந்திருந்த தோழரைக் காட்டினார்.

எங்களையும் அமர சொன்னார். பேச்சு வளர்ந்தது. நான் நக்கீரனில் எழுதிய சட்டமன்ற விமர்சனத்தைக் காட்டினேன், மகிழ்ந்தார். "இன்னும் எழுதலாமே" என்றார். நான் முகநூல் பதிவுகள் சிலவற்றைக் காட்டினேன். "அட, அவ்வளவு தான். லேசாக மாற்றி எழுதினால், சிறுகதை" வாழ்த்தினார். சில இடங்களை சுட்டி, ஒற்றுப் பிழைகளை தவிர்க்கச் சொன்னார்.

தன்னுடைய கேமராவைக் காட்டினார். கிராமத்து வீடு ஒன்றில் இருந்த மண்ணாலான நெல் குதிர் ஒன்றை படம் எடுத்திருந்தார். "இது அருகி விட்டது. இவற்றை நாம் பதிவு செய்ய வேண்டும். இந்த படங்களை எடுப்பதற்காகவே, இன்றைய எனது பயணம் இரண்டு மணி நேரம் நீண்டது"

"நீங்கள் கிராமங்களில் அதிகம் பயணம் செய்கிறவர். இது போன்றவற்றை படம் எடுத்து, முகநூலில் பதிய வேண்டும்" என்றார். நான் என் கேமராவைக் காட்டினேன். மலையேறும் போது எடுத்த ஆலம்பழம், ஆவாரம்பூ, விளக்குத்தூண் படங்களைக் காட்டினேன். உற்சாகமாகி விட்டார்.





உட்கார வைத்து, தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு இலக்கியப் பொழிப்புரையை படித்துக் காட்டினார். பழம் இலக்கியத் தொடர்பானது. அதில் இன உணர்வு பொதிந்திருப்பதை கேட்டு மகிழ்ந்தோம். அதை நான் உணர்ந்தேன் என்பது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

அடுத்தப் பகுதியைப் படித்தார். சங்ககாலத்தில், பறை அறைந்து "அனைத்து" தமிழர்களும் மகிழ்ந்ததை எழுதியிருந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் நான் பறை அடித்தப் புகைப்படத்தைக் காட்டினேன். மகிழ்ச்சியானார். அனைத்து விதத்திலும் அவர் உணர்வை ஒட்டி வருவதாக நினைத்திருப்பார் போலும். முதலில் பார்த்தத் தயக்கம் இப்போது முற்றிலும் விலகியிருந்தது.

கேமரவை கையில் எடுத்தார். அறைக்கு வெளியே அழைத்து வந்தவர், என்னை நிற்க வைத்துப் புகைப்படங்கள் எடுத்தார். இதில் சிறந்தவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அருமையான புரொபைல் படங்கள்.

                               

அவ்வளவு பெரிய ஆளுமை குழந்தையாய் பழகினார். எனக்கு வாழ்நாள் மகிழ்ச்சி. சிறந்த இலக்கிய அனுபவம்.

அவர் அண்ணன் அறிவுமதி. அவருடனான சந்திப்பை சொல்ல, அவரது "மழைப் பேச்சு" தான் உதவிக்கு வருகிறது.

                                 

# நிகழ்கையில் சாரல், நினைக்க நினைக்கத்தான் மழை !

செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஒரு தாயின் பனிக்குடத்தில் இருக்கிற குழந்தை ....

அண்ணா சாலை திமிலோகப்பட்டது. வாகனங்கள் உள்ளே நுழையவே இடம் இல்லை. நாங்கள் சாலையிலேயே இறங்கி உள்ளே சென்றோம். கலைஞர் அரங்க வெளியில் மாநாட்டுக்கு வந்தவர்கள் போல் கூட்டம்.

இந்தப் பொதுக்குழுவிற்கு கலந்துக் கொள்ள வந்தவர்களை போல், கூடுதலாக வந்தவர்கள் இன்னொரு மடங்கு இருக்கும். அவர்களுக்குத் தெரியும், நமக்கு உள்ளே அனுமதி கிடையாது, வெளியில் மரத்தடியில் தான் நிற்க வேண்டும் என. 

இருந்தாலும் ஆர்வம், யாருடன் கூட்டணி, இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா என, முகநூல் நண்பர்களை போலவே. அதைவிட ஊடகங்கள். உள்ளூர் ஊடகங்களில் இருந்து, தேசிய ஊடகங்கள் வரை.

                       Photo

உள்ளே பொதுக்குழு உறுப்பினர்களிடமும் தேர்தல் முடிவிற்கு காத்திருக்கிற உணர்வு. முதலில் மண்டேலா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவினர் கலவரம் காரணமாக உயிரிழந்த தோழனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல் முதல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றி முடிந்ததும், தலைவர் கலைஞர் மைக்கைப் பிடித்தார். "யாருக்காவது இந்தத் தீர்மானங்களில் வேறு கருத்து இருந்தால், எதிர்ப்பு தெரிவிக்கலாம்"

ஒரு கட்சியில் இப்படிப் பட்ட கேள்விகளே கேட்கப்படாது. இன்னும் சில கட்சிகளில், தவறி இப்படிக் கேட்டு விட்டால், கூட்டம் நடந்த மாதிரி தான். அது தான் கழகம், அவர் தான் கலைஞர்.

பிறகு கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவராக மேடை ஏறினர், பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து, முன்னாள் அமைச்சர்கள் வரை. புகழ்ச்சி உரைகள் கிடையாது.

காங்கிரஸோடு கூட்டணி வைக்கக் கூடாது என சிலரும், பா.ஜ.கவோடு கூட்டணி வைக்கக் கூடாது என சிலரும், இரண்டு பேரும் வேண்டாம் என சிலரும் வாதங்களை எடுத்து வைத்தனர். கொள்கைபரப்பு செயலாளர் அண்ணன் சிவா பேச்சு டாப், மிகத் தெளிவாக, பாயிண்ட் பை பாயிண்டாக.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் மாலை பொதுக்குழு கூடியது. கழக முன்னோடிகளின் கருத்துகளுக்குப் பிறகு தளபதி அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். "தேர்தல் கூட்டணியை முடிவு எடுக்கும் அதிகாரம் தலைவர், பேராசிரியருக்கு வழங்கப்பட்டது"

தளபதி, பேராசிரியர் உரைகளுக்குப் பிறகு தலைவர் உரை. தேர்தல் கூட்டணிக் குறித்து பேச துவங்கியவர், மண்டேலாவை நினைவு கூர்ந்தார். சரியாக மண்டேலாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிற நேரத்தில், அவரது புகழை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

                         

மோடியின் வருகை, அதற்கு ஊடகங்களின் ஆதரவு எல்லாவற்றையும் குறிப்பிட்டு, சிலர் அதற்கு அதிர்ச்சியாகி இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது என்ற போது தான் அவரது கவனிப்பின் கூர்மை வெளிப்பட்டது.

வாஜ்பாய் அவர்கள் குறித்து பேசிய போது, வாஜ்பாய் மீது அவர் கொண்டிருக்கின்ற மரியாதையும், அன்பும் வெளிப்பட்டது. வாஜ்பாய் காலத்து பா.ஜ.க அல்ல, இப்போது இருப்பது என புள்ளி வைத்தார்.

"நன்றி மறந்த காங்கிரசின்" என்று தலைவர் ஆரம்பிக்கும் போதே, கைத்தட்டல் ஓங்கி எழ ஆரம்பித்தது. "ராஜாவிற்கு ஏற்பட்ட சோதனை, அடக்குமுறை, சங்கடம், அந்தக் களங்கம் ஆகியவை காங்கிரஸால் ஏற்பட்டது என்பதை அறியாதவர்கள் அல்ல" என்ற போது உச்சமடைந்தது.

"நீ இருக்க, தம்பி, நான் எதற்காக கவலைப் பட வேண்டும் ?" என்ற தலைவரின் வரிகள் கழகத்தோழர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. தலைவரின் உரை கழகத்தினருக்கு ஊட்டிய புத்துணர்ச்சியோடு, பொதுக்குழு நிறைவுற்றது.

அண்ணன் ராசா மேடைக்கு வந்தார். மனம் நெகிழ்ந்தவராக, தலைவரை வணங்கினார். புன்னகையோடு தலைவர், அழைத்து அருகில் நிற்க சொன்னார். பத்திரிக்கையாளர்களின் கேமராக்கள் மின்னிண. 


                       

திகாரிலிருந்து விடுதலையாகி வந்த போது அண்ணன் ராசா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது,"ஒரு தாயின் பனிக்குடத்தில் இருக்கிற குழந்தை எவ்வளவு பாதுகாப்பாக இருக்குமோ, அவ்வளவு பாதுகாப்பாக தலைவரின் கரங்களில் உணர்கிறேன்"

# கழகமும், கழகத் தோழர்களும் அதே பாதுகாப்பு உணர்வோடு.....

திங்கள், 16 டிசம்பர், 2013

"நெஞ்சுக்கு நீதி" ஆறாம் பாகம் வெளியீட்டு விழா

அண்ணா அறிவாலயம்.

தலைவர் கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி" ஆறாம் பாகம் வெளியீட்டு விழா. 
அண்ணன் ஆ.ராசா அவர்களுடன் அரங்கில் நுழைகிறோம். உள்ளே நுழைந்து நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டே இருக்கும் போதே மூன்றாவது கண் சிமிட்டுகிறது. ஜெயின் கூபி புகைப்படம் எடுக்கிறார்.

"முத்தமிழே நீ வாழ்க, மூவேந்தே நீ வாழ்க" தலைவர் கலைஞர் அரங்கினுள் நுழைந்துவிட்டார். ஒட்டு மொத்த அரங்கும் எழுந்து ஆராவரிக்கிறது. உடன்பிறப்புகளை நோக்கி கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். தங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து கையசைத்ததாக உற்சாகம்.

                         

செய்தி வாசிப்பாளர் ஜெயஶ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கியது. தமிழ்தாய் வாழ்த்து. தளபதி ஸ்டாலின் அவர்கள் மேடையில் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

                        


நீதியரசர் கோகுல கிருஷ்ணன் முதல் பிரதியை வெளியிட கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்டவர்கள தலைவர் கலைஞரிடத்தில் நேரடியாகப் புத்தகத்தை பெறறுக் கொண்டோம்.

வழக்கம் போல் வரிசையில் நான் கடைசி. அதற்குள் புத்தகத்தை பெற்று அண்ணன் தங்கம்.தென்னரசு கீழே வந்து விட்டார். "நீதியை முதலிலேயே பெற்று விட்டீர்களா ?" என்றேன். " நாங்கள் பெற்றது போக 'மீதி' உங்களுக்கு கிடைக்கும்"என்றார்.

அண்ணன் துரைமுருகன் வரவேற்புரை. "வழக்கமாக கலைஞரின் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு நான் தான் வரவேற்புரை" என்று துவங்கியவர் கலைஞரின் பன்முகத் தன்மையை தன் பாணியில் "பார்த்தால் அரசியல்வாதி, கொஞ்சம் திரும்பினால் கவிஞர், கொஞ்சம் திரும்பினால் வசனகர்த்தா..." என அடுக்கினார்.

                         

நீதியரசர் கோகுலகிருஷ்ணன் வாழ்த்துரை,"கலைஞர் குறித்து கண்ணதாசன் அவதூறாக எழுதிய போது, வழக்கு தொடுத்தோம். நான் தான் வழக்கறிஞர். நீதிமன்றத்திற்கு வந்த கண்ணதாசன் மன்னிப்பு கேட்டார். கலைஞர் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தார். இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாடறியும்"

                         

வைரமுத்து தனக்கேயுரிய பாணியில் நெஞ்சுக்கு நீதி நூல்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் துவங்கினார். முப்பது நிமிடம் பேசினார். "கலைஞர் அய்ம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் மனநல மருத்துவராக இருக்கிறார். மனநலம் குறைந்து டாக்டரை பார்த்தால், ஃபிரியாக இருங்கள், புறம் பேசுங்கள் என்கிறார். இங்கே இருப்பவர்கள் அவரை வாழ்த்தி மனநலமாக இருக்கிறோம். வெளியே சிலர் அவரை புறம் பேசி நலம் பெறுகிறார்கள், ஊடகத்தில், பத்திரிக்கையில், செல்போனில்"

                        

உடல் நலம் பெற்று முதல் நிகழ்ச்சியாக பங்கேற்ற பேராசிரியர் அவர்கள் வழக்கம் போல் தமிழ் நதியாய் பாய்ந்தார். "கலைஞரும் நானும் இருபது வயதில் சந்தித்தோம். அப்போது அவர் இளைஞர், நான் அப்போதே என்னை பேராசிரியராக என்னைப் எண்ணிக் கொண்டவன். இப்போது இருவருக்குமான உறவு. அவர் தமிழ் என்றால், நான் தமிழ் பற்றாளன். அவர் இயக்கம் என்றால், நான் தொண்டன். அவர் வழிகாட்டி என்றால், நான் பின் தொடர்பவன். என்னை விட இளைஞராக இருப்பதால் வழிகாட்டி" என்ற போது அவையே இளக்கம்.

                       

அது கலைஞர் பேசத் துவங்கும் போது தெரிந்தது, நா தழுதழுத்து ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. "என்ன பேசுவது என்றே தெரியவில்லை" என்றார். பேராசியரை விளிக்கும் போது "அண்ணா இல்லாத இடத்தில், எங்களை வழி நடத்தும் இளைய அண்ணனே" என்ற போது நெகிழ்ச்சி.

                      

ஆனால் அடுத்த வரியிலேயே ஃபார்ம்-க்கு வந்துவிட்டார். "விரைவில் உங்கள் முன் நான் நிற்பேன். இது நான் கொடுக்கும் உறுதி மொழி அல்ல. பேராசிரியருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் கொடுத்த உறுதி மொழி"

எமர்ஜென்சிக்கு ஆதரவு இல்லை என்றால் ஆட்சி கலைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் எச்சரித்தும், மீறி எதிர்த்து ஆட்சியை இழந்த சம்பவத்தை விவரித்தார்.

விடுதலை புலிகளுக்கு ரகசியங்களை சொன்னதாக சொல்லி, 1991ல் ஆளுநர் பரிந்துரை இல்லாமல், அன்றைய பிரதமர் சந்திரசேகராலும், ஜனாதிபதி வெங்கட்ராமனாலும் ஆட்சி கலைக்கப்பட்ட நிகழ்வை கூறினார்.

"அய்ந்தாம் பாகம் வெளியிட்ட போது, இயற்கை அனுமதித்தால் அடுத்த பாகம் வரும் என்று சொன்னேன். இப்போது இயற்கை அனுமதித்தால் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் பாகம் வரும்" நிறைவு பன்ச்.

வாழ்க கலைஞர், வளரட்டும் நீதி !

வெள்ளி, 13 டிசம்பர், 2013

பிரியமானவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருக்கிறோம்....

ஏற்காடு தேர்தலுக்கு கிளம்புவதற்கு முதல் நாள் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. எனது கல்லூரி நண்பர் வாசுதேவன். நான்கு ஆண்டுகள் ஒரே வகுப்பறையில் இருந்தவர்கள் என்பதை விட நெருக்கமானவர்கள் பட்டியலில் உள்ளவர்.

"சிவா, தேர்தலுக்கு போகும் போது சேலத்தில் தங்க ஏற்பாடுகள் செய்ய சொல்லியுள்ளேன். எனது பள்ளித் தோழன் எழில், எனக்கு மிக நெருக்கமானவான். உன்னை சந்திப்பான். உன் எண்ணைக் கொடுத்துள்ளேன். அவசியம் சென்று வர வேண்டும்."

அதே போல் எழிலிடம் இருந்து ஃபோன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்து சொந்தத் தொழில் செய்பவர். அன்று தான் முதன்முதலில் பேசினோம். ஆனால் நீண்ட நாள் நண்பர் போல் பேச்சு நீண்டது. காரணம் ஒரே வயது, ஒரு பொது நண்பர் என்பதைத் தாண்டி ஒரே ரசனை பல விஷயங்களில்.

அதைத் தாண்டி என்னை முகநூலிலும் தொடர்ந்திருக்கிறார். "வீரபாண்டியார் இல்லத்தில் ஒருவரை நீங்கள் சந்தித்தது நினைவிருக்கும் என நினைக்கிறேன். அவர் என் சகோதரர் ஈசன் இளங்கோ."

சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் வீரபாண்டியார் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரை சந்தித்தேன். காத்திருந்த அய்ந்து நிமிடத்தில் பேசிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தனது தொழில் நிறுவனத்தின் ஒரு கிளை திறப்பு விழா அழைப்பைக் கொடுக்க வந்திருந்தார். "உங்கள் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன், வாழ்த்துக்கள்" என்று உற்சாகப்படுத்தினார்.

                  

ஏற்காடு பணியால், தேர்தல் முடிந்து மறுநாள் தான் இருவரையும் சந்தித்தேன். பல சப்ஜக்ட்டுகளில் பேச்சு விரிந்தது. அவர்களது தந்தை அரசியலில் இருந்து, இவர்களும் தொடர்பவர்கள். அப்போது ஒரு முக்கிய விருந்தினர் வந்தார். எதிர்பாராத இன்ப நிகழ்வாக அமைந்தது. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமை.

இலக்கியம், திரை, இசை என பல்துறை நண்பர்கள் இவர்களுக்கு. இவர்கள் வீட்டு மாடியில் ஒரு நந்தவனம். அதை ஒட்டி ஒரு அறை. அதில் ஓர் கயிற்றுக் கட்டில் என ரசனையான ஓய்வறை. இந்த அறை அந்த நண்பர்களுக்கானது. படைப்புலகம்.


                   

அடுத்து ஈசன் இளங்கோ சொன்ன செய்தி.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பாக சேலத்தில் நடந்த கழக மாநாட்டின் திறப்பாளராக உங்கள் தந்தை எஸ்.சிவசுப்ரமணியன் கலந்துக் கொண்டார். அப்போது மாநாட்டுக்கு முதல் நாள், இளைஞரணியில் இருந்த நான் உங்கள் தந்தையை எனது பைக்கில் உட்கார வைத்து, அழைத்து சென்று மாநாட்டு ஏற்பாடுகளை சுற்றிக் காட்டினேன்.

அதற்கு பிறகு உங்கள் தந்தையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் குறித்த செய்திகளை தெரிந்துக் கொள்வேன். பிறகு உங்களை குறித்த செய்திகளையும் தெரிந்துக் கொள்வேன். இப்போது இப்படி வாசு மூலம் நண்பர்களாக இணைந்து இருக்கிறோம்." .

# பிரியமானவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருக்கிறோம்....
 

வியாழன், 12 டிசம்பர், 2013

தியேட்டரே தீ பிடித்தது போல் ஆகிறது....

அந்தக் காட்சியை பார்த்ததிலிருந்து, அந்த டிரஸ் எடுக்க வேண்டும் என்ற உந்தல். அவர் அந்த சேரில் உட்கார்ந்து மெல்ல தலையை உயர்த்தி, புகையை வெளிவிடும் காட்சி. சந்தன நிற சட்டை, டார்க் மஸ்டர்ட் கலர் பேண்ட்.

                               Download Annamalai Songs

பத்துக் கடை ஏறி, இறங்கி தேடி, துணி எடுத்துத் தைத்து, அதற்கேற்ற ஷூ எடுத்து போட்டு, அந்தக் காரிடரில் அவர் நடக்கும் நடையை நடந்துப் பார்த்து, அப்படியே இமிடேட் செய்து. அது அந்தத் தலைமுறை. அந்தப் படம்...

பெங்களூரு. ஶ்ரீராம்புரா. சுஜாதாவா, தேவியா எந்தத் தியேட்டர் என்று நினைவில்லை. முதல் நாள், முதல் காட்சி. ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். டைட்டில் போட்டவுடனேயே விசில் பறக்கிறது.

பெயர்கள் ஒடி முடிகின்றன. அந்த பிரபல எவர்கிரீன் நண்பர் தோன்றுகிறார். அவரது உதவியாளர் அன்றைய நிகழ்ச்சிகளை சொல்கிறார். அன்று மாட்டுப் பொங்கல் என்று தெரிகிறது. தனது அத்தனை நிகழ்ச்சிகளயும் ரத்து செய்கிறார்.

அவரது தந்தை அழைத்து மந்திரியை பார்க்க சொல்கிறார். மறுக்கிறார் மகன், நண்பனை பார்க்கப் போகிறேன் என்கிறார். "மந்திரிய போய் பார்ரான்னா, மாட்டுக்காரனப் போய் பார்க்க போறேங்கிற...." எகிறுகிறார் தந்தை. "என்ன உயிருக்கு உயிரா நேசிக்கிற ....... தான் முக்கியம்". கட்.

கேமரா திரும்புகிறது. ஒரு உற்சாகக் கும்பல் மாட்டை துரத்திக் கொண்டு ஓடுகிறது. தேவாவின் இசையில் சூடு பிடிக்கிறது. அவரின் பின்புறம் தெரிகிறது. தியேட்டர் கொதி நிலைக்கு வருகிறது. கையை தலைக்கு பின்புறமாகக் கட்டி ஏகாந்தமாக நிற்கிறார்.

இசைக்கேற்ப அவரது கால்கள் தாளமிடுகின்றன, ரசிகர்கள் காலும். வானத்தில் பறந்து வருகிற மேளம் சரியாக அவர் கையில் லேண்ட் ஆகிறது. ஸ்லோமோஷனில் அவர் தலை நிமிர்கிறது. மெல்ல சிரிக்கிறார். தியேட்டர் உற்சாகமாகிறது.


                        

கண்ணை சிமிட்டுகிறார். தியேட்டரில் மின்னல் அடிக்கிறது. "வந்தேண்டா பால்காரன், அடடா பசு மாட்டப் பத்தி பாடப் போறேன்" தியேட்டர் ஆரவாரத்தில் வெடிக்கிறது. தியேட்டரே தீ பிடித்தது போல் ஆகிறது.

இனி ஒரு படம் அவருக்கும் அப்படி அமையாது. இனி ஒரு நடிகருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இனி ரசிகர்களும் அப்படி இருப்பார்களா என்பதும் சந்தேகம் தான்.

# ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஒரே சூப்பர் ஸ்டார் தான்.

அப்டேட்டா இருக்கனும்னா, அல்லாத்தையும் தான் படிக்கனும்

"சார், இப்போலாம் வாசகர் கடிதம்லாம் யாராவது படிக்கிறாங்களா ?"
"உண்மை தான். முன்ன மாதிரி படிக்கிறதில்ல தான். ஆனாலும் படிக்கிறாங்க, காரணம் சில சமயம் புத்தகத்தோட வாசகர் கடிதங்கள் சுவாரஸ்யமா அமைஞ்சிடுது"
"அப்டேட்டா இருக்க, எந்தப் பத்திரிக்கையை படிக்கனும் சார்"
"அப்டேட்டா இருக்கனும்னா, அல்லாத்தையும் தான் படிக்கனும்"

இப்படி ஒன் லைனரா அடிச்சி எறிஞ்சார் அவர், மெட்ராஸ் பாஷையில். அவருக்கான பாராட்டு விழா அது.

வழக்கமா இலக்கியம் சார்ந்த பாராட்டு விழான்னா, கவிஞர், எழுத்தாளர்களுக்கா இருக்கும். இது முற்றிலும் வித்தியாசம், 35 வருடமாக பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதும் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு.

                    

                           


யுவகிருஷ்ணா, கே.என்.சிவராமன், நரேன் மூவரும் சேர்ந்து 'lips' அமைப்பை ஏற்படுத்தி முதல் நிகழ்ச்சி இது தான். திரும்ப கைமாறு செய்ய இயலாதவர்களுக்கு விழா நடத்துவதே சிறப்பு. அந்த வகை இது. சத்தியநாராயணனால் நன்றிக் கடிதம் மட்டுமே எழுத இயலும்.

பனுவல் புத்தக நிலையத்தில் நடை பெற்றது. குங்குமம் முதன்மை ஆசிரியர் முருகன் அவர்களும், பொதுவுடைமை எழுத்தாளர் ஜவகர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். சத்தியநாராயணன் தன் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

"ரேடியோவுல நேயர் விருப்பம் கேட்க முதல்ல எழுதிப் போட்டேன். மதகடியில ஒக்காந்து ரேடியோ கேப்போம். நம்ம பேர சொல்லும் போது சந்தோஷம். அப்புறம் பத்திரிக்கைகளுக்கு எழுதிப் போட ஆரம்பிச்சேன். அதற்காக படிக்க ஆரம்பித்தேன். லைப்ரரியில் இருப்பதை எல்லாம் படித்தேன்."

                           

"கலைஞர் குறளோவியம் எழுதிகிட்டிருந்தார். மிசா அமல்படுத்தப்பட்டது. பின்னொரு சந்தர்ப்பத்தில் குறளோவியம் தொடருமா என்று கலைஞரிடத்தில் கேட்ட போது, நெருக்கடி நிலையால் எழுதியவைகளும் குறிப்புகளும் தொலைந்து விட்டது, கிடைத்தால் தொடர்வேன் என்று சொல்லியிருந்தார்.

நான் பத்திரிக்கையில் வந்த குறளோவியத்தை சேர்த்து வைத்திருந்தேன். அதை கொண்டு போய் கொடுத்தேன். கலைஞர் என்னை உட்கார வைத்து, காபி கொடுத்து, நன்றி சொல்லி பெற்றுக் கொண்டார். குறளோவியம் தொடர்ந்தார்" என அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

விழா நிறைவாக அவருக்கு புத்தகம் பரிசளித்தார்கள். இன்னொரு பரிசு சிறப்பானது. வந்திருந்தவர்களுக்கு அவரது முகவரியிட்ட அஞ்சல் அட்டை வழங்கினார்கள். வாசகர் கடிதம் எழுதுபவருக்கு, வாழ்த்துக் கடிதம் எழுத. முதல் கார்டை நான் வாங்கினேன். கடிதம் எழுதி விட்டேன்.

" அன்புள்ள சத்தியநாராயணன் சார் அவர்களுக்கு, வணக்கம் !
வாசகர் கடிதம் எழுதியே வாசகர்கள் சேர்த்திருக்கிறீர்கள் என்பது அன்றைய விழாவில் நிரூபணம்.
உங்கள் பேரை கேட்டு, படித்து வளர்ந்த தலைமுறையை சேர்ந்தவன் என்ற முறையில் நிகழ்வில் பங்கேற்றேன்.
உங்கள் பதில்கள் "ஷார்ப்".
உங்கள் கடிதங்களாலும், கேள்விகளாலும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து "ஷார்ப்" ஆகட்டும்.
தங்கள் வாசகன், சிவசங்கர்"

# பாராட்டிக் கடிதம் எழுதி, பாராட்டும் பணி செய்பவரை பாராட்டி மகிழ்வோமே !
 

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சீமப்பசுவும், நாட்டுப்பசுவும்....

தொழிலில் நொடிச்சுப் போனார் ராமசாமி. உதவ முன் வந்தார் அப்பா கந்தசாமி. தன் வீட்டுக்கு அழைச்சார். "பின்புறம் கட்டியிருக்கும் இரண்டு மாட்டுல ஒன்ன பிடிச்சுக்கிட்டு போ. வாழ்க்கைய திரும்ப துவங்கு, ஆறு மாசம் கழிச்சு வா"ன்னுட்டார்.

ஒன்று சீமைப்பசு, மற்றொன்று நாட்டு மாடு. எதப் புடிச்சிக்கிட்டு போறதுன்னு ராமசாமிக்கு குழப்பம். நாளைக்கு வந்து புடிச்சிக்கிறேன்னு வந்துட்டார். வந்து நண்பர்கள்கிட்ட ஆலோசன கேட்டார்.

                            

நண்பர் பழனிசாமி சொன்னார்,"சீமப்பசு தான் ஒஸ்தி. எப்புடி மொழு மொழுன்னு இருக்கு பாரு. வேளைக்கு முப்பது லிட்டர் கறக்கும். நாட்டுப்பசுவ பாரு, வத்தலும் தொத்தலுமா. அது நாளைக்கே பத்து லிட்டர் தான் கறக்கும்"

இன்னொரு நண்பர் சிவலிங்கம்,"உண்மை தான். நாட்டுப்பசு கம்மியா தான் கறக்கும். ஆனா செலவு வைக்காது. சீமப்பசுவ வச்சி காப்பாத்தறது பால் கறக்குற காச தாண்டிடும்" அப்படின்னாரு.

பழனிசாமி ஒரு பண்ணையக் காட்டினாரு. "பாரு, பண்ணையே எப்புடி இருக்குன்னு. பிரம்மாதமா. நீ இது போல ஆகனும்னா சீமப்பசுவ புடிச்சிக்கிட்டு வந்துடு". ராமசாமியும் குஷி ஆயிட்டாரு.

ராமசாமி சீமப்பசுவ புடிச்சிக்கிட்டு வந்து வீட்டுல கட்டுனாரு. மறுநாள் பால் கறந்தாரு. பழனிசாமி சொன்ன அளவு கறக்கல. இருந்தாலும் நாளைக்கு கறக்கும்னு இருந்தாரு. மறுநாள் பகல்ல சீமப்பசு கத்திகிட்டே இருந்துது.

பழனிசாமிய கூப்பிட்டு கேட்டாரு, என்ன செய்யறதுன்னு. "அது வெயில் தாங்காது. ஒரு கொட்டா போடு"ன்னாரு. போட்டார். சத்தம் நிக்கல. ஒரு காத்தாடிய மாட்டி விடுன்னாரு. மாட்டி விட்டாரு. தெனம் மூனு வேள குளுப்பாட்டுன்னாரு. பட்டியல் நீண்டு போச்சு.

ராமசாமி 24 மணி நேரமும் மாட்டோடவே இருந்தாரு. டவுனுக்கு போய் தீவனம் வாங்க வேண்டி ஆயிடுச்சி. கறந்த பால விட செலவு அதிகமாயிடுச்சி. கையில இருந்த காசெல்லாம் கரஞ்சி, கடன் வாங்க ஆரம்பிச்சிட்டாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

மறுபடியும் சிவலிங்கத்த பாத்தாரு ராமசாமி. சிவலிங்கம்,"நான் அப்பவே சொன்னன்ல, நமக்கு நாட்டு மாடு தான் சரின்னு. நம்ம நிலமைக்கு ஏத்தது. நம்ம வயல்லேயே கட்டிப் போடலாம். புல்ல தின்னுக்கும். செலவு இல்ல."அப்புடின்னாரு.

அப்பா ஆறு மாசம் சொல்லியிருக்காரு. அது வரைக்கும் சீமப்பசு ஒதைக்கறதெல்லாம் வாங்கிக்க வேண்டியது தான்.

# ஏற்காடோ, வயக்காடோ வாழ்க்க ஒன்னு தான.....

சனி, 7 டிசம்பர், 2013

உலகம் தான் எவ்வளவு சுவாரஸ்ய மனிதர்களை கொண்டிருக்கிறது !

"அடடா, நான் எவ்வளவு பெரிய ஆளுமையோடு நிற்கிறேன்" அண்ணன் தங்கமணி சொன்ன மனிதரை நானும் தேடினேன். அவர் என்னை தான் சொல்கிறார் என்று தெரிந்து லேசாக கிர்ரடித்தது.

அவர் என்ன சொல்கிறார் என்று சுற்றி நின்றவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு முகநூலும் தெரியாது. அதற்கு மேல் அவர் பேசியவற்றில் பல வார்த்தைகள் அங்கிருந்த யாருக்கும் புரியாத அளவிற்கு இலக்கிய காத்திரம்.

ஏற்காடு தேர்தல் பணிக்கு, அவசர சட்டமன்ற கூட்டத்தின் காரணமாக இரண்டு நாள் தாமதமாக சென்றேன். முன்பே சென்ற பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் போன் செய்தார், "உங்க முகநூல் நண்பர் தங்கமணி உங்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்"

அவர் தான் இவர். இடம் கூட்டாத்துப்பட்டி திமுக தேர்தல் அலு அலுவலகம். சுற்றி இருந்தவர்களின் விநோதப் பார்வை உறுத்த, அவரை கொஞ்சம் தள்ளிக் கொண்டு போனேன்,"இரண்டொரு நாளில் சந்திப்போம்" என்றேன்.

அந்த ஊரின் மதிப்பானக் குடும்பமான தர்மகர்த்தா குடும்பத்தின் வாரிசு. திமுகவின் முக்கியக் குடும்பமும் கூட. பிறிதொரு நாளில் சந்தித்தோம். உடன் இன்னொரு முக்கியக் குடும்பமான மணியக்காரக் குடும்பத்தை சேர்ந்த தங்கராஜ், இவரது உறவினரும் கூட. இன்னும் சில அவ்வூர் நண்பர்கள்.

உள்ளுர் அரசியல் நிலவரங்கள் குறித்து துவங்கியப் பேச்சு பல சப்ஜெக்ட்களை தொட்டது. அண்ணன் தங்கமணி எனது பதிவுகளை சிலாகித்து கூறினார். கணேச குமாரன், வா.மு.கோமு என பல எழுத்தாளர்களின் எழுத்துகளை பற்றி பேசினார். அவர்களுடைய நண்பரும் கூட இவர்.

பக்கத்திலிருந்த நண்பரின் செல்போன் ரிங்கியது. அந்த திரைப்பட வரிகளை நான் ஹம் செய்ய முயலும் போதே, தங்கமணி பாடி முடித்தார். அதில் நடித்த நடிகர் குறித்து சில செய்திகளையும் சொன்னார். இன்னொரு நணபர் சொன்ன வார்த்தை இடம் பெற்ற கலைஞரின் கவிதையை வரி பிசகாமல் ஒப்பித்தார். எந்த சப்ஜெக்ட்டும் பாக்கி இல்லை.

பூர்வீக நிலப்பபிரச்சினையில், கண்களை கட்டி கடத்தி, பதிமூன்று நாட்கள் இருட்டறையில் வைத்து அடித்ததில் நடை பிசகி, பற்கள் அனைத்தையும் இழந்த சொந்த அனுபவத்தைக் கூட எள்ளலும் நகைச்சுவையுமாக சொல்லக் கூடிய ஒரே மனிதராக இவர் தான் இருக்க முடியும்.

தங்கராஜ் சொன்னார்,"மூன்று மாதம் வீட்டை விட்டு வெளியில் வராமல் உட்கார்ந்து படிக்கக் கூடிய ஒரே ஆள் இவன் தான். ஊரில் படிப்பவனும் இவன் தான்" 

நான் கேட்டேன்,"அப்படி என்ன புத்தகங்கள் படிச்சிங்கண்ணே ?"

"முரசொலி மாறனின் மாநில சுயாட்சி, ஜெயகாந்தன், சுஜாதா புத்தகங்கள்" என்றவர் "அண்ணே, நாம வெட்டி ஆபிசர். அதனால படிக்க முடியுது" என்றார் தங்கமணி.

                                          

"எவ்ளோ வெட்டி ஆபிசர் இருக்கான். எத்தன பேர் படிக்கிறான் ? எத்தனை பேருக்கு இவன மாதிரி விஷயம் தெரியும் ? இவன் சொல்ற புத்தகம் பேரே எங்களுக்கு எல்லாம் தெரியாது. இவன் எங்க ஊரின் பொக்கிஷம் அண்ணே" என்றார் தங்கராஜ்.

# உலகம் தான் எவ்வளவு சுவாரஸ்ய மனிதர்களை கொண்டிருக்கிறது !


வெள்ளி, 6 டிசம்பர், 2013

நீண்ட நெடும் பயணம் இன்னும் முடியவில்லை...

“சமூக நீதிக்காக மண்டேலா 67 ஆண்டுகள் போராடினார். நாங்கள் உங்களை 67 நிமிடங்களோடு தொடங்க சொல்கிறோம்” இது அய்க்கிய நாடுகள் சபை  'உலக நெல்சன் மண்டேலா தினத்தை' அறிவித்த அன்று விடுத்த செய்தி.

அந்த அறிவிப்பை ஒட்டி மண்டேலாவே வைத்த வேண்டுகோள், ”ஏழ்மையை எதிர்க்கவும், அமைதியை பரப்பவும், கசப்பை நீக்கி நட்பை பெருக்கவும், உலக மக்களை ஒன்று திரட்ட இந்த நாள் பயன்படுமானால், அதுவே என்னை பெருமைப் படுத்துவதாகவும்”

இப்படி ஒவ்வொரு நிமிடத்தையும் அமைதிக்காக கழித்தவர். ஒரு பெரு நோக்கோடு வாழ்வின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர். தன் வாழ்நாளை ஆதிக்க வெறிக்கு தின்னக் கொடுத்து அடிமை தேசத்தின் வாழ்வை மீட்டவர்.

அதுவே காலனி நாடு. அதிலேயே ஒடுக்கப்பட்ட இனம். அவர்களுக்கான போராட்டம். அதன் முடிவு எப்போதென்று தெரியாது. முடிவு என்று ஒன்று வருமா என்பதும் தெரியாது. ஆனாலும் தொடர்ந்து போராடினார்.

வாழ்ந்த 95 ஆண்டுகளில் போராட்டங்களில் கழிந்த காலம் 67 ஆண்டுகள். இதில் சிறையில் கழிந்த காலம் 27 ஆண்டுகள். அதிபராய் இருந்த காலம் அய்ந்து ஆண்டுகள். கூட்டிக் கழித்தால் போராட்டமே வாழ்க்கை.

சுருண்ட முடியும், இடுக்கிய கண்களும், கருத்த தோலுமாய் மண்டேலா இளைஞனாய் களம் கண்ட போது, அந்த சமூகமே நினைத்திருக்காது, இவன் தான் தன் இன விடுதலையின் அடையாளம் என. ஆனால் பொறுமையோடும், அசாத்திய துணிச்சலோடும் வடிவெடுத்தான் சுதந்திரத்தின் மறு உருவாய்.


நெல்சன் மண்டேலா உலகத்திற்கு சொன்ன செய்திகள் பல இருக்கலாம். ஆனால், அதில் எல்லோரும் தன் வாழ்க்கைக்குமான செய்தியாக கொள்ள வேண்டியது இது தான்.

“ஒரு பெரு மலையை ஏறிய பிறகே இன்னும் பல மலைகளை ஏற வேண்டியது தெரிகிறது. அந்த இடத்தில் சிறிது ஓய்வு எடுத்தேன், நான் கடந்து வந்த தூரத்தை காண்பதற்கும், என்னை சூழ்ந்திருக்கிற மகத்தான எதிர்காலத்திற்கான பார்வைக்கும்.

ஆனால் நான் ஒரு கணமே ஓய்வெடுக்க முடியும், காரணம் சுதந்திரத்தோடு பொறுப்புகள் காத்திருக்கின்றன். மேலும் எனக்கு ஓய்வை தொடர தைரியமில்லை, காரணம் எனது நீண்ட நெடும் பயணம் இன்னும் முடியவில்லை”

# அந்த நீண்ட நெடும் பயணத்தை நாமும் தொடர்வோம் !


மலை ஏற்றிய நண்பன்...

ஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல்லை. பக்கத்தில் இருந்த சிறு குன்று அன்போடு அழைத்தது. 


ட்ரெக்கிங்கில் சிறு ஆர்வம் உண்டு. தார்சாலை முடிந்து வயல்காட்டு வழியே நடந்தோம். வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எங்களை வித்தியாசமாக பார்த்தனர், ஓட்டு கேட்கிற குருப் வெள்ளை வேட்டி சட்டையில், ஓட்டில்லாத இடத்திற்கு எங்கே போகிறதென. 

வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் வழி கேட்டோம். காட்டினான். மலையடிவாரம். சிறு வயதில் ஊரில் பார்த்த சில செடிகளை இங்கே கண்டோம். கிளுவை முள்ளை நீண்ட நாட்கள் கழித்து கண்டோம். கத்தாழை ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தது. 

வழியில் கண்ட ஆவாரம் மலர்கள், “ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா ? என்றன.



மூன்றுபுறமும் மலை சூழ்ந்திருக்க அந்த இடத்தில் மழை நீரை தேக்க கசிவு நீர் குட்டை அமைத்திருந்தனர். ஆங்காங்கு கொன்றை பூத்து மஞ்சள் வனமாகக் காட்சியளித்தது. ஆலம்பழம் செக்கசேவேல் என கண்ணை கவர்ந்தது.


உயரம் குறைவாக இருப்பதால் கரடு என அழைக்கிறார்கள். ஏறுவதற்கு தடம் தேடிக் கொண்டிருந்தோம். வழிகாட்டிய சிறுவன் வந்து நின்றான். மேலே போயிருக்கியா என்று கேட்டோம். போயிருக்கிறேன் என்றான்.

அவன் காட்டிய தடத்தில் ஏற ஆரம்பித்தோம். பையன் பெயர் மகேந்திர பிரசாத். ஆறாம் வகுப்பு படிப்பவன். பள்ளி கிளம்ப தாமதமானதால் மாடு மேய்க்க வந்தவன் எங்களுக்கு வழிகாட்டியானான். மேலே விவசாயம் செய்யப்படாததால், இயற்கை கெடாமல் இருக்கிறது.

தட்டான்கள் நிறைய பறக்கின்றன. பட்டாம்பூச்சி அவ்வளவு இல்லை. சில இடங்களில் செங்குத்தான ஏற்றம் இருந்தாலும், அவ்வளவு சிரமம் இல்லை. மேல் பகுதியை அடைந்தோம். ஒரு சிறு கோவில். ஒரு உயரமானத் தூண். அதன் மேல் எண்ணெய் ஊற்றி ஏற்ற விளக்கு. சிலை கிடையாது.


"மாயவர்" கோயில். திருவிழா நாட்களில் மக்கள் திரளாக வந்து வணங்குவார்களாம். இன்னும் இரண்டு மலை தாண்டி, ஒரு உயரமானப் பகுதி தென்பட்டது. அதன் மீது இன்னும் பிரசித்தி பெற்ற கோயில் இருக்கிறதாம். எல்லாம் வெகு மக்களின் சிறு தெய்வங்கள் தான்.

ஒரு மணி நேரம் நெருங்கியதால், கீழே இறங்கினோம். மகேந்திரன் திடீரென தூயத் தமிழில் கேட்டான், "அய்யா, எதற்காக மேலே ஏறினீர்கள் ?" என்று. "மலை ஏறுவது என்றால் மகிழ்ச்சி. அதனால் தான்" என்றேன். "அதைவிட மகிழ்ச்சி, நீ ப்ரெண்டானது" என்றேன்.

மகேந்திரன் முகத்தில் மகிழ்ச்சி மத்தாப்பூ. கிராமத்து வெள்ளந்தி சிரிப்பு. கண்களும் சிரித்தன.

# வலது மூக்கில் இருந்த மூக்குத்தியும் சிரித்தது போல இருந்தது !

                               Displaying IMG_20131201_111846.jpg

வியாழன், 5 டிசம்பர், 2013

அவர் அப்படித் தான், இவர் இப்படித் தான் !

இவர் சென்னையில் இருந்து சேலம் பயணித்தது, அவரைப் போல உலங்கு வார்னூதியில் அல்ல. உலங்கு வார்னூதின்னா புரியலையா.... ஹெலிகாப்டர் தான். பயணம் காரில் தான். ஆறு மணி நேரம்.

இவரது ஏற்காடு தொகுதி தேர்தல் பிரச்சாரம் அவரைப் போல ஒரே நாள் சுற்றுப்பயணம் அல்ல, நான்கு நாட்கள் சுற்றுப்பயணம். ஒன்பது இடங்களில் மட்டும் பிரச்சாரம் இல்லை. சுற்றி, சுற்றி 81 இடங்களில் பிரச்சாரம்.

அவர் சுற்றுப் பயணம்  செய்த தூரம் 45 கி.மீ. இவர் பயணித்த தூரம் 740 கி.மீ.

மக்களை லாரியில் ஏற்றி, ஒரு இடத்தில் குவித்து, இரண்டு மணி நேரம் காக்க வைத்து, நிற்க வைத்து, உச்சி வெயிலில் வதக்கி, வாட்டி அவரைப் போல பிரச்சாரம் இல்லை.

இவர் மக்களை தேடி, மக்களை நாடி, அவர்கள் கிராமம் சென்று, அவர்கள் வீதி சென்று, அவர்களை வாட்டி வதக்காமல், வதைக்காமல் பிரச்சாரம்.

அவரைப் போல எழுதி வைத்த வசனத்தை, அச்சடித்த அட்டையை தள்ளித் தள்ளி, பக்கம் பக்கமாக படித்து, உணர்ச்சி இல்லாமல், உணர்வு இல்லாமல் ஒப்பித்த, ஒப்பேற்றிய, ஒரே மாதிரியானப் பிரச்சாரம் இல்லை.

இவர் அந்தந்த ஊருக்கான பிரச்சினையை முன்னெடுத்து, பக்கம் பக்கமான வசனங்கள் இல்லாமல், சிறு குறிப்புகளும் இல்லாமல், உணர்வோடு, மக்களுக்கான பிரச்சாரம்.

                     Displaying photo.JPG

அவரைப் போல இவரது வேன் பந்தலுக்குள் நிறுத்தப்பட்டு, வேன் மீது ஏ.சி கண்ணாடிக் கூண்டு தூக்கப்பட்டு, அதன் உள்ளிருந்து பிரச்சாரம் இல்லை. இவர் வேன் மீது திறந்தவெளியில், மாலை வெயிலில் வாடி, இரவுப் பனியில் நனைந்து பிரச்சாரம்.

                    

அவர் இவரைப் போல் இருக்க முடியுமா ? முதல்வர் அல்லவா ? பாதுகாப்பு வேண்டாமா ? என்பார்கள். இப்போதல்ல எப்போதும் அவர் அப்படித் தான். ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இவர் எப்போதும் இப்படித் தான்.

# அவர் அப்படித் தான், இவர் இப்படித் தான் !

செவ்வாய், 3 டிசம்பர், 2013

வெற்றிச்செல்வன் !

தளபதி அவர்கள் ஏற்காடு தொகுதி சுற்றுப் பயணத்தில், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தினருக்கு மூன்று இடங்களில் நிகழ்ச்சிகள். ஜலகண்டாபுரம், சர்க்கார் நாட்டார் மங்கலம், பெரியம்மாபாளையம். 29.11.2013 வெள்ளிக் கிழமையன்று.

ஜலகண்டாபுரத்தில் 751 ஓட்டுகள் தான். 400 ஓட்டுகள் தான் ஊரில் இருக்கும். மீதி வயலில் வசிப்பவர்கள். அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட இளைஞரணியினர் தேர்தல் பணியாற்றும் பகுதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் தலைமையில்.

இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் ஒரு அணி. தினம் இரண்டு மணி நேரம் அங்கு அமர்ந்திருப்பார். திமுதிமுவென கார்களில் வருவார், போவார். அன்று காலை தான் வீட்டுக்கு வீடு "இரட்டை" இலை அன்பளித்திருந்தனர்.

அதனால் மக்கள் தளபதி நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என அவர்கள் நினைத்திருந்தனர். அந்தப் பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் தளபதி நிகழ்ச்சி. வெளியூரிலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்ள வாய்ப்பில்லை. 


அயோத்தியாப் பட்டிணத்தில் தளபதி அதிக நேரம் பேசியதால், தாமதம்.

                        

ஒவ்வொரு இடத்திலிருந்தும் அண்ணன் ஜெயின் கூபி லைவ் ரிலே செய்து கொண்டே வந்தார். 45 நிமிடம் தாமதமாகி கொண்டிருந்தது. ஜலகண்டாபுரம் 7.50க்கு வருவதாக அறிவிப்பு.

அது அயோத்தியாப்பட்டிணம் - பேளூர் சாலை, தேர்தலுக்காக அவசரமாக அகலப்படுத்தப்பட்டிருந்தது. அகலமான ரோடாக இருந்ததால், 8.00 மணியாகியும் ரோட்டில் கூட்டம் இருப்பதாக தெரியவில்லை. தங்கள் அலுவலத்தில் இருந்து பார்த்த அதிமுகவினர் மகிழ்ச்சியாக இருந்தனர்.

8.10. சேப்பாக்கம் பிரபாகரன் "தளபதி வருகிறார்" என அறிவித்து வந்தார். அவர் வந்த வாகனத்தில் கிராமிய இசைக்குழுவினர் கழகப் பாடல்கள் பாடினர். சிறுசிறு குழுக்களாக பெண்கள் வந்தனர்.

8.20. குடியாத்தம் குமரன் குழுவினர் அறிவித்தப்படி வந்தனர். பின்னாலேயே இறையன்பன் குத்தூஸ் ஒரு லாரியில் இசைக் குழுவோடு பாடியபடி வந்தார். இரண்டு கொள்கை பாடல்களை முழங்கினார். சாலையின் ஒரு புறம் பெண்களும் மறுபுறம் இளைஞர்களும் குவிய ஆரம்பித்தனர்.

8.28. சரசரவென கழகத் தோழர்களின் வாகனங்கள் வர ஆரம்பித்தன. அண்ணன் ஜெயின் கூபி ஒரு பைக்கில் வந்து குதித்தார். தளபதி வாகனம் கண்ணில் பட்டது. சாலையில் அலையடிப்பது போல் கூட்டம், 150க்கும் மேல் பெண்கள், 250க்கும் மேல் ஆண்கள், 751 ஓட்டுகள் இருக்கும் ஊரில்.

இப்போது, அலுவலகத்தில் இருந்த அதிமுகவினரும் ரோட்டுக்கு வந்து நின்று தளபதியை ஆர்வத்தோடு பார்த்தனர்.



தளபதி அவர்கள் வாகனம் ஊருள் நுழைந்தது. இளைஞர்கள் பூ மழை பொழிந்தார்கள். பெண்கள் கும்பம் ஏந்தி வரவேற்றார்கள். முதியவர்கள் கையசைத்து வரவேற்பளித்தனர்.

                        

வாகனத்தின் மீது தோன்றினார், வேட்பாளர் மாறனோடு. மகிழ்ச்சி குரல் மக்களிடமிருந்து. தாமதத்தை ஈடு செய்ய வேண்டி இருந்ததால் சுருக்கமாக, ஷார்ப்பாக பேசினார். பேசி முடித்து கூட்டாத்துப்பட்டி கிளம்பினார். நாங்கள் எங்களது அடுத்த பாயிண்டான சர்க்கார் நாட்டார் மங்கலம் சென்றோம்.

9.30 தளபதி வந்தார். அரசின் அவலங்களை எடுத்துரைத்தார். "இது ஒன்றும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் தேர்தல் அல்ல. இந்த ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த ஊர் கிளை செயலாளர் செந்தில் அவர்களின் நான்கு மாதக் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டினோம். "வெற்றிச் செல்வன்" என்று பெயர் சூட்டினார். தளபதி அவர்கள் வேனின் மீதிருந்து தாவி குழந்தையை வாங்கி உச்சி முகர, மக்களிடம் மகிழ்ச்சி ஆரவாரம்.


                                   

                               

தளபதி கருமாபுரம், மேட்டுபட்டி ஆகிய ஊர்களில் பேசி விட்டு கடைசியாக எங்கள் பகுதியான எம்.பெருமாபாளையம் வர வேண்டும். தாமதத்தை சரி செய்து எங்கள் பகுதிக்கு 10 மணிக்குள் வந்து பேச வேண்டும்.

பெருமாபாளையத்தில் கழக இளைஞர்களும், விடுதலை சிறுத்தை இளைஞர்களும் உற்சாகமாக நடனமாடி ஏரியாவை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உற்சாகத்திற்கு காரணமிருந்தது.

தளபதி அவர்கள் சுற்றுப்பயண முதல் பட்டியலில் இந்த ஊர் இடம் பெறவில்லை. பக்கத்தில் உள்ள மேட்டுப்பட்டி கடைசி ஊராக இருந்தது. அங்கிருந்து பெருமாபாளையம் 100 மீட்டர் தூரம் தான். 2500 வாக்குகள் இருக்கும் பகுதி. உள்ளூர் நிர்வாகிகளின் வேண்டுகோளால் அன்று தான் சேர்க்கப்பட்டது.

அன்று காலை அதிமுகவினர் "இரட்டை" இலை அன்பளித்தும் அந்தப் பகுதி மக்கள் மறுத்து விட்டனர். அந்த கோபத்தில் ஒரு மைக் செட் கட்டி தளபதி நிகழ்ச்சியை நடத்த விடாமல் பிரச்சினை செய்தனர். போலீசாரும் வந்து அனுமதி தராமல் இழுத்தடித்தனர். மாலை 4.30க்கே அனுமதியளித்தனர்.

அதனால் தான் அந்த உற்சாகம். 9.50 தளபதி மேட்டுப்பட்டியில் பேசிக் கொண்டிருந்தார். எங்களுக்கு பி.பி எகிறியது. 9.56 தளபதி எங்கள் பகுதியில் நுழைந்தார். மகிழ்ச்சி ஆரவாரம் உச்சம். சரியாக நான்கு நிமிடம் பேசி 10.00 மணிக்கு முடித்தார்.

திரும்பிய தளபதி வாகனத்தை மறித்து பெண்கள் ஆரத்தி எடுத்தனர். தளபதி நிகழ்ச்சி நடக்காது என்ற எண்ணத்தில் வேடிக்கை பார்க்க, தங்கள் அலுவலகத்தில் நின்ற அதிமுகவினரையும் பார்த்து கையசைத்து சென்றார்.

# வெற்றிச்செல்வன் !