பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அம்மா, மோடி கனவு தொடரட்டும்....

மோடியின் பிரதமர் கனவை களவாட முயற்சிக்கும் ஜெயலலிதாவின் நாடகம் தான், தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தை புறக்கணிப்பு உதார்.

மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பிகார்  முதல்வர் நிதிஷ்குமார் ஏற்றுக் கொள்ளமாட்டார். தனக்கு இடையூறாக இருக்கும் நிதிஷை வெளியேற்ற மோடியும் திட்டமிடுகிறார்.

பா.ஜ.கவின் தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கும் ஆசை தான். ஆனால் மோடி போல, குஜராத்  குறிப்பிட்ட ஆதரவுத் தளம் இல்லை. இந்துத்துவா வெறி ஏற்ற மோடி வித்தை தான் உதவும் என்பதால் பேசவும் முடியாது. 

இப்படி பா.ஜ.க-விற்குள்ளும், கூட்டணிக்குள்ளும் மோடிக்கு இருக்கும் எதிர்ப்புகளால், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக ,குஜ்ரால், தேவகௌடா போல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்பது தான் ஜெ-வின் திட்டம். அதற்கு இணக்கம் காட்ட தான், மோடியின் பதவியேற்பில் பங்கேற்று காட்டிய பாசம்.

மத்தியஅரசு ஆட்சி அமைப்பில் முக்கிய பங்காற்ற வேண்டிய, உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலை தான் பரிதாபம். ஒரு காலத்தில் இந்திய அரசியலை ஆட்டிப் படைத்த மாநிலம். இங்கு பெரும்பான்மை எம்.பி-களை கைப்பற்றி விட்டால், கூட்டணி பலமே தேவையிருக்காது.

543 எம்.பி-களில் 80 எம்.பிக்கள் உத்தரபிரதேசம் தான். அதனால் தான் இந்த மாநிலத்தை தன் கைக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்று ராகுல்காந்தி தலைகீழாக நின்று முயற்சித்தார்.

ஆனால் சோகம், அவரால் அங்கு துரும்பையும் அசைக்க முடியவில்லை. ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வாலும் தலை தூக்க முடியவில்லை. 

முலாயம்சிங் யாதவும் (எஸ்.பி), மாயாவதியும்(பி.எஸ்.பி) மாறி மாறி, மியூசிக்கல் சேர் ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங், எஸ்.பி, பி.எஸ்.பி கட்சிகள் தலா 21,23,21, பாஜ.க கூட்டணி 15 இடங்களும் பிடித்தார்கள். இப்போதும் இதையே பிடித்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருப்பார்கள்.

அடுத்து அதிக எம்.பி தொகுதிகளை வைத்திருக்கிற மாநிலங்கள் : மகராஷ்டிரம் 48, மேற்கு வங்கம் 42, ஆந்திரா 42, பிகார் 40, தமிழ்நாடு 39.

மகராஷ்டிரத்தில் காங்+பவார் காங், பா.ஜ.க+சிவசேனா இடையே இழுபறி கதைதான். இதில் சிவ்சேனாவிற்கு மோடி மீது விருப்பம் இல்லை.

மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி சட்டமன்ற தேர்தலை போல் ஸ்வீப் அடிக்கலாம் என்ற ஆசை. கம்யூனிஸ்டுக்கு கைநழுவிய வங்கத்தை எம்.பி தேர்தலில் மீட்க ஆசை. மம்தாவிடம் ஏற்கனவே 19 எம்.பிக்கள், இப்போது கூட செய்யும்.

ஆந்திராவில் கடந்த தேர்தலில், ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் உழைப்பில் கிடைத்த 33 எம்.பி-க்கள் தான் மத்திய காங் அரசின் அடித்தளமே. ஆனால் இப்போது ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி என்ற புயல் வீச உள்ள நிலையில் காங் எங்கு தரைதட்டும் என்று தெரியாத நிலை.

பிகாரில் நிதிஷ் வசம் 20 எம்.பி-களும், அவரது துணையால் பா.ஜ.க வசம் 12 எம்.பி.களும் உள்ளனர். நிதிஷ் கை தான் மீண்டும் ஓங்கும் நிலை.

39 எம்.பி.கள் கொண்ட தமிழகத்தின் ஆதிக்கம் தான் 1999-லிருந்து மத்திய அரசியலில் தொடர்கிறது. 

இந்த முறை பெரும்பான்மையான எம்.பி.களை கைப்பற்றினால், பிரதமர் அல்லது துணைபிரதமர் என்ற கனவில் ஜெ உள்ளார். 

தமிழகம் இருளாக இருப்பதால், அம்மா தூக்கம் கலையாமல், கனவு சிதறாமல் மூழ்கியுள்ளார்.

இன்னும் பதினோரு பெரிய மாநிலங்கள் உள்ளன, தொடர்ந்து பார்ப்போம்...

அது வரை அம்மா, மோடி கனவு தொடரட்டும்....