பிரபலமான இடுகைகள்

புதன், 6 பிப்ரவரி, 2013

பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( 2 )


பார்கின்ஸன்ஸ் நோயை குணப்படுத்த முடியாது, அந்த நேரத்திற்கு கட்டுக்குள் தான் வைக்கமுடியும். இந்த நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது. 

எனது அப்பா அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு இந்நோய் தாக்கியது. உடன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க துவங்கினார்கள்.

அப்பாவிற்கு வலது கையிலும், வலது காலிலும் லேசான நடுக்கமாக துவங்கியது. மெல்ல நடுக்கத்தின் அளவு கூட தொடங்கியது. கால் இயக்கம் தடுங்க ஆரம்பித்தது. கொடுக்கப்பட்ட மருந்து அந்த நேரத்திற்கு நடுக்கத்தை நிறுத்தும்.

மருந்தின் வீரியம் குறையும் போது, நடுக்கம் அதிகரிக்கும். பார்கின்ஸன்ஸின் கொடூரம் அது தான். சாப்பிட்ட மருந்து உடலில் இருக்கும் வரை தான் கட்டுபாட்டில் இருக்கும்.

அதே போல சாப்பிடும் மருந்தின் அளவு ஒரு கட்டத்தில் பற்றாக்குறையாகிவிடும்.அப்போது உட்கொள்ளும் மாத்திரையின் அளவை உயர்த்த வேண்டும். 

காலப்போக்கில் மாத்திரயின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்லும். இப்படியாக அப்பா சாப்பிட்ட மாத்திரையின் எண்ணிக்கை உயர்ந்தது.

முதலில் ஒரு நாளைக்கு ஒரு syncapone மாத்திரை சாப்பிட ஆரம்பித்து, அறுவை சிகிச்சைக்கு முன்பு கடைசியில் ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என ஒரு நாளைக்கு ஆறு வேளை மொத்தம் 12 மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இன்னொரு புறம் இந்த மாத்திரையின் பக்கவிளைவுகள் தாக்க ஆரம்பித்தன. வலுவான உடலமைப்பு கொண்ட அவர்களது உடல் பார்கின்ஸன்ஸாலும், மாத்திரைகளாலும் மெலியவும் நலியவும் செய்தது, பற்கள் ஒவ்வொன்றாக கரைவது போல வலுவிழந்து விழ ஆரம்பித்தன.

நடக்க ஆரம்பிக்கும் போது, சட்டென அடி எடுத்து வைக்க முடியாது. சில நிமிடங்கள் நின்று நிதானித்து தான் நடக்க முடியும். அடுத்த கட்டமாக உடல் முழுவதும் முறுக்கி எடுப்பது போல சில நேரங்களில் நோய் வலுவானது.

இதற்கு முழுவதும் அதே மாத்திரைகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை. வேறு சிகிச்சை இல்லை. 

இதற்கிடையில் உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என வேறு இரண்டு மூன்று மருத்துவர்களை சந்தித்து, அவர்கள் மருந்துகளை மாற்றி மாற்றி கொடுத்து அந்த பாதிப்பு வேறு.

இதில் அந்த புதிய மருத்துவர்கள் பார்கின்ஸன்ஸ் குறித்து சொல்லியவை எல்லாம் பயமுறுத்தும் செய்திகள் தான். விபரம் தெரியாத நோயாளிகள் இவர்களிடம் மாட்டினால் அவ்வளவு தான், பயத்திலேயே நோயின் தாக்கம் கூடிவிடும். 

இது போன்ற மருத்துவர்கள் தங்களை update செய்து கொள்வதே இல்லை போலும்.

ஒரு சமயத்தில், அப்பாவின் நண்பரான முன்னாள் அமைச்சர் நல்லுசாமி அவர்களது மகன் டாக்டர். செந்தில் குமார் பார்கின்ஸன்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற தகவலை சொன்னார்.

திருச்சி காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் டாக்டர். செந்தில் அவர்கள் ஒரு Medical conference-ல் சந்தித்த மருத்துவ நண்பரிடம் அப்பாவை பற்றி பேசிய போது இந்த தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த அறுவை சிகிச்சை பற்றி அறிந்து கொள்ள ஹைதராபாத் வந்தோம்....

( தொடர்ந்து பார்ப்போம்... )