பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....


( ஹைதராபாத்திலிருந்து .... )குண்டுவெடித்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இருந்தேன். நகரம் அமைதியாகவே இருந்தது, வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது.

குண்டு வெடிப்புக்கு பல காரணங்கள் சொல்லப் பட்டன.

குரு அப்சல் தூக்குக்கு பதிலடி.....

மறுநாள் துவங்க இருந்த தெலுங்கானா போராட்டத்தை திசை திருப்ப...

வலுவிழந்திருக்கும் மாவோயிஸ்ட் இயக்கம் தன் இருப்பை உறுதி செய்ய...


# ஆனால் பாதிக்கப்பட்டது பொது மக்களே...                           ***************************************************" தயவுசெய்து மறுபடியும் இதை செய்யாதீர்கள் " - அப்துல் வாசி மாசே, ஹைதராபாத் குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர் விடுத்துள்ள வேண்டுகோள்.

கொடுமை, இவர் 2007 குண்டு வெடிப்பிலும் பாதிக்கப்பட்டவர். பாதுகாப்பான இடம் தேடி தில்சுக் நகரில் குடியேறிவரை தேடி வந்து தாக்கியிருக்கிறது தீவிரவாதம்.

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு புத்தகம் வாங்க வந்த 24 வயதான விஜயக்குமார், வெடித்த குண்டிலிருந்து பறந்து வந்த இரும்பு ஆணிகளுக்கு பலியானார்.

ஹஜ் போக திட்டமிட்டிருந்தார், போன மாதம் மகளுக்கு திருமணம் முடித்த முகமது அமானுல்லா கான். ஆனால் மார்கெட்டுக்கு போன இடத்தில் உயிர் போனது.

எம்.பி.ஏ படிக்கும் மாணவர் வாங்கிய புத்தகத்தோடு கருகிப் போனார்,

கர்நாடகா பிதார் மாவட்டத்திலிருந்து பிழைக்க வந்த இளைஞர் உணவுக்காக அங்கே போக பிணமானதே மிச்சம்.

அய்.ஏ.எஸ் படிக்கும் கனவிலிருந்த திருப்பதி, கனவுகளோடு எரிந்துப் போனார்.

இப்படி பலியானோர் எண்ணிக்கை 16. காயமுற்று மருத்துவமனையில் இருப்போர் 200-ஐநெருங்கும்.

குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டோரில் பாகுபாடே இல்லை. முஸ்லிம், இந்து, வயதானவர்கள், இளையோர், மாணவர்கள், பணிபுரிவோர், ஏழை, பணக்காரன் என எல்லோரையும் துளைத்திருக்கிறது குண்டு.

மொத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் மனிதர்கள். பாதிப்படைய செய்தவன் மிருகம்.                        **********************************************************


ஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....

குண்டு வெடிப்பு துயரத்திலிருந்து ஒரே நாளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

யாரும் யாரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை, பொதுமக்கள். அரசியல்வாதிகளை கணக்கில் கொள்ள வேண்டாம்.

பா.ஜ.க குண்டுவெடிப்புக்கு எதிராக விடுத்த பந்த் அழைப்பு பிசுபிசுத்தது.

மதக் கண்ணோட்டம் இல்லாமல் தீவிரவாதம் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுகிறது. இந்து-முஸ்லிம் இணைந்தே உதவி வருகின்றனர்.

# தீவிரவாதிகளே மதப் போர்வை போர்த்திக் கொள்கின்றனர். மக்கள் தயாராயில்லை....