பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 3 மார்ச், 2013

நல்லா சொல்லுவோம், குடும்பக் கட்சி

மேடையில் ஏறுவதற்குள் உடம்பில் இருந்த நீரெல்லாம் வியர்வையாக வெளி வந்து விட்டதோ என சந்தேகமாகிவிட்டது. தளபதி அவர்கள் பிறந்தநாள் விழாவில் தான்....

ராயப்பேட்டை வழக்கம் போல் விழாக்கோலம் பூண்டிருந்தது. YMCA வழக்கம்போல் 8.30க்கு நிரம்பிவிட்டது. வழக்கம்போல் கழகத் தோழர்கள் மாவட்டம் வாரியாக திரண்டிருந்தனர், இளைஞரணி தோழர்கள் இன்னொருபுறம்.

10 மணிக்கு தளபதி அவர்கள் வந்தவுடன் திடல், மின்சாரம் வந்த கிராமம் போல் பிரகாசமானது. அப்போதே வரிசை களை கட்டியிருந்தது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் துரைசாமி அவர்களுடன் வரிசையில் இணைந்து மெல்ல நகர்ந்தோம்.

மேடைக்கு இரண்டு புறமும் படி அமைத்திருந்தார்கள். நாங்கள் சென்ற பக்கத்தில் திடீரென நிறுத்திவிட்டார்கள். இது இறங்கும் வழி என அறிவித்துவிட்டார்கள். கிட்டதட்ட மேடையில் ஏறும் நிலை அப்போது.

இறங்கலாம் என்றால் பின்னால் நிற்பவர்கள் எங்களை முன்னோக்கி தள்ளிக் கொண்டிருந்தார்கள். இந்த தள்ளுமுள்ளு பயணத்தில் அண்ணன் தாமோ.அன்பரசன் அவர்களும் மாட்டிக்கொண்டிருந்தார்.

மேடையை ஒழுங்கு செய்து கொண்டிருந்த சகோதரர் TRB.ராஜா வணக்கம் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதற்குள் பின்புறத்திலிருந்து வந்த அலையில், மேடையில் கிட்டத்தட்ட போய் விழுந்தோம். விழவில்லை, விழுந்தமாதிரி.

இப்போது இருபுறமும் ஏறிய கூட்டத்தால் மேடை மக்கள் கடல் ஆகியிருந்தது. மேடை திணற ஆரம்பித்தது. பாதுகாப்பு கருதி தொண்டர் அணியினர் தளபதி அவர்களை மேடைக்கு பின்புறம் இருந்த அறைக்கு அழைத்து சென்று விட்டு, மேடையை ஒழுங்கு படுத்தத் துவங்கினர்.

இந்த நேரத்தில் பின்புறம் நின்ற ஒரு குழுவிலிருந்து வாழ்த்து முழக்கம், " தளபதி வாழ்க". திடீரென ஒரு குரல் " ஸ்டாலின் வாழ்க". அந்தக் குழுவிலிருந்த இருவர் கிசுகிசுத்துக் கொண்டனர், " பெயரை சொல்லலாமா ?" . ஆனால் அந்த நபர் தொடர்ந்து பெயர் சொல்லி வாழ்த்திக் கொண்டிருந்தார்.

இதுதான் வழக்கமானவற்றிலிருந்து வித்தியாசமான நிகழ்ச்சி, பெயர் சொல்லி முழக்கம் எழுப்புவது. ( பெயர் சொல்வது தவறில்லை, ஆனால் வழக்கமில்லை. அவர்களை யாரும் தடுக்கவும் இல்லை )

அந்தக் குழு முழுவதும் இளைஞர்கள். அரசியல் வாடை இல்லாதவர்களாக இருந்தார்கள். ஏதோ IT நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். தளபதி மேல் கொண்ட ஈர்ப்பால் வாழ்த்த வந்திருக்கிறார்கள். புதியத் தலைமுறையின் வருகை.

மீண்டும் தளபதி மேடைக்கு வந்தார்கள், வாழ்த்துக்களை பெறத் துவங்கினார்கள். மறுபடியும் வரிசைப் படுத்தினார்கள். கூட்டம் தானாக நகர்த்தி சென்றது. தளபதியை நெருங்கும் போது உடை கசங்கி, தலைகலைந்து களைப்படைந்து விட்டோம்.

கழக முண்ணனியினர், அண்ணியார் சூழ தளபதி நின்று கொண்டிருந்தார்கள். தேர்தல் நிதி கொடுத்துவிட்டு வணங்கினேன். அவ்வளவு நெருக்கடியிலும் தளபதி அவர்கள் வணங்கிவிட்டு கேட்டார் " அப்பா எப்படி இருக்காங்க ?"

களைப்பு முழுதும் நீங்கி புத்துணர்வு பெற்றேன்.

# நல்லா சொல்லுவோம் " குடும்பக் கட்சி , குடும்ப உணர்வுக் கொண்டக் கட்சி " !