பிரபலமான இடுகைகள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

வெளியேற்றம், சஸ்பெண்ட். சட்டமன்ற நிகழ்வுகள் 01.04.2013

செந்தில்பாலாஜி அரை பாட்டில் தண்ணீர் குடித்தார். அப்போதுதான் சபா " போக்குவரத்துத் துறையில் முறைகேடு நடந்ததாக பத்திரிக்கையில் வந்த செய்தியின் மீது எதிர்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப் படுகிறது" என்று அறிவிப்பு கொடுத்தார்.

திமுக சார்பாக, தளபதி அவர்கள் பேசினார்கள். முறைகேடுகள் குறித்து விளக்க முற்பட்டதற்கு குறுக்கீடு செய்தார்கள். "வெறுமனே கவனத்தை ஈர்க்கிறேன்" என்று சொல்லுங்...கள் என்று அமைச்சர் பெருமக்கள் வகுப்பு எடுத்தார்கள்.

அப்படியும் சில செய்திகளை தளபதி அவர்கள் பதிவு செய்தார்கள். பிறகு மார்க்சிஸ்ட் சார்பாக சவுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுகம், புதியத் தமிழகம் சார்பாக டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரும் முறைகேடு குறித்து பேசினார்கள்.

பதிலளிக்க எழுந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழின் பழமையும், பெருமையும் கொண்டவர் அம்மா என வாழ்த்திவிட்டு, நாடக வசனம் போல் பேச ஆரம்பித்தார்.

இடையில்,"மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை சபையில் பாடிய தருமி போல் பேசினார்கள், ஏதோ கிருமி வெளியிட்ட செய்தி" என எதிர்கட்சிகளையும், செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையையும் தாக்கினார்.

" இந்தக் குற்றச்சாட்டுகளை சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது ?" என்றவுடன் நாங்கள் எழுந்துவிட்டோம். மக்கள் வாக்களித்து அனுப்பிய உறுப்பினருக்கு தகுதியிருக்கிறதா என பேசுவது மமதை, நீக்க வேண்டும் என குரல் எழுப்பினோம்.

சபா மறுக்க எங்கள் கோபம் அதிகமானது. " அமைச்சர் ஆகிவிட்டாலே எதை வேண்டுமானாலும் பேசுவதா" என குரல் கொடுத்து முன்னேறினேன். எல்லா கழக உறுப்பினர்களும் சபையின் மையப் பகுதிக்கு சென்றோம்.

சபா அசைந்து கொடுக்கவில்லை. அண்ணன் ஜெ.அன்பழகன் முதல் வரிசைக்கு வந்து எதிர்ப்பு குரல் வலுவாக கொடுத்தார். நான் "தகுதியை பற்றி சொன்ன வார்த்தைகளை நீக்குங்கள்" என குரல் கொடுத்தேன். சபா என்னை விரல் நீட்டி எச்சரிக்க, சும்மா மிரட்டாதீர்கள் என நான் சொல்ல...

ஜெ எழுந்து பேச முயற்சித்தார், அந்த வாசகங்களை நீக்கி விட்டுதான் பேச முடியும் என அனுமதிக்கவில்லை. ஜெ அமர்ந்தார். சபா பார்த்தார். எழுந்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

சபைகாவலர்கள் கொரடா அண்ணன் சக்கரபாணி அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். எங்களை பலவந்தமாக தள்ளி வெளியேற்றினர்.

வெளியே வந்த பிறகுதான் அந்த செய்தி - இரண்டு நாள் சஸ்பெண்ட் ஜெ.அன்பழகனும், சிவசங்கரும்.

தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தோம், அண்ணன் துரைமுருகன் சொன்னார்," முன்னாடி நின்னு குரல் கொடுத்தாரு, அன்பழகனை சஸ்பெண்ட் செஞ்சாங்க,. சிவசங்கர் ஒரு தப்பும் பண்ணல, சபாநாயகரு சாய்ந்து இருக்கிற டேபிள் சரியா இருக்கான்னு செக் பண்ணான், அதுக்கு போய்..."

# வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி !
 
******************************************************************
 
தனபால் அண்ணே நன்றிண்ணே !

07.30 p.m - தந்தி TV live
09.00 p.m - கலைஞர் செய்திகள் live கூப்பிட்டாங்க.

அண்ணே என்னமோ பி.பி.சின்னு சொல்றாங்களே, அங்கேயும் அம்மா பெருமைய சொல்லனும்னே.

# மனசு வைங்கண்ணே !