பிரபலமான இடுகைகள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

சட்டமன்ற நிகழ்வுகள் 27.03.2013

ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் தொடர்ந்து போராடி வரும் சூழலில், அரசின் கவனத்தை ஈர்க்கின்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கழகத்தின் சார்பாக கொடுக்கப் பட்டிருந்தது.

அதன் மீது கழகத்தின் சார்பாக கோவி.செழியன் பேச துவங்கினார். மாணவர்கள் உணர்வு பூர்வமாக போராடுகிறார்கள் என்று சொல்லி லயோலா என்று ஆரம்பித்தார். அவ்வளவு தான் அமைச்சர்கள் எழுந்து குரல் எழுப்ப ஆரம்பித்தார்கள். சபாநாயகர் குற்றச்சாட்டாக பேசக் கூட...ாது என எச்சரித்தார்.

மீண்டும் செழியன் பேசத் துவங்கினார், "காவல்துறை " என்றார். உடனே அமைச்சர்கள் எழ, சபா குறுக்கிட்டார். என்னை பேச விடுங்கள், குற்றச்சாட்டாக பேசவில்லை என சொன்னதையும் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து குறுக்கிட தளபதி அவர்கள் அவரை பேச அனுமதியுங்கள் என்றார்.

செழியன், "எங்கள் தலைவர் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கோரியது போல, முதலமைச்சரும் கடிதம் எழுதியிருக்கிறார்" என்றார், அதிமுகவினர் கூச்சல் எழுப்பினர். சபா பேச்சை நீக்க உத்தரவிட்டார். பேசவும் அனுமதிக்க மறுத்தார்.

தளபதி எழ, கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து செழியனை பேச அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்த, சபா அனுமதித்தார். " 67ல் ஆட்சி மாற்றத்திற்கே வித்திட்டது மாணவர் போராட்டம்" என்றார் செழியன். அமைச்சர்கள் எழுந்து நின்றுக் கொண்டனர். நீண்ட வாக்குவாதம் சபை குறிப்பில் ஏறாமல்.

ஏதோ சமிங்ஞை வர சபா, " இனி செழியனை பேச அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் நீங்கள் பேசுங்கள்" என தளபதி அவர்களை பார்த்து சொல்ல, தளபதி" பேசிக் கொண்டிருக்கிறவரை மறுப்பது அவமதிப்பது போல, அவரே பேச வேண்டும்" என வலியுறுத்தினார்.

ஜெ.அன்பழகன் குரல் எழுப்ப சபா அவரை எச்சரித்தார். நாங்கள் சற்றே முன்னேறி தளபதி அவர்கள் அருகே நின்று சபாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். "எங்கள் கட்சியில் யார் பேசுவது என முடிவு செய்வது எங்கள் உரிமை, நீங்கள் தலையிட முடியாது" என குரல் எழுப்பினோம்.

தளபதி " செழியன் ஒரு பேச்சாளர், வழக்கறிஞர். அவர் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஒரு தலித் சகோதரர் பேசுகிற வாய்ப்பை மறுக்க முடியாது" என சொல்லியும் சபா மறுக்க, வேறு வழியில்லாமல் வெளிநடப்பு செய்தோம்.

மீண்டும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சென்ற போது, சரத் முழங்கி முடித்து, ஜெ-வை உரையாற்ற சபா அழைத்தார். எங்களை ஒரு "புன்னகையோடு" பார்த்துக் கொண்டே எழுந்தார்.

கவன ஈர்ப்பிலே சொன்ன செய்திகளை விடுத்து பழைய வரலாற்றிலிருந்து துவங்கினார். தலைவர் கலைஞர் அவர்களை இழுத்தார். குற்றச்சாட்டுகள் அடுக்க ஆரம்பித்தார். பொறுமை காத்தோம். கவன ஈர்ப்பு குறித்து குறித்து பேசுவதாக தெரியவில்லை.

நாங்கள் எழுந்து சபாநாயகரை பார்த்து, " செழியன் குற்றம் சாட்டி பேசுகிறார் என்றீர்கள், இப்போது இவர் குற்றம் சாட்டுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்" எனக் கேட்க, சபா எங்கள் பக்கம் திரும்பவில்லை.

சபா நோக்கி முன்னேற ஆரம்பித்தோம். குரலெழுப்பினோம். ஜெ உட்கார்ந்தார்." சட்டசபையில் ஏற்கனவே அதிமுக போட்ட தீர்மானங்கள் குறித்தும் பேசலாமா "என கேட்க சபா எழுந்து நின்று எச்சரிக்க ஆரம்பித்தார். லால்குடி சவுந்தரபாண்டியனும் என்னருகே வந்து " பிரபாகரனை பிடித்து வர தீர்மானம் போட்டது யார் ?" என குரல் கொடுத்தார்.

சபா எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். சபைக் காவலர்கள் எங்களை வெளியேற்ற துவங்கினர். சபையில் தேமுதிகவும் இல்லை, திமுகவும் இல்லை.

ஈழத்தாய் உரையாற்ற ஆரம்பித்தார்...

( இரவு செல்லில் ஒரு பத்திரிக்கை நண்பர் அழைத்தார். "மம்மி உங்களையே தான் பார்த்துகிட்டு இருந்தாங்க. நீங்களும், சவுந்தரபாண்டியனும் ரொம்ப எமோஷனலாயிட்டிங்க" என்றார் )

# அந்தப் புன்னகை இந்த வினையா ?