பிரபலமான இடுகைகள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி அவர்களது நியாயமான கேள்வியும் எனது பதிலும்



மதிப்பிற்குரிய கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி அவர்கள் ஒரு நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார்.

"திரு சிவசங்கர், உங்களுடைய சட்டமன்றச் செய்தி அப்டேட் நான் தொடர்ந்து படிக்கும் ஒன்று. ஆனால் ஒருவிதத்தில் இந்த செய்திகள் அலுப்புட்டுகின்றன. அவைக்குறிப்பிலிருந்து நீக்கு, உனக்குத் தகுதியில்லை, அதெப்படி நீ சொல்லலாம் போன்றவை தவிர சட்டமன்றத்தில் உருப்படியான விவாதம் என்பது நடக்கப்போவதில்லை என்பதாகத் தெரிகிறது. இது எப்படி பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும்? இது குறித்து உங்கள் கருத்து என்ன? "

எனது கருத்து :

நீங்கள் சொல்வது உண்மை தான். ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல உள்ளே இருக்கிற எங்களுக்கே அலுப்பாகத் தான் ஆகி விடுகின்றது.

கடந்த தலைவர் கலைஞர் ஆட்சி காலத்திலும் நான் சட்டமன்ற உறுப்பினர். சமயங்களில் அப்போதும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் எப்போதாவது. இப்போது எப்போதும் இதே வேலையாக இருக்கிறது.

நேற்றைய நிகழ்வில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் முழு பதிலையும் சட்டமன்றக் குறிப்பேட்டில் படித்தால் உணர்வீர்கள். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதை விடுத்து, எதிர்கட்சிகளை எள்ளி நகையாடுவதையே முதன்மையாக கொண்டு பேசினார்.

அதையும் பொறுத்திருந்தோம். தகுதி இல்லை, லட்சத்தில் ஒரு பங்கும் தகுதியில்லை என்று பேசும் போதும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நாங்கள் அவர்கள் பேசுவதை ஒப்புக் கொள்வது போலவும், சொரணையற்றவர்கள் போலவும் ஆகும்.

அன்று காலை 10 மணிக்கு அவை துவங்கியதிலிருந்தே, சும்மா திமுக அரசு என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் கூட மைனாரிட்டி திமுக அரசு என்றதையும், ஜெவை புகழும் போது தீய சக்தியை வீழ்த்திய மகாசக்தி என்றதையும், இது போன்ற இன்ன பிறவற்றையும் பொறுத்துக் கொண்டே அமர்ந்திருந்தோம்.

இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆட்சி அமைந்து. இப்போதும் ஆட்சியின் சாதனைகளை பேச முடியாமல், எங்கள் மீது வீண்பழி சுமத்தும் வேலையை எவ்வளவு நாள் தொடர்வார்கள் என தெரியவில்லை.

சட்டமன்ற குறிப்பேடுகளை புரட்டினால் தெரியும், திமுக ஆட்சிகாலங்களில் நடந்த விவாதங்கள். பீட்டர் அல்போன்ஸ், பாலபாரதி, சிவபுண்ணியம், வேலூர் ஞானசேகரன் ஏன், ஓ.பி.எஸ் போன்றோர் ஆட்சி மீது கடுமையான குற்றச்சட்டுகளை வைப்பார்கள், விவாதங்கள் நடக்கும்.

நீங்களே யாரையாவது அனுப்பினால், சட்டமன்ற குறிப்பேடுகளை எடுத்து காட்டுகிறேன். இப்போதைய சட்டமன்ற நிகழ்வை ஒரு நாள் நீங்களே வந்து பாருங்கள். உணர்வீர்கள்.

என்னை பொறுத்தவரை இதற்கான தீர்வு, நாடாளுமன்றம் போல், சட்டமன்ற நிகழ்வுகளை தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பினால் தான் இந்த கூத்துகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொகுதி மக்கள் பார்ப்பார்கள் என்ற பயம் இருந்தால் தான், ச.ம.உ-க்கள் புகழ்மாலைகளை விடுத்து விவாதத்தில் ஈடுபடுவார்கள். அமைச்சர்கள் இகழ்மாலையை விடுவார்கள்.
சபா நடுநிலையோடு செயல்படுவார்.

காலம் வரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக