பிரபலமான இடுகைகள்

திங்கள், 6 மே, 2013

லூர்துசாமி சார்'களால் தான் ஊர்களின் முன்னேற்றம்..." விர்ர்ர்ர்ர்ர்" என்று விசில் சத்தம் கேட்டால் பள்ளி வளாகமே அட்டென்ஷனுக்கு வரும். மாணவர்கள் மட்டும் அல்ல, ஆசிரியர்களும் தான். பி.டி என்றால் அப்படி டெரர்.

அது ஆண்டிமடம் அருகில் உள்ள வரதராஜன்பேட்டையில் இருக்கும் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி. கண்டிப்புக்கு பேர் போன பள்ளி. அந்தப் பள்ளிக்கே கண்டிப்பானவர் பி.டி மாஸ்டர் என் அன்பிற்குரிய ஆசிரியர் லூர்துசாமி சார்.

சிங்கம் போல சிலிர்ப்பான நடை. கம்பீரமான பார்வை. கணீரென்ற குரல். எதற்கும் அஞ்சாத நெஞ்சம். பள்ளியில் மட்டுமல்ல, ஊரிலும் அப்படிதான். பொதுப் பிரச்சினையில் முதல் குரல் அவருடையதாகத் தான் இருக்கும். தீர்வும் அவரால் தான் இருக்கும்.

முழுதும் கிறித்துவப் பெருமக்களால் நிறைந்த ஊர். பங்குத் தந்தைகள் தான் ஊரின் காட்ஃபாதர். ஆனால் அவர்களையும் "என்ன ஃபாதர் ?" என்ற கெடுபிடியான தோரணையில் தான் பேசுவார்.

ஊருக்கு வருகிற அமைச்சரோ, அதிகாரியோ ஊர் நலன் குறித்த முதல் கோரிக்கை இவருடையதாக இருக்கும். வேலை நடக்காவிட்டால், முதல் கேள்வியும் இவருடையதாகத் தான் இருக்கும்.

பள்ளியில் அவருடைய மாணவனாக இருந்த போதும் சரி, அந்தப் பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகும் சரி, அந்தப் பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்ற போதும் சரி அதே அன்பான அழைப்பு தான் " என்ன சங்கரு ".
ஊரில் முதியோர் இல்லம் அமைவதற்கும், கல்லறைத் தோட்டம் அமைவதற்கும், எங்களை முடுக்கி, முன் நின்று செய்தவர் அவர் தான். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்ச்சை புதுப்பித்தலில், மார்பிள் தளம் அமைத்த பெருமை அவருக்கே என பங்கு தந்தைகளின் பாராட்டு. பதவிகள் இல்லாமலே பணியாற்றியவர்.

ஒன்பது ஆண்டுகளாக விசில் சத்தம் கேட்கவில்லை பணி ஓய்வின் காரணமாக. ஆனால் அந்த கம்பீரக்குரல் ஓங்கி ஒலித்து வந்தது. இனி அந்தக் கம்பீரக் குரலும் கேட்காது.

போன வாரத்தில் என் மொபைலில் இருந்த அவரது தவறிய அழைப்பை, இனி திரும்ப அழைக்க முடியாது. அதை மனதில் இருந்தும் டெலிட் செய்ய முடியாது.

# லூர்துசாமி சார்'களால் தான் ஊர்களின் முன்னேற்றம்...