பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 30 ஜூன், 2013

மைக்செட் போடும் டாக்டர் அவர்களே !

மைக் பிடிக்கிறார் அண்ணன் பரிதி. "கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் டாக்டர் குப்புசாமி அவர்களே" அப்படிங்கிறார். குப்புசாமி" அண்ணே, நான் டாக்டர் இல்லை" என்கிறார். "எனக்கு தெரியாதா, பேசாம இருங்க சார். வரவேற்புரையாற்றிய டாக்டர்.ராமசாமி அவர்களே, கூட்டம் கேட்க வந்த டாக்டர்.பொதுஜனங்களே, பாதுகாப்பு கொடுக்கும் டாக்டர்.போலீஸ்களே, குறிப்பு எடுக்கும் டாக்டர். நிருபர்களே, மைக்செட் போடும் டாக்டர் அவர்களே" என்று நிறுத்தினார்.

யாருக்கும் எதுவும் புரியல. "என்னா நான் பேசறது கேட்டு கோவம் வருதா, அப்போ ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, டாக்டர்.ஜெயலலிதான்னா எனுக்கு எவ்ளோ கோவம் வரும். அவர் டாக்டர்னா, நீங்க எல்லாம் டாக்டர் தான்" அப்படின்னு அவர் முடிக்க எழுந்த சிரிப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது.

இன்னொரு கூட்டம். ஒரு அதிமுக எம்.எல்.ஏ பத்தி அவரு பேசினது இன்னும் நினைவிருக்கு. "கிராமத்தை சேர்ந்த எம்.எல்.ஏ மொத தடவையா சென்னை வந்தாரு. பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடடாரு. கடேசியா லெமன் ஜூஸ் வந்துது குடிச்சாரு நம்மாளு. பேரர் சிரிச்சாரு, காரணம் கேட்டாரு எம்.எல்.ஏ. அது பிங்கர் பவுல்." 

இப்படி அண்ணன் பரிதி எளிமையா, நகைச்சுவையா சொல்ல வந்த செய்திய கொண்டுப்போய் சேர்த்திடுவாரு. அவரு பேசறாருன்னா நல்ல கூட்டம் கூடும். மெட்ராஸ் தமிழில் பேசினாலும் தமிழ்நாடு முழுக்க அவருக்கு ரசிகர்கள் உண்டு.

91-96 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அவரது செயல்பாடு எந்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு உத்வேகம் தரும். தனி ஆளாக பெரும்படையை எதிர்த்தவர். அதற்காக தலைவரால் புகழப்பட்டவர்.

தூரத்திலிருந்து பார்த்து ரசித்தவரோடு பழகுகிற வாய்ப்பு கடந்த சட்டசபையில் தான் கிடைத்தது. எனக்கு முன் வரிசையில் இருந்தார். அன்பாக பழகுவார். சீரியஸா முகத்த வச்சிக்கிட்டு நம்ம கிட்ட எதாவது சொல்றார்னா, நாம ஜாக்கிரதையா இருக்கனும். அவர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள நாம வெடிச்சி சிரிச்சிடுவோம். 

அவ்வளவு நக்கல், நையாண்டி, கிண்டல் நிறைந்த உரையாடலா இருக்கும். சட்டசபையிலும் யாராவது கேள்வி கேட்டா குசும்பா பதில் சொல்லி சிரிக்க வைப்பாரு. சில கேள்விக்கு அவரு கண்ண உருட்டி, கைய அசைச்சி பதில் சொல்றத்துக்கு முன்னாடியே சிரிக்க வச்சிடுவாரு.

தலைவர் கலைஞர் அவர்களா இருந்தாலும், தளபதி ஸ்டாலின் அவர்களா இருந்தாலும் அண்ணன் பரிதி சகஜமா பேசுவாரு, உரிமையா பழகுவாரு. சட்டமன்றத்தில் அதிமுகவை குறித்த இவர் பேச்சினால், ஒரு தடவை பிரச்சினை வந்த போது தலைவர் கண்டித்தார். இவர் உடனே கிட்டே போய்,"இல்லப்பா. அளவுக்கு மீறி அவங்க பேசனதினால, அப்படி பதில் சொன்னேன்னு " சமாதானம் செய்தார்.

இப்படி இங்க ஃப்ரியா இருந்தவரு எனக்கென்னவோ அங்க தாக்குப் பிடிப்பாருன்னு தோணல.

# அண்னன் ஓ.பி.எஸ் மாதிரில்லாம் அவரால "பணிவா" இருக்க முடியாது...


வெள்ளி, 28 ஜூன், 2013

சார், முதல் லிஸ்ட்ல என் பேர் வரலை...

"ஹலோ, எம்.எல்.ஏங்களா ? "
" ஆமாம். சொல்லுங்க"
" நான் மதுமிதா பேசறேன் சார்"
"சொல்லுங்க"
"போன வருஷம் எங்க ஊர் சேந்தமங்கலத்துக்கு வந்தப்ப அட்மிஷன் வாங்கி தர சொல்லி கேட்டேன்ல சார், நான் தான் பேசறேன்"
"சரிம்மா நான் ஏற்பாடு பண்றேன்"

ஒரு முக்கியத் தோழரிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து, உள்ளூர் கழக நிர்வாகி மூலம் நிர்வாகத்திடம் சேர்க்க சொல்லி அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து மறுபடியும் மதுமிதாவிடமிருந்து போன்.

"சார், முதல் லிஸ்ட் போட்டுட்டாங்க. என் பேர் வரலை"
"அப்படியா, நிர்வாகத்தில் பேசறேம்மா"

கடிதம் கொடுத்து அனுப்பியவரிடம், கடிதம் சேர்ந்ததா என விசாரித்தேன். அவர் உள்ளூர் கழக நிர்வாகி வீட்டுக்கு அனுப்பியிருந்தார். நிர்வாகி உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததால் கடிதம் கல்வி நிறுவனம் சென்று அடையவில்லை.

கடிதம் கொடுத்த தோழரை நேரே கல்வி நிறுவனத்திற்கு சென்று இது சம்பந்தமாக பேசி வர அனுப்பினேன். நிர்வாகத்தில் இருக்கும் முக்கியமானவர் வெளியூரில் இருப்பதால் சந்திக்க இயலவில்லை. நான் போன் அடித்தேன் எடுக்கவில்லை.

அடுத்த நிலையில் இருந்தவர் இனி இடமில்லை என கை விரித்து விட்டார். மதுமிதா போன் செய்த போது விவரத்தை சொன்னேன். "பரவாயில்லை, வெயிட் பண்றேன். நீங்கள் நேரடியாக ஒரு முறை பேசி முயற்சி செய்யுங்கள்" என்றார்.


கழகப் பணியாக சென்னைக்கும் அரியலூருக்கும் ஷட்டில் ஆகிக் கொண்டிருந்த நிலையில் தினம் மதுமிதாவிடமிருந்து போன். அந்தக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியின் மொபைலோ not reachable, switched off. அவர் நிலைமை அப்படி. கடைசியாகக் கிடைத்தார், ஆயினும் பயனில்லை.

மதுமிதாவிற்கு போன் செய்தேன். " அவர்களிடம் பேசினேன். இனி இடமில்லை. அதனால் வேறு இடத்தில் சேர்ந்து விடுங்கள். அடுத்த வருடம் நான் நேரில் வந்து அட்மிஷன் வாங்கி தருகிறேன்"
" சரிங்க சார். அடுத்த வருடம் எப்படியாவது வாங்கி கொடுத்துடுங்க, அங்க படிக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை"
"கண்டிப்பாகம்மா. வருத்தப்படாதே"

அந்த அட்மிஷன் : ஏழாம் வகுப்பு.

# கேடில் விழுச் செல்வம் !



திங்கள், 24 ஜூன், 2013

ஒய்வுக்கு பின்பும் பணி தொடரட்டும் !

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு, பணி நிறைவு விழாவில் உறவினர்களும், உடன் பணியாற்றியவர்களும் வந்து பாராட்டுவது இயல்பு. 

ஆசிரியர் இளஞ்செழியன் ஓய்வு பெற்ற அன்று பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகளும் திரண்டு வாழ்த்தியது அவரது சிறப்பு. குடும்ப நண்பர் என்பதால் அண்ணன் என்றே இவரை அழைப்பேன்.

நான் படித்த பள்ளி, ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி. நான் சட்டமன்ற உறுப்பினரான நேரத்தில் இளஞ்செழியன் இப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியர் திரு.தமிழரசன் அவர்கள்.

த.ஆ தமிழரசன் அவர்கள் பெரிய மீசையோடு, உருட்டும் விழியோடு "டெரராக" கட்டுப்பாடிற்கு இலக்கணம். அண்ணன் இளஞ்செழியன் நெற்றி நிறைய திருநூறோடு, வாய் மணக்க திருவருட்பாவோடு "சாத்வீகமாக" இருப்பவர். இந்த முரண் சோடி அந்தப் பள்ளியை நல்ல தேர்ச்சி விகிதம் மற்றும் ஒழுக்கத்தோடு வழிநடத்தினர்.

அண்ணன் இளஞ்செழியன் அவர்களது மாமனார் மறைந்த சதாசிவம் அவர்கள் 1971ல் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அமைதியானவர். அதனாலேயும் இவரது தந்தையாராலும் திராவிட உணர்வாளர். ஆனால் இது குறித்து யாரும் குறை சொல்லாத வகையில் பணியில் சிறப்பானவர்.

ஓர் ஆண்டுக்கு முன் பணி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர் ஆனார். தற்போது பணி நிறைவு பெற்ற போது அந்தப் பள்ளியில் இருந்து நூற்றைம்பது கி.மீ பயணம் செய்து வந்து நிகழ்ச்சியில் அவ்வூர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினர். அந்த அளவிற்கு அங்கும் நிறைவான பணி.

அதிலும் B.E படித்த 25 வயது மகனை ஒரு விபத்தில் இழந்த நிலையிலும், தன் ஆசிரியர் பணியை குந்தகமின்றி சிரமேற் கொண்டு செய்தது தான் அவரது கடமையின் உச்சம்.

பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவரதுப் பணி சிறப்புகளை கூறி வாழ்த்தினேன், ஓய்வு அரசுப் பணிக்கு தான், எனவே பொதுப்பணிக்கு வரவேண்டும் என அழைத்தேன். அவர் நன்றி கூறினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்.

" எனது மாமனார் கலைஞர் முதலமைச்சராக இருந்தப் போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நான் 1989ல் தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் பணிக்கு சேர்ந்தேன். அவர் காலத்தில் நல்லாசிரியர் விருது பெற்றேன். ஆனால் அதை விட பெருமை, நான் ஓய்வு பெறும் போது பணியாற்றிய பள்ளி தான்."

பணி உயர்வு பெற்றப் போது கவுன்சிலிங்கில் பக்கத்து மாவட்டங்களில் பல பள்ளிகள் காலியாக இருந்தன. ஆனால் அவர் தேர்வு செய்தது 150 கி.மீ தூரத்தில் இருந்த அந்த பெருமைக்குரியப் பள்ளி : அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை.

# பணி தொடரட்டும் !



நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க !

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை அவர் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அவரது மேசை மேல் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் கிடந்தது. புரட்டிப் பார்த்தேன். அரக்கோணம் அருகே ஒரு நகர்.

" ஏம்பா சென்னைக்கு பக்கம்னா அரக்கோணம் தானா ? " எனக் கேட்டேன். " இல்லம்மா, அஙக மார்க்கெட் நல்லாருக்கு. அதனால தான்" என்றார். " அட, அரக்கோணத்தில அவ்வளவு கிராக்கியா ?"

" நீ ஒரு மனை வாங்கு, இரண்டு வருஷம் கழிச்சி வித்துட்டு லாபம் எவ்வளவுன்னு சொல்லு" என்றார் ஸ்ரீதர். "கிண்டல் பண்ணாதம்மா" என்றேன். "இருக்கறத அட்வான்ஸ் கொடும்மா" என்றார்.

சட்டை பாக்கெட்டை பார்த்தேன், அய்யாயிரம் தான் இருந்தது. மனை விலை இரண்டு லட்சத்தை தொடும். "சரி, அடுத்த முறை தர்றேன்" என்றேன். "பரவாயில்ல, இருப்பதைக் கொடு" என்றார். அய்யாயிரத்தை கொடுத்தேன்.

அரசியல் பணி நெருக்கடியில் அவரது அலுவலகம் செல்ல நேரம் வாய்க்கவில்லை. ஆறு மாதம் கழித்து ஒரு நாள் போன் செய்தார். "சிவா, அந்த மனை நல்ல ரேட் வருது. கேட்குறாங்க, கொடுத்துடலாமா ?" என்றார். " சரி 
ஸ்ரீதர்" என்றேன். "எவ்வளவுன்னா கொடுக்கலாம் ?" " உன் இஷ்டம்  ஸ்ரீதர்".

அடுத்த முறை சென்னை வந்த போது அழைத்தார். ஒரு கவரை கொடுத்தார். பிரித்து பார்த்தால் ஒரு லட்ச ரூபாய். மயக்கம் வராதக் குறை. "என்ன இது" என்றேன். "அந்த மனையில் கிடைத்த லாபம்" என்றார்.

எனது கல்லூரி நண்பர் 
ஸ்ரீதர். சிவில் இன்ஜினியர். படித்து முடித்தவுடன் சென்னையில் கட்டுமானத் தொழில் துவங்கிவிட்டார். பல கட்டிடங்களை கட்டி ஒரு வெற்றிகரமான பில்டராக பரிணமித்து வருகிறார்.

எங்களோடு கல்லூரியில் படித்த நண்பர்கள் பலர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். அவர்கள் சென்னையில் வீடு வாங்குவதென்றால் ஶ்ரீதரை தான் அணுகுவார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்.

இது போல பல நண்பர்கள் இவர் கட்டும் ஃபிளாட்களில் முதலீடு செய்து நாற்பது, அய்ம்பது லட்சம் லாபம் பார்த்தவர்கள் உண்டு.

சில வருடங்கள் கழித்து ஒரு நண்பரோடு அவரது அலுவலகம் சென்றிருந்தேன். ஒரு புது பிராஜக்ட் குறித்து தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நண்பர் ,"சிவசங்கர் இதுவரை சென்னையில் லாட்ஜ்க்கு கொடுத்த வாடகைக்கு வீடு வாங்கியிருக்கலாம். இவருக்கு ஒரு வீடு கொடுங்க" என கிண்டலடித்தார். உடனே ஶ்ரீதர் "இரண்டு வருஷமாவே நான் சொல்றேன். சிவா கேட்கல. இப்ப சரின்னு சொல்லட்டும், ஒரு பிளாட் எடுத்துக்கட்டும். லாபமே வேண்டாம்" என்றார்.

இப்போ அய்ம்பதினாயிரம் அட்வான்ஸ். அவரே பேங்கிற்கு பேசினார். அவரே ஆடிட்டரை பார்த்தார். அவரே பேப்பர் தயார் செய்தார். அவரே லோன் சேங்ஷன் பெற்றார். ஒரு நாள் சாவியை கையில் கொடுத்துவிட்டார். வேறு யாருக்காவது விற்றிருந்தால் இருபது லட்சமாவது லாபம் பார்த்திருக்கலாம் அவர். இது எனக்கு மட்டுமல்ல, பல நண்பர்களுக்கும்.

அந்த 
ஸ்ரீதர் இல்லத்தில் ஒரு விழா. குடும்பத்தோடு கலந்து கொண்டு வாழ்த்தினேன். அவரது துணைவியார் விருந்து உபசரித்தார். அப்போது அவரிடம் சொன்னேன்," இருபது வருடம் கழித்து இப்போதாவது ஶ்ரீதருக்கு இந்த எண்ணம் வந்ததே, மகிழ்ச்சி". 

ஸ்ரீதர் துணைவியார் " இப்போ இல்லன்னாலும் வருத்தம் இல்லைங்க. அவரு சந்தோஷமா இருந்தா போதும். எத்தனை பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பாரு, அவங்க சந்தோஷம் தாங்க பெரிசு" என்றார்.

இருபது வருடம் கழித்து, மற்றவர்களுக்கு எல்லாம் வீடு கட்டிக் கொடுத்த ஸ்ரீதருக்கு வந்த "அந்த எண்ணம்", இப்போது தான் சொந்தமாக ஒரு ஃபிளாட். அதற்கான புதுமனை புகுவிழா தான் அது.

# நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க !



( ஸ்ரீதர் தன் குடும்பத்தினர் மற்றும்  நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் )

சனி, 15 ஜூன், 2013

டிரஸ்ஸு கண்டு தள்ளாமை வேண்டும்

மலைக்கோட்டை தொடர்வண்டி வழக்கம் போல் லேட். எப்பவுமே லேட், இன்னும் இழுக்கும் போல...

அரியலூர் ரயில் நிலையம். வழக்கத்தைவிட கூட்டம் குறைவு தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார்ந்திருந்தார்கள்.

பத்து நிமிடம் கடத்தினேன், முடியவில்லை. நம் வர்க்கத்திற்கான இணைய நோய் வாட்டியது. Ipad எடுத்து தற்சமய செய்திகளை பார்த்தேன். அப்புறம் முகநூலில் மூழ்கினேன்.

காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. நாள் முழுதும் ...18 திருமணம் மற்றும் மற்ற நிகழ்வுகளுக்காக 300 கி.மீ அலைந்த அசதி தலை தூக்கியது.

சுற்றிலும் பார்த்தேன். இரண்டு பென்ச் தாண்டி ஒருவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். ரயில் வர நாற்பத்தைந்து நிமிடம் ஆகும் என அறிவிப்பு.

மற்ற பென்ச்களில் யாரும் இல்லை. கிரானைட் பென்ச் படுக்க தூண்டியது. கையிலிருந்த பையை தலைக்கு வைத்து சாய்ந்தேன். கூட இருந்த நண்பர் ஒரு பென்சில் சாய்ந்தார்.

முகநூலை தூக்கம் வென்றது. சிறிது நேரத்தில் 'டொக் டொக்' சத்தம். இரு காவலர்கள் தங்கள் பணியை நினைவுப்படுத்த ஒவ்வொரு பென்சாக தட்டிக் கொண்டு வந்தனர்.

எனக்கு முன் படுத்திருந்தவரை எழுப்பி "எங்கே" என்றனர். "சென்னை" என்றார். "தூங்கிடாதீங்க" என சொல்லி என்னை பார்த்தனர். "சென்னை, ராக்போர்ட்" என்றேன். தலையசைத்து, அடுத்த பென்சை நோக்கி நகர்ந்தனர்.

சிறிது நேர தூக்கத்திற்கு பிறகு ரயில் வரும் அறிவிப்பு. அரக்க பரக்க எழுந்தேன். அடுத்த பிளாட்பாரத்தில் ரயில் வந்தது. ஓடி பெட்டியில் ஏறினேன். இன்னும் இரு வட இந்தியர்களும்.

வாசலிலேயே பயணச்சீட்டு பரிசோதகர். அவர்களையும் பார்த்தார், என்னையும் பார்த்தார். அவர்கள் அலுவலகம் செல்பவர்கள் போல இன்சர்ட் செய்து, பவுடர் போட்டு பளிச் என்று இருந்தனர். இரவு 12.30.

அவர்கள் பயணச்சீட்டையும் Pancard-ம் காட்டினார்கள். சார்ட்டில் டிக் அடித்தார். நான் பயணச்சீட்டையும் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டையையும் காட்டினேன்.

அடையாள அட்டையை கொஞ்ச நேரம் பார்த்தார், திருப்பி திருப்பி பார்த்தார். பிறகு என்னை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தார். கலர் பேண்ட் சர்டில், தோள் பையோடு இருந்தேன். அலைச்சல் மற்றும் தூங்கி எழுந்ததில் தலை கலைந்து அயர்வாக இருந்தேன்.

" இது என்ன கார்டு ?" என்றார். " மேலேயே தமிழ், இங்கிலீஷில் போட்டிருக்கு" என்றேன். படித்தார், அதிலிருந்த படத்தையும் என் முகத்தையும் ஒப்பிட்டு பார்த்தார்.

" ஹிஹி. இந்தக் கார்ட பார்த்ததில்ல, இந்த டிரஸ்ல எதிர்பார்க்கல" என்றார். "ஹிஹி" என்றேன். வேற என்னத்த சொல்ல...

# டிரஸ்ஸு கண்டு தள்ளாமை வேண்டும் !
 
 

வியாழன், 6 ஜூன், 2013

90 சொற்கள் - ஒரே மந்திரச் சொல் !

1. வள்ளுவர் கோட்டம்
2. பராசக்தி
3. 108
4. அண்ணா நூற்றாண்டு நூலகம்
5. திராவிடம்
6. எழுத்து
7. சமத்துவபுரம்
8. பூம்புகார் கலைக்கூடம்
9. முரசொலி
10. உழைப்பு
11. அண்ணா அறிவாலயம்
12. பெண்கள் சொத்துரிமை சட்டம்
13. மனோகரா
14. குறளோவியம்
15. கோயம்பேடு பேருந்து நிலையம்
16. கண்ணொளி திட்டம்
17. குளித்தலை
18. உழவர் சந்தை
19. குடிசை மாற்று வாரியம்
20. செம்மொழி
21. திருக்குவளை
22. திருமண உதவி திட்டம்
23. தொல்காப்பிய பூங்கா
24. கைரிக்‌ஷா ஒழிப்பு
25. அய்யன் வள்ளுவர் சிலை
26. இந்தி ஆதிக்க எதிர்ப்பு
27. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
28. சிற்றுந்து
29. விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
30. இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு
31. அடையாறு தொல்காப்பியப் பூங்கா
32. கோபாலபுரம்
33. நெஞ்சுக்கு நீதி
34. பகுத்தறிவு
35. புதிய தலைமைச் செயலகம்
36. பாலைவன ரோஜாக்கள்
37. சமச்சீர் கல்வி
38. பாளையங்கோட்டை சிறை
39. கல்லக்குடி
40. அருந்ததியருக்கு இடஒதுக்கீடு
41. வசனம்
42. அண்ணா மேம்பாலம்
43. மெட்ரோ ரயில்
44. சங்கத் தமிழ்
45. ஆதிதிராவிடருக்கு கான்கிரீட் வீடுகள்
46. கலைஞர் காப்பீட்டு திட்டம்
47. மிசா
48. விவசாயக் கடன் ரத்து
49. பொன்னர் சங்கர்
50. மந்திரிகுமாரி
51. சேதுசமுத்திர திட்டம்
52. காகிதப்பூ
53. பதினோரு லட்சம்
54. அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
55. ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
56. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
57. மண்டல் கமிசன்
58. இலவசத் தொலைக்காட்சி
59. சுயமரியாதை
60. ராஜக்குமாரி
61. பேருந்து நாட்டுடமை
62. இளமைப் பலி
63. துறைமுகம்
64. மிகப்பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
65. கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
66. சைதாப்பேட்டை
67. உதயசூரியன்
68. பெரியார் மறைவுக்கு அரசு மரியாதை
69. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
70. கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு
71. மாநில சுயாட்சி
72. நமக்கு நாமே திட்டம்
73. ஆதரவற்ற சிறார்களுக்கு கருணை இல்லம்
74. முதல்தலைமுறை மாணவருக்கு இலவச கல்வி
75. நீதிகேட்டு நெடும்பயணம்
76. தென்பாண்டி சிங்கம்
77. 12 முறை சட்டமன்ற உறுப்பினர்
78. சென்னை
79. டைடல் பார்க்
80. தொழுநோய் மறுவாழ்வு இல்லம்
81. வருமுன் காப்போம்
82. அய்ந்து முறை முதல்வர்
83. அண்ணா கவிதாஞ்சலி
84. தலைவர்
85. உடன்பிறப்பு கடிதம்
86. மறக்கமுடியுமா ?
87. ஆகஸ்ட் 15ல் கொடியேற்றும் உரிமை
88. திருவாரூர்
89. மனுநீதி நாள்
90. தமிழ்

இந்த 90 சொற்கள் மற்றும் சொற்றொடர்களில் எதை ஒன்றை சொன்னாலும் "ஒரு சொல்" தான் நினைவுக்கு வரும்.....

# அது எமையெல்லாம் ஆட்டுவிக்கும் "மந்திரச் சொல்" !



இளைய நிலா பொழிகிறது...

" ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " பாலு அழைத்தது ஓராயிரம் நிலவை தான், தன் முதல் தமிழ் பாடலில்.

ஆனால் பல்லாயிரம் நிலவை கடந்துவிட்டார். 1969ல் தமிழ் திரை உலகில் நுழைந்தவர் இன்றும் நம்மை பரவசப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்.

பாலு... இப்படி தான் இசைஞானி இவரை வாய் நிறைய அழைப்பாராம். ராஜாவின் மனதில் இருப்பதை உணர்ந்து அப்படியே வெளிப்படுத்துவதில் பாலு தான் டாப். எந்த உணர்ச்சி வேண்டும், குரலிலேயே வெளிப்படும்.

ஒரு கால கட்டத்தில் வரும் படங்கள் எல்லாம் இளையராஜா இசையாக இருக்கும். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் எஸ்.பி.பி-யாக இருக்கும். அதுவும் வெரைட்டியாக. உடன் ஜானகி குரல் என்றால் சொல்லவே வேண்டாம். விருந்து தான்.

பாலுவின் குரல் வளத்தை, நயத்தை, பலத்தை உணர ஒரு படம் போதும். " பயணங்கள் முடிவதில்லை".

மனதை வருட , " இளைய நிலா பொழிகிறது..." இரவில் இந்த இசை தாலாட்டை கேட்டால், பாலுவின் குரலில் நிலவு பொழிந்து, இதயம் நனைந்து...

இனிமையான டியுயட்க்கு " சாலையோரம் சோலை ஒன்று " பாடல். " பாவை இவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும், கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்" கேட்டு பாருங்கள பாலுவின் குரலை...

உற்சாகமூட்டும் குத்து பாடலுக்கு " ஏ ஆத்தா, ஆத்தோரமா வார்றியா ",
மென்மையான துள்ளலாக " தோகை இளம் மயில் " ,
சோக உணர்வுக்கு " வைகறையில் வைகை கரையில்".....

குரலின் நுட்பங்களை வெளிப்படுத்தும் , " ராக தீபம் ஏற்றும் நேரம் " பாடல். கேட்கும் போதே அந்த இருமல் நம்மை தொற்றிக் கொள்ளும்... " மணியோசை கேட்டு எழுந்து"

வெவ்வேறு நடிகர்களுக்கு வித்தியாசம் காட்டுவது ஒரு புறம், ஒரே நடிகருக்கே உணர்வில் வித்தியாசம் காட்டுவது ஒரு புறம், ஒரு படத்தின் பாடல்களிலேயே இத்தனை வித்தியாசம்...

# பாலு, உம் பயணங்கள் முடிவதில்லை !



( 04.06.2013 எஸ்.பி.பி பிறந்தநாள் )

புதன், 5 ஜூன், 2013

பிரமிக்க வைக்கும் தலைவர் – கலைஞர்...

( 03.06.2013 அன்று விடுதலை கலைஞர்-90 பிறந்த நாள் மலரில் வெளிவந்துள்ள என் படைப்பு )


அகவை 90. ஆனால் இன்னும் இவர் இளைஞர் தான். தூரத்திலிருந்து பார்த்து பார்த்து பிரமித்த தலைவரை கிட்டே நெருங்கி பார்க்கும் போது இன்னும் பிரமிப்பு கூடிக் கொண்டே போகிறது.

தமிழை எழுத்துக் கூட்டி படித்தக் காலத்திலிருந்து, முரசொலியில் அவர் எழுத்துக்களை படித்து தான் என் தமிழ் வலுப்பெற்றது. அப்போதிருந்தே அவர் எழுத்து, பேச்சு, கொள்கை, அரசியல், நடவடிக்கைகள் பிரமிக்க வைக்கும்.

வழக்கமாக தூரத்திலிருந்து பார்த்து பிரமித்தவர்களை கிட்டே நெருங்கும் போதும் சில பிம்பங்கள் நொறுங்கும், பார்வைகள் மாறும், உயரம் குறையும். ஆனால் தலைவர் கலைஞரிடத்தில் இந்த நிலை மாறும்.

நான் பள்ளியில் படித்தப் போது, கல்லூரியில் படித்தப் போது, அரசியலுக்கு வந்தப் புதிதில் எப்படிப் பார்த்து வியந்தேனோ, அதில் கிஞ்சிற்றும் குறைவில்லாமல் இன்றும் வியக்கிறேன்.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக மாவட்ட செயலாளரான போது பார்த்ததைவிட, கடந்த சட்டப்பேரவையில் ச.ம.உ ஆக பணியாற்றியப் போது
பார்த்ததைவிட, இப்போது இன்னும் நெருக்கத்தில் பார்க்கும் வாய்ப்பு.

90-லும் குறையா உழைப்பு, வற்றாத எழுத்து, தொடர்ந்து கற்கும் ஆர்வம், தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பாங்கு, நேரந் தவறாமை, பதில் சொல்லத் தயங்காமை, பிரச்சினைகளை கண்டு ஓடி ஓளியாமை என வியக்க வைக்கிறார்.

இதைத் தாண்டி அவரது எளிமை. பொது வாழ்க்கையில் இருக்கும் யாரும் கைக் கொள்ள வேண்டியது...

கடந்த 1996 தி.மு.க ஆட்சிக்காலம்....
இரவு நேரம். சென்னையின் ஒரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மர் சீர்கெட்டதால் என தெரியவருகிறது. வழக்கம் போல் ஆற்காட்டாருக்கு அர்ச்சனை நடக்கிறது. மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், போனை யாரும் எடுக்கவில்லை.

ஒரு நடுத்தர வர்க்கத்து பெண் முதலமைச்சர் இல்ல தொலைபேசி எண்ணை தேடுகிறார். கிடைக்கிறது. தொடர்புகொள்கிறார், யாராவது உதவியாளர்கள் தொலைபேசியை எடுப்பார்கள் என்ற எண்ணத்தோடு.

" வணக்கம். கருணாநிதி பேசுகிறேன் " என்ற கனிவான கம்பீரக் குரல். இந்தப் பெண் திகைத்துப் போகிறார். தடுமாறி விபரத்தை சொல்கிறார். எந்தப் பகுதி என்று விபரம் கேட்டுக் கொள்கிறார் தலைவர் கலைஞர். உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு சீர் செய்தது தனிக்கதை.

இன்று முதல்வர் இல்ல தொலைபேசி எண் கிடைத்தால், யாராவது பேச முன்வருவார்களா தைரியமாக ? நிச்சயம் தற்போதைய முதல்வர் எடுக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வரிடம் அல்ல, உதவியாளர்களிடம் பேசவே பயப்படுவார்கள் பொதுமக்கள் இன்று .

ஆறு மாதங்களுக்கு முனபாக.....

ஒரு நாள் அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் வாகனம் நுழைகிறது. தலைவரைக் கண்டக் கழகத் தோழர்கள் வாழ்த்தொலி எழுப்பி ஆரவரிக்கிறார்கள். தலைவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து கையசைத்து அன்பை ஏற்றுக் கொண்டு, அறிவாலயத்திற்குள் நுழைகிறார்.

“ தாத்தா வணக்கம்” என ஒரு மழலைக் குரல், திரும்பிப் பார்க்கிறார். தகப்பனின் கையிலிருந்த அய்ந்து வயதுக் குழந்தை கையசைக்கிறது. அவர்களை அழைத்து வரச் சொல்லி குழந்தையிடம் அன்பொழுக விசாரிக்கிறார்.

நீலகிரியிலிருந்து வந்தக் குடும்பம் மூன்று நாட்களாக தலைவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள அறிவாலயம் வந்துக் காத்திருக்கிறார்கள். தலைவர் உடல் நலம் காரணமாக மூன்று நாட்களும் அறிவாலயம் வரவில்லை, வாய்ப்பு கிட்டவில்லை. அன்றும் உடல் நலம் சரியில்லை தான், அவசரப்பணி நிமித்தமாக வந்திருந்தார்.

புகைப்படக் கலைஞரை வரச்சொல்லி அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைக்கிறார். அந்தக் குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் தலைவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது வாழ்நாள் கனவு. இனி அந்தப் படம் அவர்கள் குடும்பத்திற்கு வாழ்நாள் சாதனை.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல்...

வாக்குப் பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு மாத இடைவெளி. அப்போது தலைவரை சந்திக்கிறேன். மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வெற்றி நிலவரம் குறித்து எடுத்து சொன்னேன், கேட்டுக் கொண்டார். “நான் போட்டியிட்ட குன்னம் தொகுதி நன்றாக உள்ளது, நாம் வெற்றி பெறுவோம்” என்றேன்.

“ உன்னைப் பார்த்தாலே தெரியுதய்யா, நல்லாதான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு என்னை மேலும் கீழும் பார்த்தார். முதலில் எனக்கு புரியவில்லை. பிறகு தான் புரிந்தது, தேர்தலில் அலைச்சலால் ஏற்படும் நலிவு என் உடலில் தெரியவில்லை என்பதை அப்படி நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து சந்திக்க சென்றேன். தாமதமாக வாக்கு எண்ணிக்கை முடித்ததால், இரவு தான் தலைவரை சந்திக்க செல்ல முடிந்தது. கழகம் ஆட்சியை இழந்து, எதிர்கட்சி அந்தஸ்த்தையும் இழந்திருந்த மிக சங்கடமான சூழல். வேறு தலைவராக இருந்திருந்தால் சந்தித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தலைவர் வரச் சொன்னார். ஓய்வுக்கு செல்ல ஆயத்தமாக கைலியும் பனியனும் அணிந்திருந்தார். வெற்றி விபரத்தை சொன்னேன், வாழ்த்தினார். அப்போது திருச்சியில் போட்டியிட்ட அன்பில் பெரியசாமியும், திருவெறும்பூரில் போட்டியிட்ட கே.என்.சேகரனும் வந்தார்கள்.

“ என்னய்யா எப்பவும் ஜெயிக்கற தொகுதி, என்னாச்சு ?” எனக் கேட்டார் தலைவர். தோல்விக்கான காரணத்தை சொன்னார்கள். அதில் உள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டார்.

2006-ல் வெற்றி பெற்று வாழ்த்து பெற சென்ற போது, முதல்வராக பொறுப்பேற்கும் மகிழ்ச்சி சூழலில், என்ன தெளிவோடு இருந்தாரோ, அந்த தெளிவோடு தான் 2011 தோல்வியின் போதும் தலைவர் கலைஞர் இருந்ததை பார்த்தேன்.



# எளிமையான ஆனால் வலிமையான தலைவர் !




( விடுதலை கலைஞர்-90 பிறந்த நாள் மலரை, பெரியார் திடலில் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக் கொள்ளும் காட்சி )

திங்கள், 3 ஜூன், 2013

தமிழை மறவாமல், சுவாசமாய் கொண்டிருக்கும் டாக்டர்....

 
விழா துவங்கியது. இறை வணக்கம்.

" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே "
என்று கல்வியின் பெருமையை வலியுறுத்தி பாடல் ராகத்தோடு பாடப்பட்டது.

முன் வரிசையிலிருந்தவர் ஆச்சரியத்தோடு கேட்டார்," இது என்ன பாட்டு"

 " புறநானூறு"

" எங்கே புடிச்சீங்க"

 " ஒரு ஃபோன் தான். நம்ம கூகுள் சொல்லிட்டாரு"
 


விழா நடந்த இடம் : தமிழ்துறை அல்ல, செட்டிநாடு மருத்துவ பல்கலைக் கழகத்தின் Reproductive medicine துறை.

அந்த கூகுள் : அந்த துறையின் தலைவர் Dr. பாண்டியன்.

பேசிக் கொண்டவர்கள் : அங்கு பணிபுரியும் டாக்டர்கள்.
 


விழாவில் பேசியவர்கள் அத்தனை பேரும் ஆங்கிலத்தில் உரையாற்றினாலும் "வணக்கம்" என்றே தமிழில் துவங்கினார்கள். திருக்குறளை மேற்கோள் காட்டினார்கள். இது மருத்துவக் கல்லூரியில் நடப்பது வித்தியாசமானது.

" ஃபோன் செய்தால் "வணக்கம்" சொல்லி நம்மை தமிழில் பேச வைப்பார் டாக்டர்.பாண்டியன். அவர் தமிழ் பற்று அப்படி" சொன்னவர் நிர்வாக அலுவலர் மனோகர்.

செயற்கை கருத்தரிப்பு துறையின் பிதாமகன்கள் பேராசிரியர். எட்வர்ட் மற்றும் டாக்டர்.ஸ்டெப்டோ . நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த துறையில்.

பேராசிரியர். எட்வர்ட் அவர்களுடன் பணிபுரிந்த இந்திய மருத்துவர் டாக்டர். பாண்டியன். உலகம் முழுவதும் நடைபெறும் இந்தத் துறையின் கருத்தரங்குகளில் பங்கு பெற அழைக்கப் படுபவர்களில் முதன்மையானவர்.

சென்னை மருத்துவக் கல்லூரி, அப்போலோ மருத்துவமனை என பல இடங்களில் IVF கிளினிக்குகளை துவக்கி வைத்தவர். இந்தியாவின் முதல் விந்து வங்கியை துவங்கியவர் என பல முதல்'களுக்கு சொந்தக்காரர். பல விருதுகள் இவர் வீட்டு அலமாரியில். அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவர் அறையில் சந்தித்தேன். மேசையில் பெரிய பெரிய மருத்துவப் புத்தகங்களுக்கு மேல் "திருக்குறள்". " தினம் ஒரு திருக்குறள் படித்துவிட்டு தான் அன்றைய பணிகளை துவங்குவேன்" .

" இவ்வளவு தமிழ் ஆர்வத்தோடு இருக்கிறீர்களே, மகிழ்ச்சி"
" அப்படியே உணர்வோடு கலந்தது "
" சொந்த ஊர் எது ?"
" காஞ்சிபுரம் அருகே ஒரு சின்ன கிராமம், நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பிறந்த கிராமம்"
" அப்படியா, சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் ஆயிற்றே !"
" ஆம். அவர் எனது பெரியப்பா "

தனது மருத்துவத் துறையின் உச்சத்திற்கு போனாலும், தமிழை மறவாமல், சுவாசமாய் கொண்டிருக்கும் டாக்டர் மன்னிக்க, மருத்துவர் பாண்டியன்.
இவரை கூகுள் என்று சொன்னவர் டாக்டர். ராதா . டாக்டர்.பாண்டியனின் துணைவியார், இதே துறையில் பணியும் பேராசிரியர். யாரை பார்த்தாலும் வாஞ்சையோடு டயட் டிப்ஸ் தான். பல மொழியில் பேசி, வருகை தரும் நோயாளிகளின் மனம் கவர்ந்தவர்.

குழந்தையில்லாமல் வாடும் பல தம்பதிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் தம்பதி. அதே சமயத்தில் மருத்துவ நெறிமுறைகளை ஒரு நூலும் தவற விடாதவர்கள். வர்த்தக ரீதியில் செல்வதை விரும்பாமல், கல்வியில், அடுத்தவர்களை வளர்த்துவிடுவதில் ஆர்வம் காட்டும் மருத்துவர்கள்.

# மருத்துவர்கள் பாண்டியன், ராதா வாழ்க, இன்னும் பல குடும்பம் தழைக்க....
 
 

ஞாயிறு, 2 ஜூன், 2013

தினமும் பாடும் எனது பாடல் காற்றோடும் ஆற்றோடும்

மெல்ல திறந்தது கதவு - கல்லூரியில் சேர்ந்து பார்த்த முதல் படம். இளையராஜா எம்.எஸ்.வியோடு இணைந்து இசை அமைத்த படம். ஊருசனம் தூங்கிருச்சி, வா வெண்ணிலா என அனைத்து பாடலும் ஹிட்.


"சின்னச்சின்ன வண்ணக்குயில்" பாடல் கல்லூரி ஹாஸ்டலில் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு, திரும்ப திரும்ப போடப்பட்ட எண்ணிக்கை புரொஜெக்டர் ஆப்பரேட்டருக்கே தெரியாது. இந்த பாடலின் இடையே வரும் "ஒஹஹோ ஒஹஹோ" ஹம்மிங் அடுத்த ஹாஸ்டல் வரை எட்டும், ஒட்டு மொத்த மாணவர்களின் குரலில்...


மௌனராகம் திரைப்படத்தில் இதை தவிர அனைத்து பாடல்களும் ஹிட். அதிலும் 'மன்றம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா' பாடப்படாத கல்லூரி மேடைகளே கிடையாது. உருகி உருகிப் பாடுவார்கள் ராஜாவின் இசையில் உருகி.


கடலோரக் கவிதைகள். முட்டம் சின்னப்பதாஸாக மாறி ' அடி ஆத்தாடி இளம் மனசொன்னு' பாடலை ஹாஸ்டல் பாத்ரூம்களை ரெக்க்கார்டிங் தியேட்டராக பாவித்து ஹிட் அடித்து திரிவார்கள் மாணவர்கள். ராஜாவின் கைங்கர்யம். 'போகுதே போகுதே, கொடியில மல்லிகப்பூ' பாடாத வாய்கள் இல்லை.

கல்லூரி சூழலில் 'மெல்ல திறந்தது கதவு', நகர சூழலில் 'மௌனராகம்', கடலோர சூழலில் 'கடலோரக் கவிதைகள்' இப்படி எந்த படமாக இருந்தாலும் பாடல்கள் ஹிட்டடித்த ராஜா தன் களமான கிராமத்து கதை அமைந்து விட்டால் விடுவாரா.


'அம்மன் கோவில் கிழக்காலே' ஒவ்வொரு பாடலும் சொல்லி வைத்து ஹிட். பீட்டர் விடும் சென்னை மாணவர்களும் பாடிய பாடல்கள். 'சின்ன மணிக்குயிலே' அப்போது திருமண வீடுகளின் தேசியகீதம். 'பூவ எடுத்து ஒரு மாலை, உன் பார்வையில் ஓராயிரம், காலை நேரப் பூங்குயில்' காதுகளில் இன்றும் ஒலிக்கிறது.


அவர் கையிலிருக்கும் வாத்தியம் மட்டும் எப்படி தனி ஒலி தருகிறது, எப்படி வித்தியாசமாய் இசைக்கிறது, அனைவரையும் கட்டிப் போடுகிறது....


வீட்டை பிரிந்து கல்லூரி விடுதியில் தங்கிய எங்களுக்கெல்லாம் அப்போதைய தோழர் ராஜா தான். இசை போட்டியில் பங்கேற்கும் நண்பர்கள், காதல் மன்னர்களாய் திரிந்தவர்கள், தனியாய் படிப்பவர்கள், தத்துவவாதிகள் என எல்லோருக்கும் அப்போது அவர் தான் உற்ற துணை.
இன்றும் அவர் தான் உற்ற துணை.


"காலை நேர பூங்குயில் கவிதை பாட தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாக கேட்குதே
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணொளி"


# தினமும் பாடும் எனது பாடல்
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்....