பிரபலமான இடுகைகள்

திங்கள், 3 ஜூன், 2013

தமிழை மறவாமல், சுவாசமாய் கொண்டிருக்கும் டாக்டர்....

 
விழா துவங்கியது. இறை வணக்கம்.

" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே "
என்று கல்வியின் பெருமையை வலியுறுத்தி பாடல் ராகத்தோடு பாடப்பட்டது.

முன் வரிசையிலிருந்தவர் ஆச்சரியத்தோடு கேட்டார்," இது என்ன பாட்டு"

 " புறநானூறு"

" எங்கே புடிச்சீங்க"

 " ஒரு ஃபோன் தான். நம்ம கூகுள் சொல்லிட்டாரு"
 


விழா நடந்த இடம் : தமிழ்துறை அல்ல, செட்டிநாடு மருத்துவ பல்கலைக் கழகத்தின் Reproductive medicine துறை.

அந்த கூகுள் : அந்த துறையின் தலைவர் Dr. பாண்டியன்.

பேசிக் கொண்டவர்கள் : அங்கு பணிபுரியும் டாக்டர்கள்.
 


விழாவில் பேசியவர்கள் அத்தனை பேரும் ஆங்கிலத்தில் உரையாற்றினாலும் "வணக்கம்" என்றே தமிழில் துவங்கினார்கள். திருக்குறளை மேற்கோள் காட்டினார்கள். இது மருத்துவக் கல்லூரியில் நடப்பது வித்தியாசமானது.

" ஃபோன் செய்தால் "வணக்கம்" சொல்லி நம்மை தமிழில் பேச வைப்பார் டாக்டர்.பாண்டியன். அவர் தமிழ் பற்று அப்படி" சொன்னவர் நிர்வாக அலுவலர் மனோகர்.

செயற்கை கருத்தரிப்பு துறையின் பிதாமகன்கள் பேராசிரியர். எட்வர்ட் மற்றும் டாக்டர்.ஸ்டெப்டோ . நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த துறையில்.

பேராசிரியர். எட்வர்ட் அவர்களுடன் பணிபுரிந்த இந்திய மருத்துவர் டாக்டர். பாண்டியன். உலகம் முழுவதும் நடைபெறும் இந்தத் துறையின் கருத்தரங்குகளில் பங்கு பெற அழைக்கப் படுபவர்களில் முதன்மையானவர்.

சென்னை மருத்துவக் கல்லூரி, அப்போலோ மருத்துவமனை என பல இடங்களில் IVF கிளினிக்குகளை துவக்கி வைத்தவர். இந்தியாவின் முதல் விந்து வங்கியை துவங்கியவர் என பல முதல்'களுக்கு சொந்தக்காரர். பல விருதுகள் இவர் வீட்டு அலமாரியில். அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவர் அறையில் சந்தித்தேன். மேசையில் பெரிய பெரிய மருத்துவப் புத்தகங்களுக்கு மேல் "திருக்குறள்". " தினம் ஒரு திருக்குறள் படித்துவிட்டு தான் அன்றைய பணிகளை துவங்குவேன்" .

" இவ்வளவு தமிழ் ஆர்வத்தோடு இருக்கிறீர்களே, மகிழ்ச்சி"
" அப்படியே உணர்வோடு கலந்தது "
" சொந்த ஊர் எது ?"
" காஞ்சிபுரம் அருகே ஒரு சின்ன கிராமம், நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பிறந்த கிராமம்"
" அப்படியா, சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் ஆயிற்றே !"
" ஆம். அவர் எனது பெரியப்பா "

தனது மருத்துவத் துறையின் உச்சத்திற்கு போனாலும், தமிழை மறவாமல், சுவாசமாய் கொண்டிருக்கும் டாக்டர் மன்னிக்க, மருத்துவர் பாண்டியன்.
இவரை கூகுள் என்று சொன்னவர் டாக்டர். ராதா . டாக்டர்.பாண்டியனின் துணைவியார், இதே துறையில் பணியும் பேராசிரியர். யாரை பார்த்தாலும் வாஞ்சையோடு டயட் டிப்ஸ் தான். பல மொழியில் பேசி, வருகை தரும் நோயாளிகளின் மனம் கவர்ந்தவர்.

குழந்தையில்லாமல் வாடும் பல தம்பதிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் தம்பதி. அதே சமயத்தில் மருத்துவ நெறிமுறைகளை ஒரு நூலும் தவற விடாதவர்கள். வர்த்தக ரீதியில் செல்வதை விரும்பாமல், கல்வியில், அடுத்தவர்களை வளர்த்துவிடுவதில் ஆர்வம் காட்டும் மருத்துவர்கள்.

# மருத்துவர்கள் பாண்டியன், ராதா வாழ்க, இன்னும் பல குடும்பம் தழைக்க....