பிரபலமான இடுகைகள்

புதன், 5 ஜூன், 2013

பிரமிக்க வைக்கும் தலைவர் – கலைஞர்...

( 03.06.2013 அன்று விடுதலை கலைஞர்-90 பிறந்த நாள் மலரில் வெளிவந்துள்ள என் படைப்பு )


அகவை 90. ஆனால் இன்னும் இவர் இளைஞர் தான். தூரத்திலிருந்து பார்த்து பார்த்து பிரமித்த தலைவரை கிட்டே நெருங்கி பார்க்கும் போது இன்னும் பிரமிப்பு கூடிக் கொண்டே போகிறது.

தமிழை எழுத்துக் கூட்டி படித்தக் காலத்திலிருந்து, முரசொலியில் அவர் எழுத்துக்களை படித்து தான் என் தமிழ் வலுப்பெற்றது. அப்போதிருந்தே அவர் எழுத்து, பேச்சு, கொள்கை, அரசியல், நடவடிக்கைகள் பிரமிக்க வைக்கும்.

வழக்கமாக தூரத்திலிருந்து பார்த்து பிரமித்தவர்களை கிட்டே நெருங்கும் போதும் சில பிம்பங்கள் நொறுங்கும், பார்வைகள் மாறும், உயரம் குறையும். ஆனால் தலைவர் கலைஞரிடத்தில் இந்த நிலை மாறும்.

நான் பள்ளியில் படித்தப் போது, கல்லூரியில் படித்தப் போது, அரசியலுக்கு வந்தப் புதிதில் எப்படிப் பார்த்து வியந்தேனோ, அதில் கிஞ்சிற்றும் குறைவில்லாமல் இன்றும் வியக்கிறேன்.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக மாவட்ட செயலாளரான போது பார்த்ததைவிட, கடந்த சட்டப்பேரவையில் ச.ம.உ ஆக பணியாற்றியப் போது
பார்த்ததைவிட, இப்போது இன்னும் நெருக்கத்தில் பார்க்கும் வாய்ப்பு.

90-லும் குறையா உழைப்பு, வற்றாத எழுத்து, தொடர்ந்து கற்கும் ஆர்வம், தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பாங்கு, நேரந் தவறாமை, பதில் சொல்லத் தயங்காமை, பிரச்சினைகளை கண்டு ஓடி ஓளியாமை என வியக்க வைக்கிறார்.

இதைத் தாண்டி அவரது எளிமை. பொது வாழ்க்கையில் இருக்கும் யாரும் கைக் கொள்ள வேண்டியது...

கடந்த 1996 தி.மு.க ஆட்சிக்காலம்....
இரவு நேரம். சென்னையின் ஒரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மர் சீர்கெட்டதால் என தெரியவருகிறது. வழக்கம் போல் ஆற்காட்டாருக்கு அர்ச்சனை நடக்கிறது. மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், போனை யாரும் எடுக்கவில்லை.

ஒரு நடுத்தர வர்க்கத்து பெண் முதலமைச்சர் இல்ல தொலைபேசி எண்ணை தேடுகிறார். கிடைக்கிறது. தொடர்புகொள்கிறார், யாராவது உதவியாளர்கள் தொலைபேசியை எடுப்பார்கள் என்ற எண்ணத்தோடு.

" வணக்கம். கருணாநிதி பேசுகிறேன் " என்ற கனிவான கம்பீரக் குரல். இந்தப் பெண் திகைத்துப் போகிறார். தடுமாறி விபரத்தை சொல்கிறார். எந்தப் பகுதி என்று விபரம் கேட்டுக் கொள்கிறார் தலைவர் கலைஞர். உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு சீர் செய்தது தனிக்கதை.

இன்று முதல்வர் இல்ல தொலைபேசி எண் கிடைத்தால், யாராவது பேச முன்வருவார்களா தைரியமாக ? நிச்சயம் தற்போதைய முதல்வர் எடுக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வரிடம் அல்ல, உதவியாளர்களிடம் பேசவே பயப்படுவார்கள் பொதுமக்கள் இன்று .

ஆறு மாதங்களுக்கு முனபாக.....

ஒரு நாள் அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் வாகனம் நுழைகிறது. தலைவரைக் கண்டக் கழகத் தோழர்கள் வாழ்த்தொலி எழுப்பி ஆரவரிக்கிறார்கள். தலைவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து கையசைத்து அன்பை ஏற்றுக் கொண்டு, அறிவாலயத்திற்குள் நுழைகிறார்.

“ தாத்தா வணக்கம்” என ஒரு மழலைக் குரல், திரும்பிப் பார்க்கிறார். தகப்பனின் கையிலிருந்த அய்ந்து வயதுக் குழந்தை கையசைக்கிறது. அவர்களை அழைத்து வரச் சொல்லி குழந்தையிடம் அன்பொழுக விசாரிக்கிறார்.

நீலகிரியிலிருந்து வந்தக் குடும்பம் மூன்று நாட்களாக தலைவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள அறிவாலயம் வந்துக் காத்திருக்கிறார்கள். தலைவர் உடல் நலம் காரணமாக மூன்று நாட்களும் அறிவாலயம் வரவில்லை, வாய்ப்பு கிட்டவில்லை. அன்றும் உடல் நலம் சரியில்லை தான், அவசரப்பணி நிமித்தமாக வந்திருந்தார்.

புகைப்படக் கலைஞரை வரச்சொல்லி அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைக்கிறார். அந்தக் குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் தலைவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது வாழ்நாள் கனவு. இனி அந்தப் படம் அவர்கள் குடும்பத்திற்கு வாழ்நாள் சாதனை.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல்...

வாக்குப் பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு மாத இடைவெளி. அப்போது தலைவரை சந்திக்கிறேன். மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வெற்றி நிலவரம் குறித்து எடுத்து சொன்னேன், கேட்டுக் கொண்டார். “நான் போட்டியிட்ட குன்னம் தொகுதி நன்றாக உள்ளது, நாம் வெற்றி பெறுவோம்” என்றேன்.

“ உன்னைப் பார்த்தாலே தெரியுதய்யா, நல்லாதான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு என்னை மேலும் கீழும் பார்த்தார். முதலில் எனக்கு புரியவில்லை. பிறகு தான் புரிந்தது, தேர்தலில் அலைச்சலால் ஏற்படும் நலிவு என் உடலில் தெரியவில்லை என்பதை அப்படி நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து சந்திக்க சென்றேன். தாமதமாக வாக்கு எண்ணிக்கை முடித்ததால், இரவு தான் தலைவரை சந்திக்க செல்ல முடிந்தது. கழகம் ஆட்சியை இழந்து, எதிர்கட்சி அந்தஸ்த்தையும் இழந்திருந்த மிக சங்கடமான சூழல். வேறு தலைவராக இருந்திருந்தால் சந்தித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தலைவர் வரச் சொன்னார். ஓய்வுக்கு செல்ல ஆயத்தமாக கைலியும் பனியனும் அணிந்திருந்தார். வெற்றி விபரத்தை சொன்னேன், வாழ்த்தினார். அப்போது திருச்சியில் போட்டியிட்ட அன்பில் பெரியசாமியும், திருவெறும்பூரில் போட்டியிட்ட கே.என்.சேகரனும் வந்தார்கள்.

“ என்னய்யா எப்பவும் ஜெயிக்கற தொகுதி, என்னாச்சு ?” எனக் கேட்டார் தலைவர். தோல்விக்கான காரணத்தை சொன்னார்கள். அதில் உள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டார்.

2006-ல் வெற்றி பெற்று வாழ்த்து பெற சென்ற போது, முதல்வராக பொறுப்பேற்கும் மகிழ்ச்சி சூழலில், என்ன தெளிவோடு இருந்தாரோ, அந்த தெளிவோடு தான் 2011 தோல்வியின் போதும் தலைவர் கலைஞர் இருந்ததை பார்த்தேன்.# எளிமையான ஆனால் வலிமையான தலைவர் !
( விடுதலை கலைஞர்-90 பிறந்த நாள் மலரை, பெரியார் திடலில் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக் கொள்ளும் காட்சி )