பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 ஜூன், 2013

ஒய்வுக்கு பின்பும் பணி தொடரட்டும் !

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு, பணி நிறைவு விழாவில் உறவினர்களும், உடன் பணியாற்றியவர்களும் வந்து பாராட்டுவது இயல்பு. 

ஆசிரியர் இளஞ்செழியன் ஓய்வு பெற்ற அன்று பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகளும் திரண்டு வாழ்த்தியது அவரது சிறப்பு. குடும்ப நண்பர் என்பதால் அண்ணன் என்றே இவரை அழைப்பேன்.

நான் படித்த பள்ளி, ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி. நான் சட்டமன்ற உறுப்பினரான நேரத்தில் இளஞ்செழியன் இப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியர் திரு.தமிழரசன் அவர்கள்.

த.ஆ தமிழரசன் அவர்கள் பெரிய மீசையோடு, உருட்டும் விழியோடு "டெரராக" கட்டுப்பாடிற்கு இலக்கணம். அண்ணன் இளஞ்செழியன் நெற்றி நிறைய திருநூறோடு, வாய் மணக்க திருவருட்பாவோடு "சாத்வீகமாக" இருப்பவர். இந்த முரண் சோடி அந்தப் பள்ளியை நல்ல தேர்ச்சி விகிதம் மற்றும் ஒழுக்கத்தோடு வழிநடத்தினர்.

அண்ணன் இளஞ்செழியன் அவர்களது மாமனார் மறைந்த சதாசிவம் அவர்கள் 1971ல் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அமைதியானவர். அதனாலேயும் இவரது தந்தையாராலும் திராவிட உணர்வாளர். ஆனால் இது குறித்து யாரும் குறை சொல்லாத வகையில் பணியில் சிறப்பானவர்.

ஓர் ஆண்டுக்கு முன் பணி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர் ஆனார். தற்போது பணி நிறைவு பெற்ற போது அந்தப் பள்ளியில் இருந்து நூற்றைம்பது கி.மீ பயணம் செய்து வந்து நிகழ்ச்சியில் அவ்வூர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினர். அந்த அளவிற்கு அங்கும் நிறைவான பணி.

அதிலும் B.E படித்த 25 வயது மகனை ஒரு விபத்தில் இழந்த நிலையிலும், தன் ஆசிரியர் பணியை குந்தகமின்றி சிரமேற் கொண்டு செய்தது தான் அவரது கடமையின் உச்சம்.

பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவரதுப் பணி சிறப்புகளை கூறி வாழ்த்தினேன், ஓய்வு அரசுப் பணிக்கு தான், எனவே பொதுப்பணிக்கு வரவேண்டும் என அழைத்தேன். அவர் நன்றி கூறினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்.

" எனது மாமனார் கலைஞர் முதலமைச்சராக இருந்தப் போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நான் 1989ல் தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் பணிக்கு சேர்ந்தேன். அவர் காலத்தில் நல்லாசிரியர் விருது பெற்றேன். ஆனால் அதை விட பெருமை, நான் ஓய்வு பெறும் போது பணியாற்றிய பள்ளி தான்."

பணி உயர்வு பெற்றப் போது கவுன்சிலிங்கில் பக்கத்து மாவட்டங்களில் பல பள்ளிகள் காலியாக இருந்தன. ஆனால் அவர் தேர்வு செய்தது 150 கி.மீ தூரத்தில் இருந்த அந்த பெருமைக்குரியப் பள்ளி : அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை.

# பணி தொடரட்டும் !