பிரபலமான இடுகைகள்

திங்கள், 15 ஜூலை, 2013

ஆணும் பெண்ணும் சமம்...

அது எனக்கு திருமண மேடையாகத் தோன்றவில்லை. திராவிடர் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் போலவே இருந்தது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகர், செயக்குமார் மற்றும் பல நிர்வாகிகள் என மேடை நிறைந்திருந்தது.

சகோதரர் எழிலரசன் திருமண மேடை. தி.க மாணவரணியின் நிர்வாகி. அவரது தந்தையார் திருச்சி மண்டல தி.க செயலாளர் அண்ணன் காமராஜ் அவர்கள். எங்கள் பகுதியில் தொய்வின்றி பணியாற்றி வருபவர். ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர்.

இவர்களது சமூகப்பணியின் சான்றாகத்தான், திருமண விழா மேடை திராவிடர் கழக நிர்வாகிகளாலும், விழாக் கூடம் தொண்டர்களாலும் பொதுமக்களாலும் நிரம்பியிருந்தது.

வேறு சில திருமணங்களில் பங்கேற்று சென்றதால், தாமதமாகத் தான் சென்றேன். அய்யா வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அமர்தியசென் தன் புத்தகத்தில் தந்தை பெரியார் அவர்களை மேற்கோள் காட்டியிருப்பதை எடுத்துக் கூறி, பெரியாரின் கொள்கைகள் உலகலாவி சென்றுள்ளதை எடுத்துரைத்தார்.

வாழ்க்கை இணையேற்பு நிகழ்வினை நடத்தி வைத்தார். மங்கலநாணுக்கு பதில் சங்கிலி மாத்திரம் அணிவித்து திருமணம். ( இதுவும் பெண் வீட்டார் விருப்பத்திற்காக இருக்கும் என நினைக்கிறேன்.) சங்கிலியில் ஒரு டாலர், அதில் இருவர் பெயரும் பொறித்து.

அடுத்து நடந்தது தான் ஹைலைட். இப்போது மணமகள் ஒரு சங்கிலியை மணமகனுக்கு அணிவித்தார்.

ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவப் பேராசான் பெரியாரின் கொள்கை அங்கே நிலைநிறுத்தப்பட்டது. மணமகன், மணமகள் உறுதிமொழி ஏற்க வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சி இனிதே நடந்தேரியது.

மணவிழாத் தலைவர் அய்யா என்னை வாழ்த்துரைக்க பணித்தார். ஒரு தலைவர் நிறைவுரை ஆற்றிய பிறகு, தாமதமாக வந்த எனக்கு வாய்ப்பு வழங்கியது ஆசிரியரின் பெருந்தன்மையை காட்டியது. "அண்ணன் காமராஜ் அவர்கள் என் தந்தையாரோடு இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து, மணமகன் எழிலரசனின் எழுத்திற்கு நான் ரசிகன் என்பதை பதிவு செய்து வாழ்த்தினேன்.

எழிலரசன் பொறியியல் படித்திருந்தாலும் பத்திரிக்கைத் துறை மீது காதல் கொண்டு, ஆங்கிலப் பத்திரிக்கையில் பணிபுரிபவர். ஆனால் சுயமரியாதைக் கொள்கையில் அணுவளவும் நழுவாமல் இருப்பவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். பொது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். மணமகள் சிந்து மேலாண்மை பயின்றுள்ளார்.

# இல்லற வாழ்விலும் சிறந்து மணமக்கள் வாழ்க !