பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 23 ஜூலை, 2013

கொத்தமல்லி தழை நறுக்கிய M.E மாணவ்ர்

"சூடான மிளகு ரசம் ரெடி" என்ற அறிவிப்பு கண்ணில் பட்டது. முன்புறம் சிறிய கீற்றுக் கொட்டகையுடன் கூடிய கடையாக இருந்தது. ஒருவர் இரண்டு டம்ளர்களை வைத்து ஆற்றிக் கொண்டிருந்தார்."வித்தியாசமாக இருக்கிறதே, நம் ஊரில் மிளகு ரசம் வியாபாரமாகுமா?" என்று காரில் இருந்தவர்களிடம் கேட்டேன். "நல்ல வியாபாரம், நல்லா இருக்கும். ஏற்கனவே ஒரு முறை இங்கிருந்து தான் உங்களுக்கு, உளுத்தங்கஞ்சி வாங்கிக் கொடுத்தோம்" என்றார் பொதுக்குழு செல்வராஜ்.

தாலுக்கா தலைநகரான சிறு நகரமான செந்துறையில் இது போன்ற வித்தியாசமான கடையை எதிர்பார்க்கவில்லை. ரயில் நிலையம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

சரி, சாப்பிட்டு தான் பார்ப்போம் என்று இறங்கினோம். 10x7 அளவேயுள்ள கடையில் மூன்று பேர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். சூப் ஆற்றிக் கொண்டிருந்தவரின் மனைவி பகோடா மாவு தயார் செய்ய, ஒரு இளைஞர் கொத்தமல்லி தழை நறுக்கிக் கொண்டிருந்தார். சொற்பொழிவாளர் பெருநற்கிள்ளி "சூடா ரசம் கொடுங்க" என ஆர்டர் செய்தார். "இப்போ சூடா கொள்ளு சூப்பு ரெடியாயிட்டு இருக்கு. சாப்பிடறீங்களா ?" என்றார். "அதுவும் உடம்புக்கு நல்லது தானே, கொடுங்க" என்றார் ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி. 

"ஆமாம், உடம்புக்கு நல்லது. கொள்ளை முளக்க வைத்து, வேக வைத்து சூப் தயார் செய்கிறோம்" என்றார். "வேறு என்ன சூப் இருக்கிறது ?" "தினம் ஒரு சூப் சார். காளான் சூப், முருங்கைக்கீரை சூப் என" 

"காலை, மாலை சூப்பும், மதியம் குஸ்காவும், மாலையில் முட்டைகோஸ், காலிஃப்ளவர் பகோடா என குறிப்பிட்ட ஐட்டம் மட்டுமே போடுகிறோம்" என்றார். உடன் வந்தவர்கள் "அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்துவிடும். தேடி வந்து சாப்பிட்டுகின்றனர்" என்றார்கள்.பெருநற்கிள்ளி அவரை உற்றுப்பார்த்து "மருதமுத்து தானே" என்று கேட்டார். "ஆமாம் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்தக் கடை திறந்து ஒரு வருடமாகிறது" என்றார் மருதமுத்து. "இவர் என் மகன்" என அறிமுகப்படுத்தினார் கொத்தமல்லித்தழை நறுக்கிய இளைஞரை.

"என்ன செய்யறீங்க ?"என்றேன். "M.E படிக்கிறேன் சார்." "எங்கே படிக்கிறீங்க" "காரைக்குடி அழகப்பா". அவர் கரம் பற்றிக் குலுக்கினேன்."இது M.E படிப்பதற்காக அல்ல, M.E படித்தாலும் அப்பாவிற்கு உதவியாக இந்தப் பணி செய்வதற்காக". எல்லோரும் பாராட்டினார்கள். "சார், +2ல் அதிக மதிப்பெண் வாங்கிய போது நீங்க பரிசு கொடுத்தீங்க" என நினைவு கூர்ந்தார் செந்தமிழன்.

வழக்கமான தொழில் செய்து உழலாமல் வித்தியாசமான வியாபாரம் செய்து முன்னேறும் தந்தை, தொழிலில் பங்கேற்று உழைக்கும் தாய், படிக்கும் படிப்பை பாராமல் பெற்றோருக்கு உதவியாய் உழைக்கும் மகன்....

# நல்லதொரு குடும்பம் !