பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இடது கால் துண்டிக்கப்பட்டு....

திட்டக்குடி பார்டர் அருகே வயலூர். அங்கு கோவிலில் இருந்த கல் தூணை பிடித்துத் தொங்கி விளையாடுகிறான் அந்த சிறுவன். அந்த தூண் அவன் கால் மீது சரிகிறது. இடது கால் முட்டிக்கு கீழ் சிதைந்து போகிறது. சிகிச்சையில் கால் துண்டிக்கப்படுகிறது. மூன்றாண்டுகள் கடந்து விட்டது. இப்போது ஏழாம  வகுப்பு படிக்கிறான்.


விக்கிரமங்கலத்தை சேர்ந்த விவசாயி. விவசாய வேலைகளில் ஈடுபட்ட போது மின்சார வயர்களை சரி செய்கிறார். எதிர்பாராத ஷாக். தூக்கியடிக்கப் படுகிறார். இரண்டு கைகளும் துண்டிக்கப்படுகிறது.
பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறார். எதிரில் வந்த வாகனம் மோதி தூக்கி எறிகிறது. நினைவு வரும் போது, வலது கால் துண்டிக்கப் பட்டிருக்கிறது.

அய்ந்தாம் வகுப்பு படிக்கும் சினேகா, சின்ன வயதில் காலில் குத்திய முள்ளால் சீழ் பிடித்து வலது கால் துண்டிக்கப் பட்டுவிட்ட்து. வாடிப் போன ரோஜாவாக இருக்கிறது அந்தக் குழந்தை.

இதே போன்று கை, கால் இழ்ந்து முகாமுக்கு வந்தவர்கள் 52 பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு சோகக் கதை. கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை,கால் வழங்க கண்டறியும் முகாம் நேற்று குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த போது தான் இவர்களை சந்தித்தோம்.


தஞ்சை மாவட்டத்தில் கருப்பூர் அருகே இருக்கும் தஞ்சாவூர் பவர் கம்பெனி மின் உற்பத்தி செய்கிறது. அவர்கள் மக்கள் சேவைக்காக அமைத்துள்ள லேன்கோ பவுண்டேஷன் மூலமாக இந்த செயற்கை கை,கால்களை இலவசமாக வழங்குகிறார்கள்.

நான்கு நாட்கள் வாகனம் மூலம் முகாம் குறித்து விளம்பரம் செய்து, கிராமங்கலிலுள்ள கழக நிர்வாகிகள் மூலம் தேவையானவர்களை கண்டறிந்து முகாமுக்கு வரவழைத்தோம்.
லேன்கோவை சேர்ந்த ஜெகன், குமார் ஆகியோர் சுறுசுறுப்பாக பணியாற்றி அளவு எடுத்தனர். காலை 9.00மணி முதல் மாலை 3.30 வரை பணி முடித்தே உணவருந்தினார்கள். 45 நாட்களில் செயற்கை கை,கால்கள் தயாரிக்கப் பட்டு வழங்கப்படும்.

நாங்களும் மாலை வரை இருந்து முகாமை நடத்தினோம். மன நிறைவான பணி. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததிலிருந்து அங்கு நடைபெற்ற நல்லதொரு சமூகப்பணி இதுவாகத் தான் இருக்கும்.

இந்த முகாமை நடத்த எனக்கு எண்ணம் ஏற்படுத்தியவர் தஞ்சாவூர் பவர் கம்பெனியில் பணிபுரியும் என் கல்லூரி நண்பர் செல்வம். 

நிகழ்வு முடிந்து கிளம்பும் போது தன் மனைவியுடன் வந்திருந்த கால் இழந்த முதிய இஸ்லாமியர் அருகில் வந்தார், கைக்கூப்பி நல்லா இருப்பீங்கஎன்றார்.
#
லேன்கோ போன்ற நிறுவனங்கள் நல்லா இருக்கனும் !