பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கணேசன் எழ முயற்சிக்கிறார்...

ஜெயண்ட் வீலை ஆர்வமாக பார்த்தார் கணேசன். அதில் ஏறி சுற்றுவது சிறு வயது ஆசை. ஜெயண்ட் வீல் ஏறினார், சுற்ற ஆரம்பித்தது. கணேசன் சந்தோசமாக கீழே பார்த்தார். இரண்டு சுற்று முடிந்தது. தலையில் லேசாக "வின்" என்று வலி தெரித்தது. 

ஜெயண்ட் வீல் சுற்றி நின்றது. கணேசன் எழுந்து இறங்குவதற்கு மேலே இருக்கும் இரும்பு கம்பியை பிடிக்கிறார், கை எழவில்லை. எழ முயற்சிக்கிறார், கால் நிற்கவில்லை. ஒரு கையும் காலும் செயலிழந்துவிட்டது.

அவர் அப்போது சென்னையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆணடு மாணவர். தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஆயிரம் கனவுகளோடு சென்னை வந்தவர். சிறு ஆசை அத்தனை கனவுகளையும் நொறுக்கித் தள்ளி விட்டது.

மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்று திடீரென பாதிக்கப்பட்டதால், இந்த நிலை. மருத்துவ சிகிச்சையில் இரண்டு ஆண்டுகள் போயின. கை, காலை லேசாக அசைக்க முடிந்தது.

இதிலிருந்து மீண்டு, மீண்டும் படிக்க வேண்டும் என்ற வெறி கணேசனை நெருக்கியது. கல்லூரி சென்றார். 2002, இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் மூன்றாம் ஆண்டு வகுப்பில், ஜூனியர்களோடு அமர்ந்தார்.

வழக்கமான அசைவுகள் இல்லை என்றாலும் சற்றே சிரமப்பட்டு நடக்க இயன்றது. இருப்பினும் மன உறுதியோடு படித்தார். அப்போது தான் எனக்கு அறிமுகம்.

கல்லூரி படிப்பை முடித்து ஊர் திரும்பியதில் அவருக்கும் நண்பர்களுக்கும் தொடர்பு அறுந்து போனது. திரும்பி சென்னை வந்து ஒரு வேலை தேடி தங்கினார். இதற்கிடையில் அவரது நண்பர்கள் வேலை கிடைத்து ஆளுக்கொரு மூலைக்காய் பிரிந்து விட்டனர்.

அதில் ஒரு நண்பர் செல்வம், சொந்தமாக தொழில் தொடங்கி இருந்தார். அவருக்கு கணேசனை மீண்டும் சந்திக்கும் ஆசை வந்தது. நண்பர்களிடம் சொல்லி தேட ஆரம்பித்தார்.

அந்தக் கட்டத்தில் கணேசன் சில வேலைகள் மாறி, கடைசி வேலையையும் விட்டிருந்தார். எதேச்சையாக சந்தித்த நண்பர் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

கணேசனும் செல்வமும் சந்தித்தார்கள். செல்வம் கணேசனை தனது நிறுவனத்திற்கு அழைப்பது என முடிவெடுத்திருந்தபடி அழைக்க, இணைந்தார். கணேசன் பழைய நண்பர்களை சந்தித்தார். அவரது ஷார்ப்னெஸ் மீண்டும் வெளிப்பட்டது.

வீட்டின் ஒரே ஆண் பிள்ளை என்ற வகையில் குடும்ப பொறுப்பை ஏற்க திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். கணேசன் உடல் நிலை அறிந்து மணக்க ஒரு சகோதரி முன் வந்தார். படித்தவர். மகிழ்ச்சியான சூழல்.

கடந்த வாரம் திருமணம். 300 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டிய ஊர். முதல் நாள் இரவே சென்று வாழ்த்தி வந்தேன்.

நடப்பதற்கும், கை அசைவிற்கும் இன்னும் சிரமப்பட்டாலும், தடைகளை தகர்த்து புதுவாழ்வு துவங்கும் கணேசன் பலருக்கு பாடம். கணேசனின் வாழ்வு சிறக்கும்.

# வாழ்க கணேசன், வெல்க அவர் மன உறுதி !