பிரபலமான இடுகைகள்

வியாழன், 12 செப்டம்பர், 2013

துள்ளி குதித்து ஓடிய எம்.எல்.ஏ....

அது கல்விக்கடன் வழங்கும் விழா. வங்கிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு விழா. வங்கி அலுவலர்களாலும், அரசு அதிகாரிகளாலும் நிரம்பி வழிகிறது மேடை. தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மேடையில் இருக்கிறார்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் சார்பாக கடனுக்கான காசோலையை வாங்க குவிந்திருக்கிறார்கள். விழா துவங்கி அனைவரும் உரையாற்றுகிறார்கள். காசோலையை வழங்க துவங்குகின்றனர். ஒவ்வொருவர் பெயராக அறிவிக்கப்படுகிறது. பெற்றோர் மேடையேறி பெற்றுக் கொள்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் காசோலையை வழங்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார். உடன் உள்ளாட்சி நிர்வாகிகளும் ஆளுங்கட்சியினரும். கீழே பத்திரிக்கையாளர்கள் கேமராவுடன்.

அடுத்த மாணவன் பெயர் அறிவிப்பு வருகிறது. கடைசி வரிசையில் இருந்த மாணவனின் தந்தை எழுந்தவர் ஒரு நிமிடம் யோசிக்கிறார். மேடையை நோக்கி நடக்கத் துவங்குகிறார். வந்தவரை பார்த்தவுடன் உடன் இருந்தவர் எம்.எல்.ஏ காதில் கிசுகிசுக்கிறார்.

எம்.எல்.ஏ அப்போது தான் வருபவரை பார்க்கிறார். ஷாக் அடித்தது போல் ஆகிவிட்டார். முகம் மாறுகிறது. உடன் இருப்பவர்களை பார்க்கிறார். அவர்களும் விழிக்கிறார்கள். விறுவிறுவென மேடையிலிருந்து எம்.எல்.ஏ துள்ளி குதித்து இறங்குகிறார். உடன் இருந்தவர்களும் திபுதிபுவென மேடையிலிருந்து குதித்து ஓடுகின்றனர்.

வங்கி அலுவலர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் மாணவனின் தந்தை மேடையேறிவிட்டார். வங்கி மேனேஜர் " சார், இவருக்கு மட்டுமாவது செக் கொடுத்துட்டு போங்க சார்" என கெஞ்சுகிறார். எம்.எல்.ஏ காரில் ஏறுகிறார். கார் தெலுங்கு படத்தில் வருவது போல் பறக்கிறது.

மேனேஜருக்கு தெரியாது இவருக்கு மட்டும் செக் கொடுக்க பயந்துதான் எம்.எல்.ஏ பறந்தார் என்பது.

மேடை ஏறிய மாணவரின் தந்தை ஏற்கனவே வங்கியில் கொடுத்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு காசோலை வாங்க அழைக்கப்பட்டதால் விழாவுக்கு சென்றிருந்தார். அவருக்கு தெரியாது, காசோலை வழங்கப் போவது எம்.எல்.ஏ என்று. போன பிறகு ஒரு காசோலை கொடுத்துவிட்டு எம்.எல்.ஏ சென்று விடுவார், அதிகாரிகள் கொடுப்பார்கள் எனக் காத்திருந்தார்.

அப்போது தான் அவரை அழைக்க, அவரும் நம்மால் எம்.எல்.ஏவுக்கு ஏன் கெடுதல் என ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, வாங்காவிட்டால் நம்மை தவறாக நினைப்பார்களே என மேடை ஏறி விட்டார்.

பயமுறுத்திய மாணவனின் தந்தை : கென்னடி, திருமானூர் ஒன்றிய தி.மு.க செயலாளர். அலறியடித்து ஓடியவர் அரியலூர் எம்.எல்.ஏ துரை.மணிவேல். இடம் : திருமானூர் ஒன்றிய அலுவலகம்.

உங்களுக்கு என்ன சிரிச்சிட்டு போயிடுவீங்க, அவரோட சேர்த்து, ஒரு போட்டோ மட்டும் எடுத்திருந்தா என்னாவது....

#அண்ணன் ஏற்கனவே மாவட்ட செயலாளர விட்டுருக்காரு. இனிமேலும் இழக்க முடியாது...


( நன்றி : தினமலர் நாளிதழ் )