பிரபலமான இடுகைகள்

திங்கள், 9 செப்டம்பர், 2013

ஆண்டன் பாலசிங்கம் - அக்ரி - பரமசிவம்....

அவரை நாங்கள் “ஆண்டன் பாலசிங்கம்” என்று விளையாட்டாக குறிப்பிட்டு பேசுவோம். காரணம் அவரது செயல்பாடுகள். தான் சார்ந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக மறைமுக பணிகள், பேச்சுவார்த்தைக்கள், விவாதங்கள் என அப்படி ஈடுபாடாக நடந்துக் கொள்வார், மிக ரகசியமாக இருக்கும்.

அவர் பெயர் பரமசிவம். ஆனால் “அக்ரி” என்றால் தான் அனைவரும் அறிவார்கள். அரசு விவசாயத் துறையில் பணியாற்றியவர், அதனால் அக்ரி. விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.



செந்துறை ஒன்றியத்தில் மாத்தூரை சேர்ந்தவர். அவரது இயக்கப் பணி காரணமாக பல முறை பணீயிட மாறுதலுக்கு உட்படுத்தப் படுவார். ஆனால் போன இடத்தில் இயக்க கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு அங்கிருந்து மாற்றப்படுவார்.

வன்னியர் சங்கம் என முதன்முதலில் துவங்கப்பட்டதில் இருந்து அதனை கட்டமைக்கிற பணியில் தன்னை அர்பணித்துக் கொண்டவர். அதே போல பாட்டாளி மக்கள் கட்சி என உருவெடுத்தப் பிறகும் தன் பணியை தொடர்ந்தவர்.

ஒரு நாளும் கட்சியில் தனக்கு பதவி என்ன கிடைக்கும் என எதிர்பார்த்தவர் அல்ல. ஓய்வு பெற்ற பிறகும் கேட்டவரல்ல. ஆனால் கடைசி வரை தவிர்க்க முடியாத பிரமுகராக அந்த பகுதியில் வலம் வந்தார்.

தேர்தல் காலங்களில் கூட்டணியாக இருந்த நேரத்தில் ஒவ்வொரு பகுதியின் நிலைகளை ஆய்ந்து உண்மைத் தகவல்களை அனுப்புவார்.

கட்சிப் பணி மாத்திரமில்லாமல் பொதுப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். கூட்டணியில் இல்லாமல் மிக எதிர்ப்பான நிலையில் இருக்கும் போதும் அந்தப் பகுதியில் நடைபெற வேண்டிய பொது காரியங்களுக்காக மட்டும் தொடர்பு கொள்வார்.

ஓரு நாளும் தனது அரசியல் பணிகளை வைத்து யாரிடமும் உதவி கேட்டு அணுகியதில்லை, சொந்தக் கட்சியினரிடமும். பலனை எதிர் பார்க்காமல் பணியாற்றுகிறவர்.

மெலிந்த உருவம், அழுக்கான உடை, ஒரு சைக்கிள் என்ற அடையாளத்துக்கு சொந்தக்காரர். சமீப காலங்களில் தான் ஒரு பைக் வாங்கி பயன்படுத்தினார். ஆனால் இதை தாண்டி தனது பணியாலும் ஆளுமையாலும் அடையாளப் படுத்தப்பட்டார்.

கடந்த வாரம் மறைந்து போனார். இறுதி மரியாதை செலுத்த சென்றோம். மிக எளிமையான ஓட்டு வீடு. பா.ம.கவினரும் இறுதி மரியாதை செலுத்த குவிந்திருந்தனர், அதே போல பொதுமக்களும். இறுதி மரியாதை செலுத்த கூடியுருந்த கூட்டம் அவரது உழைப்புக்கு மரியாதை.

# எந்த இயக்கத்தில் இருந்தாலும் பொதுநலனுக்கு உழைக்கும் தொண்டர்கள் மதிக்கப்பட வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக