பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

அம்மா என்றால் அன்புமுன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் Dr. தேவராஜன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கம் - ஜெயா டி.வி பிளாஷ்.

டாக்டர் தேவராஜன் பள்ளியில் படிக்கும் போது அவரது வகுப்புத் தோழர் கோவிந்தசாமி. பிறகு நெருங்கிய நண்பர்களாகிறார்கள். தேவராஜ் பள்ளிப் படிப்பு முடித்து மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். கோவிந்தசாமி தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியில் சேர்கிறார்.

டாக்டராகும் தேவராஜ் பெரம்பலூர் நகரில் பிராக்டீஸ் செய்கிறார். திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தி.மு.கவில் இணைகிறார். ஒன்றிய செயலாளராக ஆகிப் பணியாற்றுகிறார்.

கோவிந்தசாமி மின்வாரிய தொ.மு.சவில் இணைந்துப் பணியாற்றுகிறார். பெரம்பலூர் நகரத் தி.மு.கவில் 8 -வது வார்டு செயலாளராகவும் செயல்படுகிறார். பள்ளி நண்பர்கள் தேவராஜனும் கோவிந்தசாமியும் இப்போது கழகத் தோழர்களாகிறார்கள்.

இடையில் ம.தி.மு.க துவங்கிய நேரத்தில் பெரும் தலைகள் பலர் அங்கு சென்றார்கள். அப்போது டாக்டர்.தேவராஜன் தொடர்ந்து கழகத்திலேயே பணியாற்றுகிறார். 1996 பொதுத் தேர்தல் வருகிறது. கழகத்தின் சார்பில் பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு பெற்று 1996 - 2001 ஆம் ஆண்டு பணியாற்றுகிறார். 2001 அ.தி.மு.க ஆளுங்கட்சியாகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு இடைத் தேர்தல் வருகிறது. அப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அ.தி.மு.கவில் இணைகிறார், பணியாற்றுகிறார்.

இப்போது கோவிந்தசாமி தனது மகன் மூர்த்திக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். கழகக் கொள்கைப்பரப்பு செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைமையில் திருமணம் 01.09.2013 அன்று. 10.30 மணிக்கு மேடை ஏறுகிறோம். திருமண மேடைக்கு டாக்டர்.தேவராஜன் வருகிறார். மேடையில் அழைத்து அமர வைக்கிறார்கள்.

திருமணத்தை அண்ணன் ஆ.ராசா நடத்தி வைக்கிறார். கழகத் தோழர்கள் வாழ்த்தி பேசுகிறார்கள். திருமணத்தை தொகுத்து வழங்கிய நான் டாக்டர்.தேவராஜன் அவர்களை வாழ்த்த அழைத்தேன். அவரும் வாழ்த்தி பேசினார். நிறைவாக அண்ணன் ஆ.ராசா அவர்கள் வாழ்த்தி பேச ஆரம்பித்தார்கள்.

அப்போதே மேடையில் இருந்தவர்களது செல்ஃபோனுக்கு அழைப்பு அலற ஆரம்பித்தது. "என்ன டாக்டர் தேவராஜன் திமுக திருமணத்தில் கலந்து கொண்டாரா ?". உளவுத் துறை காவலர்கள் பாய்ந்து வந்தனர். 11.30க்கு திருமண நிகழ்வு முடிந்து அண்ணன் ஆ.ராசா அவர்களோடு அடுத்த திருமணத்திற்கு கிளம்பினோம்.

அ.தி.மு.கவினர் தலைமையகத்திற்கு ஃபேக்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக தகவல் வர ஆரம்பித்தது. காவல்துறையிடம் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல். இரவு மணி 8.30. ஜெயா தொலைக்காட்சியில் ஃபிளாஷ் மின்ன ஆரம்பித்தது. நீக்கம். இன்னா ஸ்பீடு....

Dr. தேவராஜன் நேற்று இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டது தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், அது தான் அவர் செய்த குற்றம். நாற்பது ஆண்டு கால நண்பரிடம் அவர் காட்டிய அன்புக்கு கிடைத்த கட்சி தலைமையின் பரிசு !

# அம்மா என்றால் அன்பு !