பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

சட்டசபையில் உட்கார்ந்து பெஞ்ச தட்டிகிட்டு ...

சைதை இடைத் தேர்தலில் பொய்வழக்கில் கைதாகி ( விபரத்திற்கு முந்தைய ஸ்டேடஸ்), நீதிபதி முன் நிறுத்தப்பட்ட போது, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காவல் துறையினர் திணறினர். பொய் வழக்கு என உணர்ந்தாலும், 15 நாட்கள் ரிமாண்ட் அறிவிக்கப்பட்டது.

வெளியில் வந்த போது, அருகே வந்த இன்ஸ்பெக்டர் “இந்த கேஸ் நிக்காது. கவலைப்படாதீங்க” என்றார். சென்னை மத்திய சிறையில் 3 நாட்கள், வேலூர் சிறையில் 4 நாட்கள் இருந்து, ஜாமீன் கிடைத்து சென்னையில் ஒரு மாதம் கண்டிஷன் பெயிலில் கையெழுத்துப் போட்டது தனிக் கதை.

வழக்கு விசரணைக்கு வந்தது. சைதாப்பேட்டை கோர்ட். குற்றம்சாட்டப்பட்ட நாங்கள் அய்ந்து பேரும் ஒழுங்காக ஆஜராகிக் கொண்டிருந்தோம். புகார் கொடுத்த இன்பத்தமிழன் அமைச்சராகி பிஸியான காரணத்தினால், நீதிமன்றத்திற்கு வராமல் தொடர்ந்து வாய்தா கேட்க, ஒரு கட்டத்தில் நீதிபதி கோபமாகிவிட்டார்.


                     


“ ஏன் புகார்தாரர் வரவில்லை ?” எனக் கேட்க, காவலர் “அவர் அமைச்சராகி தொகுதிக்கும் சென்னைக்கும் பிஸியாக பயணிக்கிறார், பார்க்க முடியவில்லை” என சொல்ல. “டி.வீ பார்ப்பீங்களா ?, செய்தி பாருங்க. சட்டசபையில் உட்கார்ந்து பெஞ்ச தட்டிகிட்டு இருப்பாரு. போய் சொல்லிடுங்க. அடுத்த முறை வரலன்னா வாரண்ட் போடப்படும்” அப்படின்னார்.

அடுத்த வாய்தாவிற்கு ஆஜரானார் இன்பத்தமிழன். போலீசார் கைது செய்த போது அவர் சம்பவ இட்த்தில் இல்லாததால், அவரால் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. புகாருக்கும் அவரது சாட்சியத்திற்கும் ஏக வித்தியாசம். விட்டத்தை பார்ப்பதும், தரையை பார்ப்பதுமாக நின்று ஒப்பேற்றிவிட்டு கிளம்பினார்.

வழக்கில் நிருபித்து தண்டனை வாங்கித் தர முடியாத என்ற எண்ணம் வந்ததால், வழக்கில் திருத்தம் மேற்கொண்டு புதிதாக ஒரு செக்சன் சேர்த்தனர். கைது செய்த போது, இன்ஸ்பெக்டரை நாங்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு.

எங்களை கைது செய்து அழைத்து வந்தவர்கள் போலீசார். இன்ஸ்பெக்டர் கட்டிடத்திற்கு வெளியே நின்றிருந்தார். மீடியாவை சேர்ந்தவர்கள் கேமராவோடு நின்றிருந்தனர். அப்படி இன்ஸ்பெக்டரை தாக்கியிருந்தால் கேமரா கண்களுக்கு மாட்டியிருக்கும்.

அதற்கு பிறகு அரசு தரப்பில் கொடுத்த புதிய திருத்தத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளாததால், உயர் நீதிமன்றத்திற்கு அரசே ஒரு அப்பீல் சென்றுள்ளது. இப்போதும் வழக்கை சந்திக்க நாங்கள் ரெடி. ஆனால் அரசு முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளது. வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள்.

வழக்கு முடியாததால், இரண்டு தேர்தலாக அபிடவிட்டில் இந்த வழக்கின் விவரம் இடம் பெற்று வருகிறது. நம்மாளுங்க இத வச்சி என்னை கிரிமினலா பட்டியலிடுவாங்க.

அதனால் அம்மா அவர்களுக்கு ஒரு கோரிக்கை. இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க நீங்க தான் உதவனும். நீங்க சொத்துக் குவிப்பு வழக்கில் கேட்பது போல், நான் கேட்கும் நபர்களை நீதிபதியாகவும், அரசு வழக்கறிஞராகவும் நியமித்தால் இந்த வழக்கை முடித்துக் கொள்வேன்.

# கருணை மிகு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக