பிரபலமான இடுகைகள்

திங்கள், 21 அக்டோபர், 2013

பொதுவாழ்வின் சங்கடங்கள்

செந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். பேசிய அண்ணன் அவர்களது முகத்தில் லேசான மாற்றம். "அலுவலகத்தில் இருக்கிறேன், காரில் ஏறி பேசுகிறேன்." என்றார்.

தளபதி அவர்களின் 06- ந் தேதி வருகையையொட்டி, அரியலூர் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை அண்ணன் ஆ.ராசா அவர்கள் 04.10.2013 அன்று பார்வையிட்டு விட்டு விழுப்பணங்குறிச்சி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் மறைந்த செந்தில் அவர்கள் படத்தினை திறந்து வைத்து விட்டு, திருமானூரில் கழகத் தோழர் சுந்தர சக்திவேல் திருமணத்தை விசாரித்து செந்துறை விரைந்தோம்.

செந்துறையில் வி.சி.க மாவட்ட செயளாலர் திருமாவளவன் மறைவிற்கு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு, ஒன்றிய தி.மு.க அலுவலகத்திற்கு சென்றோம். கடந்த மாதம் காதணி விழா கண்ட கருப்புசாமி அவர்களது குழந்தைகள் அண்ணன் ராசா அவர்களிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது தான் அந்த போன் அழைப்பு வந்தது. ஃபோனை வைத்த உடன் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்தனர். தொடர்ந்து குழுமூர் கழகத் தோழர் ராஜேந்திரன் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். டீ வந்தது, அருந்தி விட்டு கார் ஏறினோம்.

மொபைலை எடுத்து டெல்லிக்கு அழைத்தார், "பாப்பா எப்படி இருக்கு ?, ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு பேசுங்க" என்றார். அண்ணன் ராசா அவர்களுக்கு ஒரே மகள். டெல்லியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு சென்றிருக்கிறார். நாட்டிய வகுப்பு. பயிற்சியில் இருக்கும் போது, திடீரென சீலிங் ஃபேன் கழன்று அவரது தலையில் விழுந்து விட்டது. பள்ளியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

இங்கே அகரம் சீகூரில் ஒரு திருமணம் விசாரித்து, ஆடுதுறை மு.ஊ.ம தலைவர் மலர்வண்ணன் தந்தை மறைவு துக்கம் விசாரித்து விட்டு கார் ஏறினோம். டெல்லியில் இருந்து பார்லிமெண்ட் அனெக்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

வடக்கலூரில் ஒரு புதுமணத் தம்பதியரை வாழ்த்திவிட்டு, மூத்தக் கழகத் தோழரின் மனைவி மறைந்ததையொட்டி அவரது படத்தை திறந்து வைத்து விட்டு, லப்பைகுடிகாடு நகரில் மூன்று துக்கம் விசாரித்துவிட்டு, கீழப்புலியூரில் கழகத் தோழரின் புதுமனைபுகுவிழாவில் கலந்து கொண்டு பெரம்பலூர் செல்லும் போது மாலை மணி 4.00.

அலுவலகம் சென்று அண்ணியாருக்கு ஃபோன் செய்து விபரம் கேட்டார். அப்போது தான் மருத்துவமனையில் ஆய்வுகள் முடிந்து வெளியே வந்திருந்தனர். தலையில் வெளிப்புற வீக்கம் தவிர வேறு பாதிப்புகள் இல்லை என்று தெரிந்த பிறகே சகஜமானார். மகளிடம் பேசினார், அதன் பிறகே அண்ணனுக்கு முகம் மலர்ச்சியான நிலைக்கு வந்தது. மிகப் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

காரில் வந்த நான்கு பேரை தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. அண்ணனும் பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சிகளை முடிக்கும் வரை இயல்பாகவே இருந்தார். தனது வருத்தம் மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்.

உணவருந்தி மலையாளப்பட்டி பயிற்சி பாசறை ஏற்பாடுகளை காண சென்றோம். 5-ந் தேதியும் இதே போன்று ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். 6-ந் தேதி தளபதி அவர்களோடு பெரம்பலூர்-அரியலூர் சுற்றுப்பயணம் பொதுக்கூட்டம் முடித்து, தளபதி அவர்களோடு இரவு சென்னை சென்று, நேற்று தான் டெல்லி சென்று மகளை பார்த்தார்.

# பொதுவாழ்வின் சங்கடங்கள்