பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பாலாவுக்கு பிறந்தநாள்

நேற்று பாலாவுக்கு பிறந்தநாள். முகநூல் டைம்லைனில் வாழ்த்துக்கள் பார்த்தேன்.

பாலமுருகன், நண்பர்கள் எங்களுக்கு பாலா. பாலா எதிலும் தனித்துவம். அது பெயரிலேயே ஆரம்பித்துவிடும். மற்றவர்கள் Bala Murugan, ஆனால் பாலா Bala Muru'k'an.

பெயரில் மட்டுமல்ல, அனைத்திலும் அப்படி தான். உடுத்தும் உடையில் அப்படி ஒரு நேர்த்தி இருக்கும், கல்லூரி காலத்திலேயே. உடலோடு பொருந்திய கச்சிதமான அளவு. நீட்டாக டக் இன் செய்த பேண்ட், சர்ட். சுத்தமாக, கசங்காமல். இதே போல் தான் எதுவும்.



தான் தங்கியிருக்கும் அறை. படிக்கும் புத்தகம். தான் பயன்படுத்தும் வாகனம். அடுத்தவர்களோடு பேசுவது, பழகுவது. உணவு உண்ணுவது. எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். கல்லூரி காலத்திலேயே பெரியவர்களுக்கான முதிர்ச்சி இருக்கும்.

கிராமத்திலிருந்து சென்னை வந்து உழைத்து தொழிலதிபரான தந்தை. அதை உணர்ந்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எளிமையான மகன். கொங்குக்கே உரிய உழைப்பு. இப்படி மற்றவர்கள் கவனிக்கத் தக்க ஒரு நபர் பாலா.

பாலா எனக்கு கல்லூரித் தோழன். மூன்று ஆண்டுகள் அறை நண்பன். ஜூனியராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் வகுப்புத் தோழர்கள் போலவே இருப்போம். நாங்கள் ஊர் சுற்றும் கேங். பாலா தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கும் மாணவன்.

அண்ணாமலைநகரிலிருந்து மாரியப்பநகர் செல்லும் சாலையில் சிறு ஹோட்டல். உணவருந்த சென்றிருந்தோம். பாலா இலைக்கு முதலில் முட்டைப் பொறியல் வந்து விட்டது. அப்போது பாலாவுக்கு பிடித்த அய்ட்டம். கல்லூரி கால பழக்கப்படி நானும், இன்னொரு நண்பனும் பொறியலில் கை வைத்தோம். பாலா பெர்பெக்ட் ஆயிற்றே. "ஒரு நிமிடத்தில் உங்களுக்கு வராதா?" எனக் கேட்க, எனக்கு கோபம். இரண்டு நாள் பேசவில்லை.

இரண்டு நாள் பொறுத்த பாலா மூன்றாவது நாள், "சிவா, ஒரு வேலை இருக்கு. வாங்க" என அழைக்க சென்றோம். ஒரு முட்டை பொறியல் வாங்கி மூன்று பேரும் சாப்பிட்டோம். "இது தான் வேலை" என பாலா சிரிக்க, அந்த கள்ளமில்லா சிரிப்பில் கோபம் கரைந்தது.

கல்லூரி முடிந்த அடுத்த வருடத்திலேயே பாலாவுக்கு திருமணம். தொழிலில் தீவிரம். இரண்டு பெண் குழந்தைகள் என வாழ்க்கை வேகமாக ஓடியது. அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வோம்.

பாலாவின் மகள் அபரஞ்சிதா ஸ்குவாஷ் விளையாட்டில் டாப். மகளின் ஒவ்வொரு வெற்றியையும், முன்னேற்றத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். சர்வதேச ஆட்டங்களில் அபரஞ்சிதா பங்கேற்றது, வெற்றி பெற்றது பாலாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பாசமிகு தந்தை.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு ரிலாக்சாக ஒரு வெளிநாடு பயணம் மேற் கொண்டார். ஆழ்கடல் ஆழ்ந்து விளையாடும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்டார், படகில் மனைவியும் மகளும் இருக்க. நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. தேடினால் உடல் தான் கிடைத்தது. ஆழ்கடல் அழுத்தத்தில் இதயம் நின்றுவிட்டது. குடும்பம் துயரக் கடலில்.

ஓராண்டு கடந்து விட்டது. பாலா இன்னும் இருப்பதாகவே மனது நினைக்கிறது. பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களும் அப்படி நினைத்து தான் வாழ்த்தியிருப்பார்கள்.

# முட்டைப் பொறியல் இருக்கிறது. சாப்பிட வருவாயா பாலா ?
 — withBala Murukan P.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக