பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 29 நவம்பர், 2013

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க !

"சார், அம்மா வரப் போறாங்க. ரோடு பிளாக்" அப்படின்னு சொல்லப் போறார் போலீஸ்கார்னு நினைச்சேன். ஆனா ஒன்னும் சொல்லவில்லை. ரோட்டில் ஈ,காக்காய் இல்லை, ஜெயலலிதா வருவதால். போலீசார் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பெருமாபாளையம் போய் தளபதி அவர்கள் எந்த இடத்தில் பேசுவது என பார்வையிட்டு நடந்து திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு கடையில் இருந்த டி.வி அலறிக் கொண்டிருந்தது.

"உங்கள் அன்பு சகோதரியான என தலைமையிலான அரசு" புரட்சித்தலைவி குரல். எட்டிப் பார்த்தேன். ஜெயா டிவி லைவ். முதல் கூட்டம், வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு. மணி 12.00.

ஜலகண்டாபுரம் கிளம்பினோம். சர்க்கார் நாட்டார் மங்கலம் பிரிவு ரோட்டில் பெரிய கூட்டம். அதிமுகவினரையே போலீசார் தடுத்துக் கொண்டிருந்தனர். அம்மா வரும் பாதை. அம்மா வர மணி 2.00 ஆகும். ஆனால் 12.30க்கே பிளாக்.

திரும்பினோம். அதிமுகவினர் மக்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். புது பச்சை நிறப் புடவைகள். உள் ரோட்டை பிடித்து, அக்ரகார நாட்டார் மங்கலம் வழியாக பேளூர் மெயின் ரோட்டை பிடித்தோம். அங்கு நின்ற ஒற்றை போலீஸ் தடுக்கவில்லை.

ஜலகாண்டாபுரம் தேர்தல் அலுவலகம் அடைந்தோம். ஜெயா டிவி வைக்க சொன்னோம். ரபி பெர்னார்டு தேனொழுகும் குரலில் வர்ணித்துக் கொண்டிருந்தார். வாழப்பாடியில் அம்மா கான்வாய் நுழைகிறது. அவரது டெம்போ டிராவலர் வேனின் மேலே கண்ணாடி மேடை எழுகிறது.

அம்மா தோன்றுகிறார். பேச ஆரம்பிக்கிறார். பேச, பேச முன்புறத்தில் இருக்கும் அட்டையை ஒவ்வொன்றாக கீழே தள்ளுகிறார். வெள்ளாளகுண்டத்தில் பேசிய அதே பேச்சு, அதே அட்டை. அம்மாவிற்கே உரிய சூடு, எகத்தாளம், ஆக்ரோஷம் மிஸ்ஸிங்.

                          

“தமிழகத்தின் மின் வெட்டுக்கு திமுக தான் காரணம்” முந்தா நாள் நான் போட்ட ஸ்டேடசை அப்படியே படித்தார். இதில் என்ன காமெடின்னா, மின்வெட்டு இல்லாத ஏற்காடு தொகுதியில் மின்வெட்டு குறித்து சீரியஸா விளக்கினார்.

மாலை சர்க்கார் நாட்டார் மங்கலத்தை திரும்ப கிராஸ் செய்தேன். காலையில் ஏற்றிய மக்களை இப்போது இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர் லாரியிலிருந்து. இறங்க, இறங்க கையில் கொடுத்து அனுப்பினர்.

லாரியில் இருந்து இறங்கிய இரட்டை இலை சேலை பாட்டியை கை கொடுத்து அழைத்து வந்தார் பேரன். அவரும் இரட்டை இலை டீ-ஷர்ட். "உனக்கு ஓட்டு இருக்காப்பா ?" "இல்லிங்க சார், டீ-ஷர்ட் கொடுத்தாங்க போனேன்". இன்னும் ஜெயா டிவியில் லைவ். அயோத்தியாப் பட்டிணத்தில் அம்மா பேசி முடித்துக் கொண்டிருக்கிறார்.

# அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க !

வியாழன், 28 நவம்பர், 2013

அப்பா எப்பவும் துணையா இருப்பாரு....

போலீசிடம் மாட்டாமல் தலைமறைவாவது என முடிவெடுத்தோம். காரணம் அரசிற்கு ஏதாவது எதிர் வினை காட்டினால் தான் மனம் ஆறும் எனும் நிலை. 2001 தலைவர் கலைஞர் நள்ளிரவு கைது அன்று.

சில உடைகளோடு கிளம்பினோம், பைக்கில். முதலில் உள்ளூரிலேயே ஒரு நணபர் வீட்டில் தங்கினோம். அவர் அரசு ஊழியர். அவர் வீட்டில் என்னை போலீசார் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதால் பகல் முழுதும் அங்கேயே தங்கினோம். 

அதற்குள் என் தந்தையார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைதான செய்தி வந்தது. தொடர்ந்து கழக நிர்வாகிகள் கைதான செய்தி. மாலை ஒரு கிராமத்தில் சென்று தங்க முடிவெடுத்தோம். ஊர் உள் தங்கினால் தகவல் தெரிந்துவிடும் என்பதால் ஒரு வயலில் தங்கினோம்.

அந்த வயல் எனது பள்ளித் தோழன் எழில்வளவனுக்கு சொந்தமானது. மிகவும் நல்ல நண்பன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு முழு நேர விவசாயி ஆகி விட்டதால் அதிகம் வெளி உலகம் அறியாதவனாக இருந்தான்.

யாராவது விளையாட்டுக்கு கேட்கும் கேள்விக்கும் சீரியஸாக பதில் சொல்லும் அளவுக்கு அப்பாவியாகி இருந்தான். உடன் படித்த எங்களை சார் என்று கூப்பிட்டு சங்கடப்படுத்தினான். அப்படி கூப்பிடாதே என்றால் "இல்லை சார், நீங்கள் எல்லாம் இப்ப பெரிய ஆள்" என்று கதறடித்தான்.

அங்கு என்னோடு தங்கியவர்களில் சரவணன் இன்னொரு பள்ளித் தோழன். எப்போதும் கேலியும் கிண்டலுமாக அவன் இருக்கும் பகுதியே கலகலப்பாக இருக்கும். அவனது ஒரே பிரச்சினை துக்க காரியம். யாராவது இறந்து விட்டால் எங்களோடு வரமாட்டான். அவ்வளவு அலர்ஜி.

இரவு நேரங்களில் கார் ஓட்டி வரும் போது, எங்காவது சுடுகாடு குறுக்கிட்டு, சடலம் எரிந்துக் கொண்டிருந்தால் அவ்வளவு தான். வண்டியை இரண்டு மடங்கு வேகத்தில் ஓட்ட ஆரம்பித்து விடுவான்.

அன்று இரவானது. எழில் எங்களை மோட்டார் கொட்டகையில் படுக்க சொல்ல, நான் வெளியில் படுக்க முனைந்தேன், இயற்கை காற்றுக்காக. நான் ஒரு மரத்தடியை தேர்ந்தெடுத்தேன். அதன் கீழ் அருமையான சிமெண்ட் மேடை இருந்தது.


                                     

நான் அதன் மேல் துண்டை விரித்து படுத்தேன். சரவணனும் அருகில் படுத்தான்.
எழில் ,"இங்க தான் வழக்கமா நான் படுப்பேன்" என்றான்.
சரவணன், " பேய் பயம் ஒன்னும் இல்லையா ?" என்று கேட்டான்.
"அதெல்லாம் அப்பா எப்பவும் துணையா இருப்பாரு" என்றான் எழில்.
"அப்பா எங்க இருக்காரு ?"
"கீழ தான் இருக்காரு"
சரவணன் எழுந்து சுற்றிலும் தேடினான். காணோம்.
"காணோமே"
எழில் நாங்கள் படுத்திருந்த மேடையை தட்டிக் காட்டினான்.


"அப்பா கீழ தான் இருக்காரு. மூனு வருசம் ஆச்சி"

சரவணன் எடுத்த ஓட்டத்தை பார்க்க வேண்டுமே....

ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஏற்காடு குளுர என்ஜாய் பண்ணிட்டு வாங்க....

"ஹலோ, அண்ணே உங்கள பார்க்கனும், எங்க இருக்கிங்க ?"
" நான் ஏற்காடு இடைத்தேர்தல்ல இருக்கேன். வோட்டுப் பதிவு முடிஞ்சு தான் வருவேன். வந்து தான் பார்க்கனும்"
"அப்படியா, நல்லா ஜாலியா குளுர என்ஜாய் பண்ணிட்டு வாங்க"

இப்படி தான் நாடே நினைச்சிக்கிட்டு இருக்கு......நாங்க ஏற்காடு மலை மேல இருக்கோம்னு....
நானும் மலைப்பகுதியில் தான் இருக்கேன். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற பகுதியை சுற்றி மலை இருக்கிறது. என்ன, மலை சைஸ் தான் கம்மி. ஆமாம் முப்பதடி உயரத்திற்கு மலை.

ஏற்காடு தொகுதின்னா ஏற்காடு மலை மேலேயே இருக்குன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. மலை மேலே 15,000 வோட்டு தான் இருக்கு. மீதி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள், மலைக்கு கீழே தான் இருக்கின்றன.

ஏற்காடு தொகுதியில் ஏற்காடு ஒன்றியம், அயோத்தியாபட்டினம் ஒன்றியம், வாழப்பாடி ஒன்றியம், பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் என உள்ளடங்கியவை.

உளுந்தூர்பேட்டை - ஆத்தூர் - சென்னை சாலையில் தலைவாசல் தாண்டிய உடனேயே ஏற்காடு தொகுதி துவங்கிவிடும். சேலம் மாநகர எல்லை வரை செல்லும். சேலம் செல்லும் முன் அயோத்தியாப்பட்டிணம் உள்ளது. அதை ஒட்டி உள்ள அரூர் பாதையை ஒட்டி ஒரு மலைப் பாதை செல்லும். அதுவும் ஏற்காடு செல்லும் சாலையே.

சேலம் நகருள் சென்று செல்வதே ஏற்காட்டின் முதன்மைப் பாதை. ஏற்காட்டின் தட்பவெட்பம் வேறு, கீழே வேறு. ஆனாலும் அயோத்தியாப்பட்டிணத்தை ஒட்டியப் பகுதிகளில் சிறுசிறு குன்றுகள் இருப்பதால், அங்கு கொஞ்சம் குளிர்ச்சியான தட்பவெப்பம் தான்.

நாங்கள் இருப்பது அயோத்தியாப்பட்டிணத்தை ஒட்டி இருக்கும் பகுதி, எனவே கொஞ்சம் குளிர்ச்சியை நாங்களும் அனுபவிக்கிறோம். ஒரு வாரத்தில் பலருக்கும் முகம் கருத்து விட்டது. சிலருக்கு சளி கோர்த்து விட்டது.

இன்னும் பசுமையாய் இருக்கும் பகுதி இது. மரவள்ளிக் கிழங்கு என்னும் குச்சிக்கிழங்கு முதன்மை பயிர். குச்சியை முதன்மையாகக் கொண்ட சேகோ தொழில் ஆத்தூர் பகுதியில் முக்கியத் தொழில். பாயசத்தில் பயன்படுத்தும் "ஜவ்வரிசி" தான் சேகோவின் முதன்மை தயாரிப்பு.

தென்னை, பாக்கு, மஞ்சள், துவரை என பல பயிர்கள் இங்கு உண்டு. ஆனால் மக்கள் ஒரே ரகம் தான். சாதிகள் பல இருக்கலாம், மதங்கள் பல இருக்கலாம், ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் இந்தப் பகுதி மக்கள் ஒரே ரகம் தான், உழைப்பாளிகள்.
# ஏற்காடு, ஏற்றமிகு மக்களின் காடு, நாடு, வீடு !


                        

பணியே, பிணி போக்கும் மருந்து !

இரவு 1 மணி. திடீரென்று தூக்கம் போனது. வலது கையில் வலி. தாங்கவில்லை. எப்படி வலி வந்தது என்று தெரியவில்லை, ஆனால் உயிர் போவது போல வலி. டாக்டரிடம் போனோம். புரண்டு படுக்கும் போது ஏதோ தசைப்பிடிப்பு என சொல்லி டாக்டர் ஊசி போட்டார்.

ஆனாலும் நான்கு மணி ஆயிற்று தூங்க. காலை ஏழு மணிக்கு எழுந்து கிளம்ப மனம் இல்லை. என்ன செய்ய, அன்று உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கல் செய்ய கடைசி நாள். என் முன்னிலையில் மனு தாக்கல்செய்ய கழகத்தினர் காத்திருந்தனர். 2011 செப்டம்பர்.

குளித்து வீட்டை விட்டு வெளியே வந்த போது அங்கேயே 50 பேர். சிரமப்பட்டு இடது கையால் வலது கையை தூக்கி வணக்கம் வைத்தேன். முடியவில்லை. இடது கையால் மட்டும் வணங்கினேன். செந்துறை போனேன். 1000 வணக்கம் இரு கையாலும். லேசாக வலி குறைந்திருந்தது. அடுத்து வேப்பூர் ஒன்றிய அலுவலகம், அங்கு 1000 வணக்கம்.

கை வலி எங்கே போனது என்றே தெரியவில்லை......

******************************

கடந்த வாரம் சென்னையில் இருந்து அரியலூர் வந்து இறங்கும் போது இரவு 1 மணி. காலை கீழே வைக்கும் போதே இடுப்பில் வலி. காலையில் எழுந்து நடக்கும் போதும் வலி. காலை தொகுதியில் சுற்று பயணம், மாலை காரைக்குடி பயணம். இரவு அரியலூர் திரும்பி, மறுநாள் காலை ஏற்காடு தேர்தலுக்கு பயணம்.

கிட்டதட்ட "பேரழகன்" திரைப்பட சூர்யா போல இடுப்பை வளைத்து நடந்தேன். அப்படியே ஆகி விடுவேனோ என பயமாக ஆகிவிட்டது. கிராமத்து நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க அழைத்தார்கள். லேசாக 'S' போல வளைந்து நடக்க ஆரம்பித்தேன். பின் வரிசையிலேயே நடந்தேன்.

பார்த்தவர்கள் எல்லாம் என்ன என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். மூன்றாவது தெரு, வலி தெரியவில்லை. நான்காவது தெரு லேசாக முன் வரிசைக்கு வந்தேன். அவ்வளவு தான், வண்டி கிளம்பி விட்டது. அப்புறம் நான் தான் முதல் ஆள். அன்று 4 கி.மீ இருக்கும், நடந்தது. அடுத்த நாள் அடுத்த பகுதி, 3 கி.மீ.

இன்று வேட்பாளர் மாறனோடு வாக்கு சேகரிக்கும் பணி. அதிமுக வேட்பாளர் போல் இல்லாமல், இவர் வீடு வீடாக நடந்து ஓட்டு கேட்டார். இந்த பகுதி இரண்டு தெருக்கள் தொடர்ந்து இருந்தால், அப்புறம் விட்டு விட்டு தான் வீடுகள்.
விவசாயம் செய்யும் வயலிலேயே வீடுகள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் 50, 100 மீட்டர் இடைவெளி. ஒவ்வொரு வீட்டுக்கும் ஓட ஆரம்பித்தார் வேட்பாளர் மாறன். உடன் இரண்டு பேர், அதில் நான் ஒருவன். எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இங்கு நின்று விடுவார், அங்கு நின்று விடுவார் என என் உடல் அளவை வைத்து கணிக்க ஆரம்பித்தனர்.



காலை 8.30 மணிக்கு ஆரம்பித்தது மதியம் 2 மணி வரை தொடர்ந்தது. மதியம் 3 மணிக்கு ஆரம்பித்தது மாலை 6.30 மணி ஆயிற்று முடிய. இதில் இசைக்குழுவில் பங்கேற்றதும் உண்டு. இடுப்பு வலி என்று ஒன்று இருந்ததே மறந்து போனது, எந்த வைத்தியமும் செய்யாமல். போயே போச்சி. போயிந்தி. it's gone.

# பணியே, பிணி போக்கும் மருந்து !

வியாழன், 21 நவம்பர், 2013

அவசர சட்டமன்ற கூட்டம் -விமர்சனம் - நக்கீரனில் எனது கட்டுரை

12.11.2013 மாலை 6 மணி. பேரவை திருக்குறளோடு துவங்கியது. அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கினார். இந்த தீர்மானங்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து நிறைவேற்றப்பட்டவை. உணர்ச்சிவயப்பட்டு நிறைவேற்றப் பட்டவையல்ல ஏற்கனவே 5 காமன்வெல்த் மாநாடுகளில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அது போல இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாததும் வழக்கமான ஒன்றாகத் தான் இருக்கிறது. “வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வது, தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். “பல துரோகங்களை இது வரை இந்திய அரசு செய்திருந்தாலும், இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேடும் வகையில் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவை இந்திய பேரரசு எடுக்கும் என்று உலகத் தமிழர்களும், இந்த மாமன்றமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் மத்திய அரசு மீண்டும் தமிழர்களை வஞ்சித்துவிட்டது என்று 12 நிமிடம் உரையாற்றி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

எல்லோரும் எதிர்பார்த்து வந்த அனல், சூடு முதல்வர் உரையில் இல்லாததால் உறுப்பினர்கள் மத்தியில் லேசான அயர்வு. அதிமுக உறுப்பினர்களிடமே பெரிய உற்சாகம் இல்லை. காரணம் பழைய அறிக்கையின் மறுபதிப்பாகவே இந்த அறிக்கை அமைந்திருந்தது.

வாழ்த்துரைக்க தோழமைக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசனை அழைத்தார் சபாநாயகர். உலகத் தமிழர்களுக்கு உதவும் கரம் என ஆரம்பித்தவர், இந்திய திருநாட்டிலேயே அம்மா தான், அவரது தீர்மானத்தை வழிமொழிகிறேன் என்று 9 நிமிடம் பேசினார்.


இந்த சமயத்தில் அவசரமாக வெளியில் இருந்து வந்த காங்கிரஸ் கிள்ளியூர் ஜான் ஜேக்கப், பட்டுக்கோட்டை ரங்கராஜனோடு ஆலோசனை செய்தார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு சபையை விட்டு வெளியே போனார்.

அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார்,விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு ஒய்வில்லாமல் உழைத்து தமிழகத்தை முதல் மாநிலமாக்க பாடுபடும் புரட்சித் தலைவி. இலங்கைத் தமிழர்கள் மேல் அக்கறையுள்ள் ஒரே தலைவர் புரட்சித்தலைவி தான். எடுத்துக் கொண்ட பிரச்சினைகளுக்காக ஓயாமல் போராடும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி தான் இப்படி புரட்சித்தலைவியை ஜெபித்துக் கொண்டிருந்தவர் ரூட் மாறினார்.

பேசாத பிரதமர் ஒருவரை பெற்றிருக்கிறோம் என்று சரத்குமார் பேசும் போதே காங்கிரஸ் கட்சியின் ரங்கராஜன் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். உடன் மீதி மூன்று பேரும் எழுந்தனர். சிறிது நேரம் வாக்குவாதமானது. முதலமைச்சர் ஜெயலலிதா சிரித்துக் கொண்டார். சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் எழுந்து முதல்வரிடம் சென்றார். திரும்பி வந்து சபாநாயகர் காதை கடித்தார். அது வரை உக்காருங்க, உக்காருங்க என்று சொல்லிக் கொண்டிருந்த சபாநாயகர்,பேசாத பிரதமர்னு சொல்லியிருக்கார், நீங்க பேசும் போது பேசுவார்னு சொல்லிடுங்க என சொல்ல காங்கிரஸார் கொதித்தனர்.

சபாநாயகர் முக்கிய தீர்மானம் என சொல்ல, காங்கிரஸார் அவையில் இல்லாதவரை பற்றி எப்படி பேசலாம் என வாதிட குழப்பம் நீடித்தது. ரங்கராஜன் சோர்ந்து உட்கார்ந்தார், ஆனால் விஜயதாரணியும் பிரின்ஸும் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். ஜெ சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் 5 நிமிடம் போனது.

இந்த சந்தர்பத்தில் சி.பி.எம் உறுப்பினர்கள் தங்கவேல், ராமமூர்த்தி ஆகியோர் அவையில் இருந்து நழுவினர். தேமுதிக கொறடா சந்திரக்குமார், பார்த்தசாரதி மற்றும் முன்வரிசையில் உள்ள உறுப்பினர்கள் ஆலோசனையில் மூழ்கினர். பண்ருட்டியார் ஆப்சென்ட். காங்கிரஸ் மீண்டும் உள்ளே வந்து அமர, அதை பார்த்த ஜெ-வுக்கு சிரிப்பு.

புதிய தமிழகம் டாக்டர்.கிருஷ்ணசாமி,கடந்த நமது தீர்மானத்தால் பிரதமர் இலங்கை செல்லவில்லை என்பதை அங்கீகரிக்க வேண்டும். அதை வரவேற்பதில் எந்த தவறும் இல்லை என பேச குறுக்கிட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பிரதமர் 5 முறை மாநாட்டில் கலந்து கொள்ள்வில்லை. இந்த தீர்மானத்தால் என்று சொல்வது தவறு.  கிருஷ்ணசாமி மூடி மறைக்கிறார்என சாடினார். மீண்டும் கிருஷ்ணசாமி, முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து இருக்க வேண்டும். என சொல்ல, இப்போது அமைச்சர் முனுசாமி குறுக்கிட்டார்,கிருஷ்ணசாமியின் பேச்சு தீர்மானத்தை நீர்த்து போக செய்யக் கூடாதுஎன்றார்.

சற்றே சூடான கிருஷ்ணசாமி,மாணவப் பருவத்தில் இருந்து இந்தப் பிரச்சினைக்கு போராடுபவன் நான்எனும் போது அதிமுக-வினர் கேலி செய்து கூக்குரலிட சபாநாயகர்,உக்காருங்க என கிருஷ்ணசாமியை பார்த்து உத்தரவிட்டார். கொதிப்படைந்த டாக்டர்,கொல்லப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறோம். என பேசியவர் பரமக்குடியில் என்று ஏதோ சொல்ல சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். துள்ளி எழுந்த அமைச்சர் வைத்திலிங்கம்,கிருஷ்ணசாமி கட்டபொம்மனா ? எட்டப்பனா ? எனக் கேட்க, டாக்டர் கூலாக,கிருஷ்ணசாமி என்றும் எட்டப்பனாக இருக்கமாட்டான் என பதில் சொல்ல அதிமுக பக்கமிருந்து குரல் வந்து கொண்டே இருந்தது.

அடுத்து ஜவாஹிருல்லா,கிழக்கு பாகிஸ்தானில் இனப்படுகொலை நடைபெற்ற போது மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர்ராய் குரலுக்கு மதிப்பளித்து பாரளுமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அந்த தீர்மான நகலை படித்துக் காட்டினார். காங்கிரஸ் சார்பாக ரெங்கராஜன் பேச அழைக்கப்பட்டார். தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே, தீர்மானத்திற்கு மதிப்பளித்தே, மத்திய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டே பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு நன்றி. மத்திய அரசுக்கு வெளியுறவுக் கொள்கை இருக்கிறது, பாதுகாக்கிற கடமை இருக்கிறது என்ற போது அதிமுக பக்கமிருந்து கேலி குரல் வந்தது.கேலி,கிண்டல் வேண்டாம். மத்திய அரசின் நடவடிக்கை சரியே என்று முடித்தார்.

பேச அனுமதி கேட்டுக் கொண்டிருந்த டாக்டர்.கிருஷ்ணசாமி சபாநாயகர் அருகில் சென்று தரையில் அமர்ந்து குரல் கொடுத்தார். அவைக் காவலர்களை அழைத்து அவரை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். புதியதமிழகம் கட்சியை சேர்ந்த இன்னொரு உறுப்பினரான ராமசாமி இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு பேப்பரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் இருந்த அதிமுக உறுப்பினர்கள் அவர் முதுகில் தட்டி கொடுத்து பாராட்ட, “அடக்கமாக சிரித்தார். இதற்குள் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளியேறிவிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுமுகம்,தீர்மானத்தின் அத்தனை அம்சங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்று பாராட்டுகிறது. தீர்மானத்திலஆழ்ந்த வருத்தம் என போட்டிருப்பது அம்மாவின் பெருந்தன்மையை காட்டுகிறது. கண்டனத் தீர்மானமே கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. மலையகத் தமிழர்கள், ஈழத்தமிழர்களைக் காக்கின்ற காவல் அரண் அம்மாஎன்று தாபா இல்லா கதவு போல் மனம் திறந்து பாராட்டினார்.

சி.பி.எம் சார்பாக சௌந்தர்ராஜன் பேச எழும்போதே பாலபாரதி அவசரமாக எங்கோ எழுந்து சென்றார். இலங்கை விசாரணைக்கு உடபட மறுக்கிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் சி.பி.எம் மாறுபடுகிறது. அமெரிக்க ஆதரவு அணு ஆயுத கொள்கையால் தான் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றோம் என ஏதேதோ சொன்னவர், முந்தைய தீர்மானமே போதுமானது என்று இந்தத் தீர்மான நிறைவேற்றம் தேவையற்றது என சொல்லாமல் சொல்லி, அவரும் அவசரமாக வெளியேறினார்.

திமுக சார்பாக பேசிய தளபதி மு.க.ஸ்டாலின் எழுந்தவுடன் அதிமுக-வினர் ஆவலாக பார்த்தனர். இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கும் வகையிலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் உயிர்கள்உடைமைகள்,உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே முடிவெடுத்துக் கொள்ளும் வண்ணம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் வகையிலும் அதற்காக மத்திய அரசை வற்புறுத்தும் வகையிலும் கொண்டு வரப்படும் அரசின் தீர்மானத்தை திமுக சார்பில் வரவேற்று வழிமொழிகிறேன். என்று நறுக்கு தெரித்தார் போல் முடித்தார்.

தேமுதிக சார்பாக பேசிய சந்திரக்குமார்,மாநாட்டில் பிரதமர் மட்டுமல்ல, ஒரு துரும்பும் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகம் எதிர்பார்க்கிறது என்று ஆரம்பித்தார். கலைஞர் சொன்ன துரும்பை இவர் பிடிக்கிறாரே என பின்னால் இருந்து குரல். சேனல் 4-ஐ கேப்டனோடு பார்த்த எங்களுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. எந்த மக்களுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என ஆண்டவனிடம் பிரார்திப்போம் என்றவர் இலங்கைப் பிரச்சினையில் தேமுதிக இரட்டை வேடம் போடும் இயக்கம் அல்ல என்று பன்ச் வைத்து முடித்தார். மிச்சம் இருந்த சி.பி.எம் உறுப்பினர் சிதம்பரம் பாலகிருஷ்ணனும் வெளியேறினார்.

சபாநாயகர் ஒரு பேப்பரை எடுத்தார். இதயத்தால் சிந்திப்பவன் மனிதன். புறநானூற்றின் புது வடிவத்தின் தூய்மையான அன்பின் வெளிப்பாடே தீர்மானம் என்று கவிதையாய் ஆரம்பித்தவர் குட்டிகதைக்கு போனார், குருவும் சீடரும் அலை,கரை குறித்து பேசினார்கள். அலை விடாமுயற்சிக்கும், கரை காப்பதற்கும் அடையாளம்.  மூத்தக்குடி தமிழ்குடியை காக்க அவதரித்த அன்னை திருமகள் அம்மா அலையாகவும், கரையாகவும் இருந்து காக்கிறார். என்றவர் சொன்ன அடுத்த வார்த்தை குபீர் சிரிப்பை உண்டாக்கியது. இதனால் அம்மா ஹிஸ்டரியில்இடம்பெறுகிறார். செங்கோட்டையையும் ஆளப்போகும் அம்மா ஹிஸ்டரியில் இடம் பெற போகிறார்””.

தங்கம் தென்னரசு, “அப்போ இந்த தீர்மானமும் ஹிஸ்டரியில்இடம் பெறுமா ? எனக் கேட்க, தேமுதிக பாபுமுருகவேல்,அண்ணே, ஹிஸ்டரின்னா எஸ்.டி.டீயாண்ணே என லேட்டஸ்ட் சினிமா ஜோக்கை சொல்ல காமெடியானது சபை.

குரல் வாக்கெடுப்பு நடத்தி தீர்மனத்தை மறுப்போரே இல்லை. தீர்மானம் நிறைவேறியது என சபாநாயகர் அறிவிக்க, ஓ.பி.எஸ் எழுந்து ஜெ-வை பார்த்து பாதி வளைந்து தனது டிரேட்மார்க் கும்பிடை போட்டு நன்றி தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதியதமிழகம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லாத நிலையில் இருந்தோரை கொண்டு, தேவையில்லாத சர்ச்சைகளோடு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போது இரவு 7.40. விடியற்காலை 05.00மணி, தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு ....