பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 நவம்பர், 2013

பொறியும், பொரியுமாய் வாழ்ந்த காலம்.....

கார்த்திகை மாதம் வந்தாலே எங்க செட் ரெடியாயிடுவோம். 

பனைமரம், பனைமரமா கெளம்பிடுவோம். அது பள்ளிக் கூடம் படிக்கும் போது. பனம்பூவ கலெக்ட் செய்வோம். 

ரெகுலரா டிரெஸ் தைக்கிற டெயிலர்கிட்ட போய் உட்கார்ந்து அவர தாஜா பண்ணி பைய தைப்போம். நீள் செவ்வகம் அளவில் பை இருக்கும். நாலஞ்சு பை.

கலெக்ட் செய்த பனம்பூவ கரிமூட்டம் போடுவோம். கரிமூட்டம்னா தரையில் சின்னதா குழி தோண்டி அதுல பனம்பூவ அடுக்குவோம். அதோட மரக்குச்சிய போட்டு, மேல தழைய போட்டு மூடுவோம்.

இப்போ மரக்குச்சிய பத்த வைப்போம். அத எரியவும் விடக்கூடாது, அணையவும் விடக் கூடாது. லேசா நெருப்பு கனிஞ்சுகிட்டே இருக்கற கண்டிஷன்ல வைக்கணும்.

பூரா பனம்பூவும் கரியாக விட்டு எடுக்கணும், முழுசும் எரிய விட்டுடக் கூடாது. அத தூள் தூளா உடச்சிக்கனும். இதோட தவிட்ட சேர்க்கணும். அப்புறம் உப்ப கலக்கணும்.

இது மூன்றும் சேர்ந்த இந்தக் கலவைய அந்த பையில் போடணும். மரக்கிளையிலேர்ந்து ஆங்கில "V" வடிவில இருக்கற கவைய ஒடச்சி எடுக்கணும்.

கவை நடுவுல இருக்கற இடைவெளில இந்தப் பையை வைக்கணும். கவைக்கு மேல ரெண்டு முழம் அளவுல சணல் கயிற்ற கட்டணும், அத பிடிச்சி சுழற்றுற அளவுக்கு.

இப்போ பை மேல, அடுப்புல இருந்து ஒரு நெருப்பு துண்ட எடுத்து வைக்கணும். கொஞ்சம், கொஞ்சமா அந்த துணிப்பை கனியும். அப்போ கயிற்ற பிடிச்சி ஊஞ்சல் ஆட்டுற மாதிரி ஆட்டணும். ஆட்ட ஆட்ட தான் நெருப்பு கனியும்.

இப்போ பையிலிருந்து மத்தாப்பூ பொறி மாதிரி வரும். அப்படியே பையை சுற்றிகிட்டே, தலைக்கு மேல தூக்கி வட்டமா சுத்தணும். இப்போ நம்ம சுத்தி பொறியா பறக்கும், ஒரு சங்குசக்கரத்த தலைக்கு மேல சுத்தற மாதிரி.


                            நீலா நீலவண்ணன்'s photo.

அந்தப் பொறிக்கு காரணம் பனம்பூ, அது உடனே எரிந்திடாம கனிய தவிடு, படபடன்னு சவுண்ட வர உப்பு.

இது "கார்த்திய பொறி". அந்த வயசுக்கு பெரிய புராஜக்ட். 


அன்னைக்கு வீட்டுலயும் அரிசி பொரியும், வெல்லமும் போட்டு "வெல்லப் பொரி" கிண்டுவாங்க, சாப்பிடுவதற்கு.


# பொறியும், பொரியுமாய் வாழ்ந்த காலம்.....