பிரபலமான இடுகைகள்

வியாழன், 28 நவம்பர், 2013

அப்பா எப்பவும் துணையா இருப்பாரு....

போலீசிடம் மாட்டாமல் தலைமறைவாவது என முடிவெடுத்தோம். காரணம் அரசிற்கு ஏதாவது எதிர் வினை காட்டினால் தான் மனம் ஆறும் எனும் நிலை. 2001 தலைவர் கலைஞர் நள்ளிரவு கைது அன்று.

சில உடைகளோடு கிளம்பினோம், பைக்கில். முதலில் உள்ளூரிலேயே ஒரு நணபர் வீட்டில் தங்கினோம். அவர் அரசு ஊழியர். அவர் வீட்டில் என்னை போலீசார் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதால் பகல் முழுதும் அங்கேயே தங்கினோம். 

அதற்குள் என் தந்தையார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைதான செய்தி வந்தது. தொடர்ந்து கழக நிர்வாகிகள் கைதான செய்தி. மாலை ஒரு கிராமத்தில் சென்று தங்க முடிவெடுத்தோம். ஊர் உள் தங்கினால் தகவல் தெரிந்துவிடும் என்பதால் ஒரு வயலில் தங்கினோம்.

அந்த வயல் எனது பள்ளித் தோழன் எழில்வளவனுக்கு சொந்தமானது. மிகவும் நல்ல நண்பன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு முழு நேர விவசாயி ஆகி விட்டதால் அதிகம் வெளி உலகம் அறியாதவனாக இருந்தான்.

யாராவது விளையாட்டுக்கு கேட்கும் கேள்விக்கும் சீரியஸாக பதில் சொல்லும் அளவுக்கு அப்பாவியாகி இருந்தான். உடன் படித்த எங்களை சார் என்று கூப்பிட்டு சங்கடப்படுத்தினான். அப்படி கூப்பிடாதே என்றால் "இல்லை சார், நீங்கள் எல்லாம் இப்ப பெரிய ஆள்" என்று கதறடித்தான்.

அங்கு என்னோடு தங்கியவர்களில் சரவணன் இன்னொரு பள்ளித் தோழன். எப்போதும் கேலியும் கிண்டலுமாக அவன் இருக்கும் பகுதியே கலகலப்பாக இருக்கும். அவனது ஒரே பிரச்சினை துக்க காரியம். யாராவது இறந்து விட்டால் எங்களோடு வரமாட்டான். அவ்வளவு அலர்ஜி.

இரவு நேரங்களில் கார் ஓட்டி வரும் போது, எங்காவது சுடுகாடு குறுக்கிட்டு, சடலம் எரிந்துக் கொண்டிருந்தால் அவ்வளவு தான். வண்டியை இரண்டு மடங்கு வேகத்தில் ஓட்ட ஆரம்பித்து விடுவான்.

அன்று இரவானது. எழில் எங்களை மோட்டார் கொட்டகையில் படுக்க சொல்ல, நான் வெளியில் படுக்க முனைந்தேன், இயற்கை காற்றுக்காக. நான் ஒரு மரத்தடியை தேர்ந்தெடுத்தேன். அதன் கீழ் அருமையான சிமெண்ட் மேடை இருந்தது.


                                     

நான் அதன் மேல் துண்டை விரித்து படுத்தேன். சரவணனும் அருகில் படுத்தான்.
எழில் ,"இங்க தான் வழக்கமா நான் படுப்பேன்" என்றான்.
சரவணன், " பேய் பயம் ஒன்னும் இல்லையா ?" என்று கேட்டான்.
"அதெல்லாம் அப்பா எப்பவும் துணையா இருப்பாரு" என்றான் எழில்.
"அப்பா எங்க இருக்காரு ?"
"கீழ தான் இருக்காரு"
சரவணன் எழுந்து சுற்றிலும் தேடினான். காணோம்.
"காணோமே"
எழில் நாங்கள் படுத்திருந்த மேடையை தட்டிக் காட்டினான்.


"அப்பா கீழ தான் இருக்காரு. மூனு வருசம் ஆச்சி"

சரவணன் எடுத்த ஓட்டத்தை பார்க்க வேண்டுமே....