பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

எள் என்றால் எண்ணெயாக நிற்பார்....

அப்போது திமுக எதிர்கட்சி. திருச்சியில் திமுக மாநாட்டு ஏற்பாடுகள். பெரிய பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. இப்போது போல ஷீட்டால் அமைக்கும் பந்தல் அல்ல, தென்னங்கீற்றாலான பந்தல். பந்தல் அமைப்பதே பெரும் பணி.

திருச்சி, கரூர், பெரம்பலூர் என ஒருங்கிணைந்த பழைய திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் மாதக் கணக்கில் தங்கி பணியை பார்வையிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர் இந்தப் பணிகளுக்கு.

இடையில் ஒரு நாள் இந்தப் பணிகளை காண தலைவர் கலைஞர் திருச்சி வருகிறார். மாநாட்டு பந்தலை கண்டு மகிழ்வுறுகிறார். சில திருத்தங்களை சொல்கிறார். மற்ற பணிகளுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு இரவு 10.30-க்கு மலைக்கோட்டை ரயிலை பிடித்து சென்னை செல்கிறார். அண்ணன் நேரு தலைமையில் வழியனுப்பி வைக்கிறார்கள் நிர்வாகிகள்.

காலை 9 மணி, சென்னை கோபாலபுரம், தலைவர் கலைஞர் இல்லம். அண்ணன் நேரு காரில் வந்து இறங்குகிறார். பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி, இரவு திருச்சியில் வழியனுப்பி வைத்தாரே, காலையில் இங்கு நிற்கிறாரே என்று. சென்னை-திருச்சி சாலை இப்போது போல நான்கு வழிச் சாலை கிடையாது அப்போது, நல்ல சாலையும் கிடையாது. அது 1996.

தலைவர் சொன்ன திருத்தங்களை இரவே முடித்து, அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, தலைவர் சொன்ன ஆலோசனைகளை செய்து, அதை தலைவரிடம் காட்டி ஒப்புதல் வாங்க, விடியற்காலை கிளம்பி காரிலேயே வந்து சேர்ந்துவிட்டார்.

தலைவருக்கும் அண்ணன் நேரு அவர்களை கண்டு அதிர்ச்சி. ஒரு புறம் பணிகளுக்காக பாராட்டினாலும், இரவுப் பயணத்திற்காகக் கடிந்து கொண்டார். இது தான் அண்ணன் நேரு. எள் என்றால் எண்ணெயாக நிற்பார். சுறுசுறுப்புக்கு மறு பெயர்.

இப்போது என்றில்லை அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, தொழிலதிபராக இருந்த போதும் அப்படி தான். அரியலூர் தான் அவரது தொழில் மையம். அப்போது புல்லட் அரிதாகத் தான் இருக்கும். காணக்கிளியநல்லூரில் இருந்து கிளம்பினால், அந்த புல்லட் திருச்சி பகுதியையோ, அரியலூர் பகுதியையோ ஒரு சுற்று சுற்றி தான் நிற்கும்.

இப்போதும் அப்படி தான். திருமண முகூர்த்த நாட்களில் அவரது கார் கிளம்பினால் இரண்டு, மூன்று மாவட்டங்களை சுற்றி வந்துவிடும். அன்று பார்த்த அதே இளமைத் துடிப்பு.

எப்போதும் இளமையாக இருப்பவர்க்கு  நவம்பர் 09 அன்று பிறந்தநாள்.

# பயணம் தொடரும் !