பிரபலமான இடுகைகள்

திங்கள், 16 டிசம்பர், 2013

"நெஞ்சுக்கு நீதி" ஆறாம் பாகம் வெளியீட்டு விழா

அண்ணா அறிவாலயம்.

தலைவர் கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி" ஆறாம் பாகம் வெளியீட்டு விழா. 
அண்ணன் ஆ.ராசா அவர்களுடன் அரங்கில் நுழைகிறோம். உள்ளே நுழைந்து நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டே இருக்கும் போதே மூன்றாவது கண் சிமிட்டுகிறது. ஜெயின் கூபி புகைப்படம் எடுக்கிறார்.

"முத்தமிழே நீ வாழ்க, மூவேந்தே நீ வாழ்க" தலைவர் கலைஞர் அரங்கினுள் நுழைந்துவிட்டார். ஒட்டு மொத்த அரங்கும் எழுந்து ஆராவரிக்கிறது. உடன்பிறப்புகளை நோக்கி கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். தங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து கையசைத்ததாக உற்சாகம்.

                         

செய்தி வாசிப்பாளர் ஜெயஶ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கியது. தமிழ்தாய் வாழ்த்து. தளபதி ஸ்டாலின் அவர்கள் மேடையில் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

                        


நீதியரசர் கோகுல கிருஷ்ணன் முதல் பிரதியை வெளியிட கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்டவர்கள தலைவர் கலைஞரிடத்தில் நேரடியாகப் புத்தகத்தை பெறறுக் கொண்டோம்.

வழக்கம் போல் வரிசையில் நான் கடைசி. அதற்குள் புத்தகத்தை பெற்று அண்ணன் தங்கம்.தென்னரசு கீழே வந்து விட்டார். "நீதியை முதலிலேயே பெற்று விட்டீர்களா ?" என்றேன். " நாங்கள் பெற்றது போக 'மீதி' உங்களுக்கு கிடைக்கும்"என்றார்.

அண்ணன் துரைமுருகன் வரவேற்புரை. "வழக்கமாக கலைஞரின் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு நான் தான் வரவேற்புரை" என்று துவங்கியவர் கலைஞரின் பன்முகத் தன்மையை தன் பாணியில் "பார்த்தால் அரசியல்வாதி, கொஞ்சம் திரும்பினால் கவிஞர், கொஞ்சம் திரும்பினால் வசனகர்த்தா..." என அடுக்கினார்.

                         

நீதியரசர் கோகுலகிருஷ்ணன் வாழ்த்துரை,"கலைஞர் குறித்து கண்ணதாசன் அவதூறாக எழுதிய போது, வழக்கு தொடுத்தோம். நான் தான் வழக்கறிஞர். நீதிமன்றத்திற்கு வந்த கண்ணதாசன் மன்னிப்பு கேட்டார். கலைஞர் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தார். இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாடறியும்"

                         

வைரமுத்து தனக்கேயுரிய பாணியில் நெஞ்சுக்கு நீதி நூல்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் துவங்கினார். முப்பது நிமிடம் பேசினார். "கலைஞர் அய்ம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் மனநல மருத்துவராக இருக்கிறார். மனநலம் குறைந்து டாக்டரை பார்த்தால், ஃபிரியாக இருங்கள், புறம் பேசுங்கள் என்கிறார். இங்கே இருப்பவர்கள் அவரை வாழ்த்தி மனநலமாக இருக்கிறோம். வெளியே சிலர் அவரை புறம் பேசி நலம் பெறுகிறார்கள், ஊடகத்தில், பத்திரிக்கையில், செல்போனில்"

                        

உடல் நலம் பெற்று முதல் நிகழ்ச்சியாக பங்கேற்ற பேராசிரியர் அவர்கள் வழக்கம் போல் தமிழ் நதியாய் பாய்ந்தார். "கலைஞரும் நானும் இருபது வயதில் சந்தித்தோம். அப்போது அவர் இளைஞர், நான் அப்போதே என்னை பேராசிரியராக என்னைப் எண்ணிக் கொண்டவன். இப்போது இருவருக்குமான உறவு. அவர் தமிழ் என்றால், நான் தமிழ் பற்றாளன். அவர் இயக்கம் என்றால், நான் தொண்டன். அவர் வழிகாட்டி என்றால், நான் பின் தொடர்பவன். என்னை விட இளைஞராக இருப்பதால் வழிகாட்டி" என்ற போது அவையே இளக்கம்.

                       

அது கலைஞர் பேசத் துவங்கும் போது தெரிந்தது, நா தழுதழுத்து ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. "என்ன பேசுவது என்றே தெரியவில்லை" என்றார். பேராசியரை விளிக்கும் போது "அண்ணா இல்லாத இடத்தில், எங்களை வழி நடத்தும் இளைய அண்ணனே" என்ற போது நெகிழ்ச்சி.

                      

ஆனால் அடுத்த வரியிலேயே ஃபார்ம்-க்கு வந்துவிட்டார். "விரைவில் உங்கள் முன் நான் நிற்பேன். இது நான் கொடுக்கும் உறுதி மொழி அல்ல. பேராசிரியருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் கொடுத்த உறுதி மொழி"

எமர்ஜென்சிக்கு ஆதரவு இல்லை என்றால் ஆட்சி கலைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் எச்சரித்தும், மீறி எதிர்த்து ஆட்சியை இழந்த சம்பவத்தை விவரித்தார்.

விடுதலை புலிகளுக்கு ரகசியங்களை சொன்னதாக சொல்லி, 1991ல் ஆளுநர் பரிந்துரை இல்லாமல், அன்றைய பிரதமர் சந்திரசேகராலும், ஜனாதிபதி வெங்கட்ராமனாலும் ஆட்சி கலைக்கப்பட்ட நிகழ்வை கூறினார்.

"அய்ந்தாம் பாகம் வெளியிட்ட போது, இயற்கை அனுமதித்தால் அடுத்த பாகம் வரும் என்று சொன்னேன். இப்போது இயற்கை அனுமதித்தால் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் பாகம் வரும்" நிறைவு பன்ச்.

வாழ்க கலைஞர், வளரட்டும் நீதி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக