பிரபலமான இடுகைகள்

வியாழன், 26 டிசம்பர், 2013

சில நிமிடம் சாண்டா கிளாஸ் ஆன நினைவு...

கிறித்துவ கிராமங்கள் நிறைய, ஆண்டிமடம் சிறு நகரை சுற்றி. வரதராசன்பேட்டை, தென்னூர், கூவத்தூர், கீழநெடுவாய், மேலநெடுவாய், பட்டிணங்குறிச்சி என. அதனால் குடும்ப நண்பர்கள் நிறைய பேர் கிறித்துவர்கள். தவறாமல் கேக் கிடைக்கும், கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்கு. நிறையப் பேர் உறவினர்கள் போலவே.

வீரமாமுனிவர் முதன்முதலில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியது வரதராசன்பேட்டையில் தான். பிறகு ஏலாக்குறிச்சியில் பணியாற்றினார். அப்போது தான் காவலூர் கலம்பகம் நூலை எழுதினார். அப்போது இந்தப் பகுதியில் கல்வியும், மருத்துவமும் மிஷனரிகளால் எல்லோருக்கும் கிடைத்தது.

அப்படி வரதராசன்பேட்டையில் அமைக்கப்பட்டது தான் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி. சென்னையில் இருக்கும் தொன்போஸ்கோ பள்ளியின் குழுமம் தான். இங்கு இடம் கிடைப்பது இன்றைக்கும் சிரமம் தான்.

வரதராசன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் அரசுப்பணியிலும், தென்னூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்திலும் நிறையப் பேர் இருப்பதற்கு காரணம் இந்தப் பள்ளி. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நிறையப் பேர் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும்.

நான் இங்கு ஆறாம் வகுப்புப் படித்தேன், மாணவர் விடுதியில் தங்கி. சில ஒழுங்குமுறைகளுக்கு பழகிக் கொண்டது இங்கு தான், சமூகப்பணி, விளையாட்டு, படிப்பு நேரம், இதர கலையார்வங்கள் என.

அந்த வருடம் கிறிஸ்துமஸ் கோலாகலம். பள்ளி வளாகத்தினுள், புதிய சர்ச் ஒன்று திறக்கப்பட்டது. அதனால் அந்த ஊரில் பிறந்து வெளியூரில் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் குவிந்திருந்தனர். ஊர்மக்கள், மாணவர்களும்.

காலையில் இருந்தே பள்ளியில் விழாக் கோலம். விடுதியில் கூடுதலாக. சிறப்பான விருந்திற்கு பிறகு கலை நிகழ்ச்சிகள். அதன் ஊடாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் வந்து பரிசுப் பொருட்களை கொடுத்தார்கள். என்றும் மறக்காத கிறிஸ்துமஸாக அமைந்தது.

எனக்கு ஒரு சாண்ட கிளாஸ் தன் பையையே பரிசாகக் கொடுத்தார், கூடுதலாக சிலப் பொருட்களுடன். தொப்பியும் கிடைத்தது. அன்றிலிருந்து பள்ளி விடுமுறை. விடியற்காலை கே.ஆர்.வி பஸ்ஸை பிடித்தோம்.

பஸ்ஸில் அந்தத் தொப்பியுடனும், அந்தப் பையுடனும் பயணம். பையிலிருந்த பேனா, பென்சில்கள் சிலவற்றை உடன் வந்த நண்பர்களுக்கு வழங்கி, சில நிமிடம் சாண்டா கிளாஸ் ஆன நினைவு நிழலாடுகிறது, மகிழ்வானத் தருணங்களாக.

# சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், சாண்டா கிளாஸ் ஆவோம். மற்றோரை மகிழ்விக்க !


                             Santa Claus Christmas Wallpaper HD