பிரபலமான இடுகைகள்

சனி, 7 டிசம்பர், 2013

உலகம் தான் எவ்வளவு சுவாரஸ்ய மனிதர்களை கொண்டிருக்கிறது !

"அடடா, நான் எவ்வளவு பெரிய ஆளுமையோடு நிற்கிறேன்" அண்ணன் தங்கமணி சொன்ன மனிதரை நானும் தேடினேன். அவர் என்னை தான் சொல்கிறார் என்று தெரிந்து லேசாக கிர்ரடித்தது.

அவர் என்ன சொல்கிறார் என்று சுற்றி நின்றவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு முகநூலும் தெரியாது. அதற்கு மேல் அவர் பேசியவற்றில் பல வார்த்தைகள் அங்கிருந்த யாருக்கும் புரியாத அளவிற்கு இலக்கிய காத்திரம்.

ஏற்காடு தேர்தல் பணிக்கு, அவசர சட்டமன்ற கூட்டத்தின் காரணமாக இரண்டு நாள் தாமதமாக சென்றேன். முன்பே சென்ற பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் போன் செய்தார், "உங்க முகநூல் நண்பர் தங்கமணி உங்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்"

அவர் தான் இவர். இடம் கூட்டாத்துப்பட்டி திமுக தேர்தல் அலு அலுவலகம். சுற்றி இருந்தவர்களின் விநோதப் பார்வை உறுத்த, அவரை கொஞ்சம் தள்ளிக் கொண்டு போனேன்,"இரண்டொரு நாளில் சந்திப்போம்" என்றேன்.

அந்த ஊரின் மதிப்பானக் குடும்பமான தர்மகர்த்தா குடும்பத்தின் வாரிசு. திமுகவின் முக்கியக் குடும்பமும் கூட. பிறிதொரு நாளில் சந்தித்தோம். உடன் இன்னொரு முக்கியக் குடும்பமான மணியக்காரக் குடும்பத்தை சேர்ந்த தங்கராஜ், இவரது உறவினரும் கூட. இன்னும் சில அவ்வூர் நண்பர்கள்.

உள்ளுர் அரசியல் நிலவரங்கள் குறித்து துவங்கியப் பேச்சு பல சப்ஜெக்ட்களை தொட்டது. அண்ணன் தங்கமணி எனது பதிவுகளை சிலாகித்து கூறினார். கணேச குமாரன், வா.மு.கோமு என பல எழுத்தாளர்களின் எழுத்துகளை பற்றி பேசினார். அவர்களுடைய நண்பரும் கூட இவர்.

பக்கத்திலிருந்த நண்பரின் செல்போன் ரிங்கியது. அந்த திரைப்பட வரிகளை நான் ஹம் செய்ய முயலும் போதே, தங்கமணி பாடி முடித்தார். அதில் நடித்த நடிகர் குறித்து சில செய்திகளையும் சொன்னார். இன்னொரு நணபர் சொன்ன வார்த்தை இடம் பெற்ற கலைஞரின் கவிதையை வரி பிசகாமல் ஒப்பித்தார். எந்த சப்ஜெக்ட்டும் பாக்கி இல்லை.

பூர்வீக நிலப்பபிரச்சினையில், கண்களை கட்டி கடத்தி, பதிமூன்று நாட்கள் இருட்டறையில் வைத்து அடித்ததில் நடை பிசகி, பற்கள் அனைத்தையும் இழந்த சொந்த அனுபவத்தைக் கூட எள்ளலும் நகைச்சுவையுமாக சொல்லக் கூடிய ஒரே மனிதராக இவர் தான் இருக்க முடியும்.

தங்கராஜ் சொன்னார்,"மூன்று மாதம் வீட்டை விட்டு வெளியில் வராமல் உட்கார்ந்து படிக்கக் கூடிய ஒரே ஆள் இவன் தான். ஊரில் படிப்பவனும் இவன் தான்" 

நான் கேட்டேன்,"அப்படி என்ன புத்தகங்கள் படிச்சிங்கண்ணே ?"

"முரசொலி மாறனின் மாநில சுயாட்சி, ஜெயகாந்தன், சுஜாதா புத்தகங்கள்" என்றவர் "அண்ணே, நாம வெட்டி ஆபிசர். அதனால படிக்க முடியுது" என்றார் தங்கமணி.

                                          

"எவ்ளோ வெட்டி ஆபிசர் இருக்கான். எத்தன பேர் படிக்கிறான் ? எத்தனை பேருக்கு இவன மாதிரி விஷயம் தெரியும் ? இவன் சொல்ற புத்தகம் பேரே எங்களுக்கு எல்லாம் தெரியாது. இவன் எங்க ஊரின் பொக்கிஷம் அண்ணே" என்றார் தங்கராஜ்.

# உலகம் தான் எவ்வளவு சுவாரஸ்ய மனிதர்களை கொண்டிருக்கிறது !