பிரபலமான இடுகைகள்

சனி, 11 ஜனவரி, 2014

திரும்பி பார்க்கிறேன் 2013-ஐ...

திரும்பி பார்க்கிறேன். கடந்த வருடத்தை.....

                                 

கழகப் பணி, தொகுதிப் பணி, சட்டமன்றப் பணி இவைகளைப் போல் முகநூல் பணியும் ஒரு கடமையானது.

2013 ஜனவரி மாதம் ஹைதராபாத்தில். எனது தந்தையாருக்கு பார்கின்ஸன் நோய்க்கு அறுவை சிகிச்சை, ஹைதராபாத் NIMS-ல் மேற்கொள்ளப்பட்டது. நோய் குறித்தும், சிகிச்சை குறித்தும் முகநூலில் பகிர்ந்து கொண்டது பலருக்கும் உதவியாக அமைந்தது.

ஹைதராபாத் வாசம் தெலுங்கு பேச்சுவதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள உதவியது, பல புதிய நண்பர்களை கொடுத்தது.

பிப்ரவரியில், விஜய் டி.வி "நீயா, நானா" நிகழ்ச்சியில் பங்கேற்றது ஒளிபரப்பானது. இது புதிய அடையாளத்தைக் கொடுத்தது.

மார்ச், மாணவர்கள் அழைப்பில் மாவட்டம் முழுதும், பாலச்சந்திரன் மறைவின் விளைவாக உணர்வுக் கொந்தளிப்பான உண்ணாவிரதங்களில் பங்கேற்பு. சட்டமன்ற கூட்டத் தொடர்.

ஏப்ரல் முதல் நாளே சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட், இரண்டு நாட்களுக்கு. கலைஞர் செய்திகள், தந்தி டிவி, ஜி டிவி என ஒரு சுற்று டிவி கலந்துரையாடல்கள்.

அரசு அறிவித்த மருதையாறு நீர்தேக்கத் திட்டம் தொடர்பாக, மக்கள் கருத்தை அரசு கேட்க வலியுறுத்தி, பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பு.

மே மாதம் கழக உட்கட்சித் தேர்தல். அஸ்திவாரமான "வார்டு கிளை"களுக்கானத் தேர்தல்.

ஜூன் மாதம், தமிழகம் எங்கும் வறட்சி நிவாரணம் அறிவித்த தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தின் ஆதாரப் பயிரான முந்திரிக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை. இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கோரிக்கை விடுத்தேன், நாளிதழ்களிலும் வந்தது.

இந்த சமயத்தில் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த முந்திரி விவசாயி சொக்கலிங்கம் கடன் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். நேரில் சென்று ஆறுதல் சொல்லி வந்தோம். இதனால், மாவட்ட நிர்வாகம் அவசரமாக கணக்கு எடுக்க ஆரம்பித்தது, நிவாரணம் தருவதாக. ஆனால் இது வரை தரவில்லை. நம்பி ஏமாந்து போனோம்.

ஜூலை மாதத்தில், செந்துறையிலிருந்து நக்கம்பாடி, நமங்குணம் செல்லும் பாதையை மறித்து ரயில்வே துறை பாலம் கட்டுவதை கண்டித்து, செந்துறையில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தினோம்.

டெல்லியில் உள்ள Indian Institute of Public Administration-ல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான “வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்” என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.

ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆலோசனை மேற்கொண்டு பணிகள் துவங்கப்பட்டன.

செப்டம்பரில் புதுக்கோட்டை கழக இணைய பயிற்சி பாசறை. பல்வேறு முகநூல் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல பயிற்சியும் கிடைத்தது.

அக்டோபரில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் வருகை. அண்ணன் ஆ.ராசா அவர்கள் ஏற்பாட்டில் இளைஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டம் பிரம்மாண்டமாக அமைந்த்து. கூட்டத்தில் தளபதி அவர்களால் பாராட்டப் பெற்றேன். மகிழ்ச்சியான தருணம்.

தளபதி அவர்கள் கலந்து கொண்ட அரியலூர் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது. அரியலூர் நகரில் இது வரை கூடாத கூட்டம் என அனைவராலும் பாராட்டப்பட்டது. மறுநாள் காலை தளபதி அவர்கள் தொலைபேசியில் அழைத்து பாராட்டியது ஒரு மாத உழைப்பிற்கு பலன்.

லேன்கோ பவுண்டேஷன் மூலம் கை-கால் இழந்தவர்கள் 39 பேருக்கு மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான செயற்கை கை,கால், ஊன்றுகோல் போன்றவற்றை பெற்று தந்தது ஆதம் திருப்தி அளித்த பணி.

முகநூலில் எழுதி வந்த சட்டமன்ற விமர்சனத்தை, அக்டோபர் கூட்டத் தொடர் போது, நக்கீரன் வாரமிரு முறை இதழில், நான்கு இதழ்களில் வெளியிட்டு என் எழுத்துக்கு அங்கீகாரம் அளித்தார்கள்.

நவம்பர், டிசம்பர் மாதங்கள் ஏற்காடு இடைத்தேர்தல் பணியில் கழிந்தது.

டிசம்பர் இறுதியில் கழக அமைப்புத் தேர்தலான, ஊராட்சிக் கழகங்களுக்கான தேர்தல் பணியில், ஒரு வாரம் தூங்கக் கூட நேரமில்லாமல் ஓடியது.

2006 ச.ம.உ ஆன பிறகு, டைரி எழுதும் பழக்கம் போய் விட்டது. முகநூல் உதவியால் தான் இதை தொகுக்க முடிந்தது.

ஓரளவு பலவகைப் பணிகளோடு வருடம் கடந்திருக்கிறது. புதிய அடையாளங்கள், அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. முகநூலில் நேரத்தை வீணாக்குவதாக பாராட்டும் உண்டு. அனைத்தும் நல்லதற்கே.

# இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும்...