பிரபலமான இடுகைகள்

புதன், 19 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாட்டு ஏற்பாடுகள் -1

"ஏம்பா, போர்ல தண்ணி எப்படி வருது ?"
"ஃபுல் போர்ஸ்ல வருதண்ணே" 

இந்த பதிலால், மழையை கண்ட விவசாயி போல் அண்ணன் கே.என்.நேரு அவர்களுக்கு மகிழ்ச்சி. மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு, தமிழக அரசின் "அன்பால்" மாநகராட்சி குடிநீர் வழங்காது என்பதால் 20க்கு மேல் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க RO பிளாண்ட் போடப்பட்டுள்ளது.

மின்சார இணைப்பிற்கும் அரசை நம்ப வேண்டாம் என, 180க்கு மேற்பட்ட ஜெனரேட்டர்கள் உதவியுடன் மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அரசின் அன்பு எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாநாடு நடைபெறுகிற இடத்திற்கு செல்லும் சாலையின் நிலையை கேட்டாலே புரியும்.

சாலையை புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டு, பழைய சாலை கொத்தப்பட்டு, ஒரு அடுக்கு ஜல்லி சாலை அமைக்கப்பட்ட நிலையில், வேலையை நிறுத்த சொல்லி வாய்மொழி உத்தரவு. ஒரு மாதமாக தார் போடப்படாமல், சாலை மீண்டும் சீர்கெட்டு வருகிறது. இந்த சாலையில் முக்கிய கல்லூரி உள்ளது, மாணவர்களும் அவதிப்படுகின்றனர்.

இதை போல், பல முனைத் தாக்குதல் அரசு தொடுத்து வருகிறது. ஆனாலும் மாநாட்டு பணி அசராமல் தொடர்கிறது.

இது வரை இல்லாத அளவிற்கு, மாநாட்டு பணிகள் பிரம்மாண்டம், அனைத்து வகையிலும். திண்டுக்கல் சாலையில் செல்லும் போதே, டைரக்டர் ஷங்கர் படம் போல், அகண்ட வெட்டவெளி கண்ணில் படும். மாநாடு நடைபெறுகிற இடம் 200 ஏக்கருக்கு மேல். உள்ளே திரும்பினால், சிவந்த நிறத்தில் டெல்லி செங்கோட்டையை ஒத்த முகப்பு. இருபுறமும் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்கள்.

                                   

முகப்பினுள் நுழைந்தால், பாராளுமன்ற வளாகத்தின் வெளிப்புற தோற்றத்தில் அடுத்த முகப்பு. அதனுள் நுழைந்தால், ஜிலுஜிலுக்கும் பனை ஓலை ஆர்ச், தலைவர் கலைஞர் வயதை குறிக்கும் வகையில் 90 அடி உயரத்தில். 


                                 

அதற்கு முன்பாக அதற்கு ஈடாக 90 அடி உயரத்தில் கொடிக்கம்பம். அதில் பறக்க இருப்பது, 10 அடி உயர கழகக் கொடி.

பனை ஓலை ஆர்ச்சை ஒட்டி 1100 அடி நீளமும், 600 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட பந்தல். அது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


                                 

உள்ளே சூரிய ஒளி போல், பளீரிடும் ஃபோகஸ் லைட்கள். கீழே மணல் பரப்பப்பட்டு உட்கார்ந்து பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டுள்ளது.

உள்ளே தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. மேடையிலிருந்து தூரமாக அமர்ந்திருந்தாலும், அருகில் இருந்து பார்க்கும் உணர்வை தரும். மின்விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன. பந்தலுக்கு வெளியிலும் மெகா திரைகள் அமைக்கப்பட்டு, ஒளிப்பரப்பப்படவுள்ளது.

இரண்டு மாதத்திற்கு முன்பு இது வயல்வெளி. நடந்தால் முழங்கால் அளவு உள்ளே போகும். இப்போது, கால்பந்து திடல் போல் கெட்டியாகி விட்டது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக