பிரபலமான இடுகைகள்

சனி, 22 பிப்ரவரி, 2014

மாநாடு முதல் நாள், முதல் வரிசையும் களப்பணியும்....

வரவேற்பு குழு செயலாளர் அப்படின்ன உடனே, கலர் கலரா கனவோட இருந்தேன். இது வரை மாநாட்டு பந்தலின் கடைசி கம்பத்தில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கடலை சாப்பிட்டுக் கொண்டே மாநாடு பார்த்தது தான் வரலாறு.

வரவேற்பு குழு செயலாளர் அப்படின்னா, மேடையிலேயே இருக்கனும், வந்தவர்களை வரவேற்கனும், ஹாயான டியூட்டி தான் அப்படின்னு இருந்தேன். ஆனா பத்து நாள் முன்னாடி திருச்சி வந்தப்பவே அண்ணன் நேரு லேசா சிக்னல் கொடுத்திருக்காரு.

அவர் மாநாட்டு இடத்தை சுற்றி வரும் போதே, கூட நடந்த போதே, இப்படி தான்னு தெரியாமப் போச்சு. இன்னைக்கு தான் தெரிஞ்சுது, இது வேற கதைன்னு. நேற்று இரவு மாநாட்டு ஏற்பாடுகளை ஒரு பார்வை பார்த்தோம், வரவேற்பு குழு செயலாளர்கள்.

அண்ணன் நேரு கொடிக்கம்பம் மற்றும் கொடியை சரி பார்த்து முடித்து, திடலிலேயே சாப்பிட்ட போது மணி 11.30. பிறகு அறைக்கு வந்த போது மணி 12.00. காலை 6.00க்கு எழுந்து குளித்து, மாநாட்டு திடலுக்கு போன போது மணி 8.00.

லேசான டிராபிக். எதிரில் ஒரு கார். உள்ளே தளபதி டி-ஷர்டில். மாநாட்டு திடலிலேயே வாக்கிங் முடித்து போகிறார். அண்ணன் நேரு உடன் இருந்திருக்கிறார், கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் இராஜேந்திரன் அவர்களும்.

கொடி மேடையில் நன்னியூர் இருந்தார். நானும் இணைந்தேன். பிறகு பெரம்பலூர் துரைசாமி, புதுக்கோட்டை அரசும் வந்து சேர்ந்தார். கண் கொள்ளா கூட்டம், கருத்து கொள்ளா கூட்டம். மாநாடு துவங்கியது.

                          


கடைசியில் இருந்தவர்கள் எழுந்து மெல்ல முன்னேறி வந்தனர். மேடை அருகே வந்து, தலைவரை வணங்கி நகர்ந்தனர். சிலர் அங்கேயே நிற்க துவங்கினர். இது ஒரு கட்டத்தில் பிரச்சினையாக ஆரம்பித்தது. இறங்கி அவர்களை நகர்த்தினோம்.

மதிய உணவுக்கு பிறகு, தஞ்சை சின்னப் பொண்ணு குழுவினரின் பாடல் கச்சேரியின் போது, மேடைக்கு எதிரே கூட்டம் அதிகரிக்க துவங்கியது. பாடலுக்கு ஆட்டம் வேறு. அவர்களை சரிபடுத்துவதே வரவேற்புக்குழு செயலாளர்கள் வேலையாகிப் போனது. அண்ணன் நேருவும் அவ்வப்போது சேர்ந்துக் கொண்டார்.

சில நேரம் முதல் வரிசையில் அமர்ந்து சொற்பொழிவுகளை கேட்கும் வாய்ப்பு, சில நேரம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களப்பணி. ஒரு சமயம் பெரியண்ணன் அரசு மேடைக்கு வர, கேட்டை திறந்து உதவினேன். அப்போது அவருக்கு பின் நின்றவர், நான் தடுப்பதாக நினைத்து, என் நெஞ்சில் கை வைத்து தள்ள, நான் அவரை தள்ள, லேசான தள்ளுமுள்ளு.

பிறகு யார் என்று தெரிந்து, அவர் வருந்த நிலைமை சுமுகமானது. சில தொண்டர்களை நகர சொல்லும் போது, "எவ்வளவு செலவு செஞ்சு வர்றோம், தலைவர், தளபதியை கிட்ட பார்க்கக்கூடாதா ?" என்று எகிறியதும் நடந்தது. இதற்கிடையே அவ்வப்போது சொற்பொழிவுகளையும் கேட்டோம்,

தேர்தல் நிதி வசூல் செய்து கொடுத்தமைக்காக மாவட்ட செயலாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாநாட்டு மேடையில், தலைவர் கையால் பெற்றது பெரும் நிகழ்வு.

                 


 # வசவுகளோடும், வாழ்த்துக்களோடும் கடந்தது முதல் நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக