பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மாநாட்டின் இரண்டாம் நாள்... திணறியது திருச்சி

16.02.2014. மாநாட்டின் இரண்டாம் நாள்...

கழக வெளியீட்டு செயலாளர் அய்யா திருச்சி செல்வேந்திரன் மகன் எழில் திருமணம் தலைவர் தலைமையில். தலைவர் வருவதற்கு முன்பாக, மணமகனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு மாநாட்டுக்கு கிளம்பிய போது, டிராபிக். மாநாட்டு மேடையை அடைந்த போது, தளபதி அவர்கள் வந்து 10 நிமிடம் ஆயிற்று என்றார்கள்.

மேடை ஏறிய தளபதி, கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எனது தந்தையை பார்த்த உடன், அருகில் சென்று நலம் விசாரித்து விட்டே, தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். என் தந்தையாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாளர்கள் உரை. சிறப்பான உரைகள். இரண்டாம் நாள் மாநாட்டிற்கு முதல் நாள் மாநாட்டை விட கூட்டம் நெரிய ஆரம்பித்தது. திண்டுக்கல் சாலை 10 கி.மீக்கு டிராபிக் நகரவில்லை என தகவல் வந்தது. தலைவர் மேடைக்கு வந்த போது, மொத்த கூட்டமும் எழுந்து நின்று "தலைவர் வாழ்க" என்று முழங்கியது. பந்தல் அதிர்ந்தது. கண் குளிர்ந்தது, காதும் குளிர்ந்தது.

ஒவ்வொருவரும் ஒதுக்கிய நேரத்தை தாண்டி சிறிது சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொண்டதன் விளைவு, 12.00 மணிக்கு பேச வேண்டிய தளபதி அவர்கள் மைக் முன் வந்த போது மணி 1.30. மாநாட்டு ஏற்பாடுகளுக்காக அண்ணன் நேருவை வாழ்த்திவிட்டு, அரசியலை தொட்ட போது அனல் ஏற ஆரம்பித்தது. ஜெயலலிதாவுக்கு சவால் விட்டு பேசும் போது அரங்கம் தகித்தது. உச்சக்கட்ட பேச்சு. கைத்தட்டல் அடங்கவேயில்லை.


                   

அனலாக பேசியவர், முடிக்கும் போது அரங்கத்தை அமைதியில் ஆழ்த்திவிட்டார். தளபதி அவர்கள், அண்ணன் நேரு அவர்களது சகோதரர் ராமஜெயம் குறித்து நினைவு கூற, கண்கலங்க ஆரம்பித்த நேரு ஒரு கட்டத்தில் கதறி அழ ஆரம்பித்து விட்டார்.

                     

2.30-க்கு தளபதி அவர்கள் பேசி முடிக்கும் வரை, சாப்பிடக்கூட கலையாமல் மக்கள் அப்படியே அமர்ந்திருந்தனர். டிராபிக் ஜாமால் நகருக்குள் செல்ல முடியாது என எங்களுக்கு அலுவலகத்திலேயே உணவு ஏற்பாடு செய்திருந்தார் அண்ணன் நேரு. சாப்பிட்டு வரும் போது எங்களுக்கு முன் ஒரு ஊர்வலம் போய் கொண்டிருந்தது.

யார் என்று பார்த்தால், அண்ணன் திருமா நடந்து போய் கொண்டிருந்தார். டிராபிக் பிரச்சினையால் 2 கி.மீக்கு மேல் நடந்தே மேடையை வந்தடைந்தார். ம.ம.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கொஞ்சம் தூரம் பைக்கிலும், பிறகு நடந்தும் மேடையை வந்தடைந்தார்.

நாங்கள் மேடையை அடைந்த போது, மேடை முழுதும் கட்டுக்கடங்கா கூட்டம். ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் நாட்டுப்புற இசை கச்சேரி கேட்கும் குஷியில் மேடையில் ஏறியிருந்தனர். கீழே இறங்க சொல்லி பார்த்தோம், அசையவில்லை. தொண்டரணியினருடன் இணைந்து கைகோர்த்து "செயின்" அமைத்து கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சம் பின்னுக்கு தள்ளினோம்.

ம.ம.க தலைவரோடு பாதுகாப்புக்கு வந்திருந்த இளைஞர்களும், எங்களோடு ஒத்துழைத்தனர். வெறும் தொண்டர்கள் மட்டும் என்றால், பரவாயில்லை என விடலாம். காலையில் இருந்தே பலரும் பிக்பாக்கெட்களிடம் பணம், செல் இழந்த செய்தி வந்து கொண்டிருந்ததால், பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டிய நிலை. செயின் அமைத்து தள்ளும் போது சிலர் எதிர்த்து தள்ள, வலது கையில் பலத்த அடி, வீங்கிவிட்டது.

கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேச ஆரம்பித்த நிலையில், அடுத்த பிரச்சினை. மேடைக்கு நேர் முன்னால் இருந்தப் பகுதியில் கூடியவர்கள் கொடியை அசைத்தும், துண்டை அசைத்தும் குரல் எழுப்ப, பேசுவோருக்கு இடைஞ்சல். ஒரு கட்டத்தில் அண்ணன் நேரு வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு இறங்கி ஒழுங்குப்படுத்தினார். அவர் மேடைக்கு வர வேண்டிய சூழலில் மீண்டும் கூச்சல். இம்முறை அண்ணன் திருச்சி சிவா களத்தில் குதித்தார். 


                      

அடுத்து நான் பத்து தொண்டர் அணியினருடன் அங்கு சென்றேன். சென்றேனில்லை, ஸ்பீக்கர் மீது இறங்கி, கீழே தரையில் குதித்தேன். கையில் ஒரு குச்சியோடு ஒழுங்குப்படுத்த, ஒரு தோழர் "எல்லோரும் நம்மாளுங்க தான். அடிச்சிடாதீங்க" என்று அறிவுரை வழங்கி சென்றார்.

அப்போது ஒரு இளைஞன் தொடர்ந்து விசில் அடிக்க, நான் குச்சியை நீட்டி எச்சரிக்க, அமைதியான இளைஞன் என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். விறுவிறுவென என் அருகில் வந்து நின்று, தன் நண்பனை போட்டோ எடுக்க சொன்னார். " நீ யாருப்பா ?" என்று கேட்டேன். "அண்ணே, நான் அகரம் அருண். உங்க பேஸ்புக் ஃபாலோயர்" என சொல்ல ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு. இப்படியாக இரண்டு மணி நேரம் டியூட்டி ஓடியது.

அடுத்து தலைவர் பேச இருந்த நிலையில் மேடை ஏறினேன். காலையிலேயே அண்ணன் நேரு சொல்லிவிட்டார், "தலைவர், தளபதி பேசும் முன், வரவேற்புகுழு செயலாளர்கள் நால்வரும் மேடைக்கு வந்துவிட வேண்டும். நாம் சேர்ந்து நினைவுப் பரிசு கொடுக்க வேண்டும்." அதே போல் கொடுத்தோம். பெரிய அங்கீகாரம்.

இந்த தள்ளுமுள்ளுவில், வேட்டி, சட்டை கசங்கி வியர்த்து இருந்த கோலத்தை பார்த்த அண்ணன் ராசா அவர்கள் பதறி விட்டார்கள். கை வீக்கத்திற்கு மருத்துவம் பார்க்க அறிவுறுத்தினார்.

தலைவர் உரை. அண்ணன் நேரு அவர்களது பணியை பதினைந்து நிமிடம் பாராட்டினார். "தம்பி என்பதா, தளகர்த்தர் என்பதா, நண்பர் என்பதா ?" உச்சக்கட்ட பாராட்டு. தம்பிகளை பாராட்டும் தலைவர்.

மறுநாள் தளபதி அவர்கள் சென்னை கிளம்பும் போது அழைப்பதாக, கரூர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் நன்னியூர் ராஜேந்திரன் சொல்லியிருந்தார். இரவு அறை திரும்பி, உடல் வலிக்கு வென்னீரில் குளித்து, மாத்திரை சாப்பிட்டு, கைகால் எல்லாம் "மூவ்" தடவி படுத்ததில், காலை எழுந்தது லேட்.

மிஸ்டு காலில் கரூர் மா.செ உதவியாளர் செந்தில் அழைப்பு. பேசினேன். தளபதி கிளம்பும் தகவல் சொல்ல அழைத்திருக்கிறார். தளபதி கிளம்பி விட்டார்கள். முறையாக வரவேற்பு குழு செயலாளர் என்ற முறையில் நன்றி சொல்லி வழியனுப்ப சென்றிருக்க வேண்டும். அண்ணன் ராஜேந்திரனை செல்லில் அழைத்து "உடல் நலிவால் வர இயலாமல் போயிற்று. அண்ணனிடம் சொல்லி விடுங்கள்" என்று சொல்லி வைத்து விட்டேன், அவர் அப்போது தளபதி காரில் இருந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் செல் அழைப்பு. தளபதி அவர்கள். "என்ன சங்கர், கை என்ன ஆச்சி ?" விபரம் சொன்னேன். "எக்ஸ்ரே எடுத்து பார்த்திடுங்க. ரெஸ்ட் எடுங்க"

உடல் நலிவிலும், உள மகிழ்வோடு. இந்த பாச உணர்வுள்ள தலைவர் வேறு எந்த இயக்கத்தில் உண்டு ?

# சோ'சியர்களே, இந்த பேரியக்கத்திற்கு அஸ்தமனம் கிடையாது. என்றும் உதயம் தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக