பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

நாலடி உயரம் தான், உடையோ வேட்டி, ஜிப்பா...

அவன் தோற்றமே என்னை கவர்ந்தது. சிறிய உருவம். வயதும் குறைவாகத் தான் தெரிந்தது. ஆனால் வயதுக்கும், உருவத்திற்கும் மீறிய உடை. ஒரு நாலடி உயரம் தான் இருப்பான். உடுத்தியிருந்த உடையோ வேட்டி, ஜிப்பா. அதிலும் திமுக கரை போட்ட வேட்டி. முகத்தில் குழந்தமை இன்னும் மிச்சமிருந்தது.

மாநாட்டு மேடையில் தான் அவனை பார்த்தேன். மிக சுவாதீனமாக, பழக்கப்பட்டவன் போல் நடமாடிக் கொண்டிருந்தான். மாநாட்டுக்கு முதல் நாள் 14-ந் தேதி மாலை. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட தலைவர் கலைஞர் அவர்கள் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.

தலைவர் வாகனம் மேடைக்கு வந்து விட்டது. நான் அவன் அருகில் சென்று மேடையில் இருந்து இறங்க அறிவுறுத்தினேன். பெரிய மனைதனை போல என்னை பார்த்துக் கொண்டே நகர்ந்தான். அதற்குள் தலைவர் மேடை ஏற்பாடுகளை பார்வையிட, நாங்கள் அதில் மூழ்கி விட்டோம்.

தலைவர் பார்வையிட்டு சென்ற பிறகு, தளபதி அவர்கள் மீண்டும் வருகிறார் என கொடிமேடை அருகே காத்திருந்தோம். மணி இரவு 9.00. இப்போது அவன் மீண்டும் என் பார்வையில் தட்டுப்பட்டான். அருகே அழைத்து விசாரித்தேன். ஷாகுல் அமீது என பெயர் சொன்னதாக ஞாபகம்.

“எந்த ஊர் ?” என்று கேட்டேன். “பள்ளப்பட்டி” என்றவன், இப்போது என்னோடு கரம் கோர்த்துக் கொண்டான், நீண்டநாள் பழகியவன் போல. நான் அருகில் இருந்த கரூர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் நன்னியூர் ராஜேந்திரன் அவர்கள் முன் நிறுத்தினேன். “அண்ணே, உங்க மாவட்டத்து பையன்” என்றேன்.

“எந்த ஊர் தம்பி ?” என்றார். “பள்ளப்பட்டி" என்றான். சில கழக முன்னோடிகள் பெயரை சொல்லி, அவர்களை தெரியுமா என்று வினவினார். அவன் சகஜமாக எல்லோரையும் தெரியும் என்று சொன்னான். “எங்க எம்.எல்.ஏ கே.சி.பி அய்யாவ நல்லா தெரியும்” அவனாக சொன்னான்.


                      Displaying 20140214_225927.jpg

“யார் கூட வந்த ?” “நான் மட்டும் தான் வந்தேன்” “படிக்கிறியா ?” “ஒன்பதாவதோட நிப்பாட்டிட்டேன். சேலத்தில ஒரு மெடிக்கல்ல வேலையில இருக்கேன். அது வீரபாண்டியார் அய்யா சிலைக்கு பக்கத்தில தான் இருக்கு”. எது கேட்டாலும் கட்சி தொடர்பான பதில தான்.

“எங்க தங்குவ ?” “இங்கேயே தான் “(மாநாட்டு பந்தலைக் காட்டி). “சரி. என் ரூமுக்கு வந்திடு” “இல்லண்ணே, தூக்கம் வராது. இத முழுசும் சுத்தி பார்த்தா தான் தூக்கம் வரும்” ரூபாய் 500 கொடுத்தார் நன்னியூர் ராஜேந்திரன். வாங்க மறுத்தான். வலுக்கட்டாயமாக அவன் பையில் வைத்தார். உடன் இருந்த டி.ஆர்.பி.ராஜா குஷியாகி அவனோடு புகைப்படம் எடுத்தார்.


                          Photo: கடந்த நிலைத்தகவல் நாயகனின் புகைப்படம் கிடைத்து விட்டது. 

ஷாகுல் அமீது (நிலைத்தகவலில் பெயரை தவறாக குறிப்பிட்டு விட்டேன்) உடன் கரூர் மா.பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், புதுக்கோட்டை மா.செ பெரியண்ணன் அரசு, மன்னை ச.ம.உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நான்.

அண்ணன் நேரு அவர்கள் வந்துவிட நாங்கள் பணியில் தீவிரமாகி விட்டோம். மறுநாள் காலையில் மேடையில் இருந்து பார்த்த போது, அவன் உணவகம் நோக்கி சென்று கொண்டு இருந்தான். குளித்த ஈர துண்டு தோளில். இரண்டாம் நாள் தளபதி உரையாற்றும் போது, தொலைவில் நின்று, எதையோ கொரித்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

# வாழ்க இளைஞனே ! வாழ்க நின் கூட்டம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக