பிரபலமான இடுகைகள்

புதன், 5 பிப்ரவரி, 2014

வேட்டிய மாத்த விடாம, கெட்டியா பிடிச்சிக்கிட்டார்...

29.01.2014 மதியம் 12.30. அப்போது தான் குரோம்பேட்டையை கடந்தேன். அண்ணன் ஆ.ராஜா அவர்கள் இன்று நீலகிரி தொகுதியில் கழக வேட்பாளாராகப் போட்டியிட விருப்ப மனு அளித்தார்கள், அறிவாலயத்தில். அதற்காக சென்று கொண்டிருந்தேன்.

இன்று அய்யா அலைகடல் வெற்றிகொண்டான் அவர்க...ள் நினைவு நாள். காலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி கிளம்பியதால், நானே தாமதம்.

அப்போது தான் ஃபோன் அழைப்பு. "மாவட்ட துணை செயலாளர் அண்ணன் முருகேசன் மறைவுற்ற செய்தி". அண்ணன் ராஜா அவர்களை நேரில் சந்தித்து, இந்தத் தகவலை தெரிவித்து உடனே ஜெயங்கொண்டம் திரும்பினேன்.

1999-ல் நான் அரியலூர் மாவட்ட கழக செயலாளராக தேர்வு பெற்றேன், அப்போது அண்ணன் முருகேசனும் மாவட்ட துணை செயலாளராகத் தேர்வு பெற்றார். ஆனால் அவர் அதற்கு முன்பே மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். அப்போது எனது தந்தையார் மாவட்ட செயலாளர்,

மாவட்ட செயலாளர் ஆன போது, எனக்கு வயது 29, அண்ணன் முருகேசனுக்கு 62. அவர் மகன் போன்ற வயது. ஆனால் அன்றிலிருந்து இது வரை என்னை "மாவட்டம்" என்று மரியாதையோடு தான் அழைப்பார், இடையில் நான் மாவட்ட செயலாளராக இல்லாத நேரத்திலும்.

2001-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆன போது, அரியலூர் மாவட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைத்து விட்டார். அப்போது ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தின் செயலாளர் அண்ணன் ஆ.ராஜா அவர்கள். இவர் துணை செயலாளர்.

மீண்டும் தலைவர் கலைஞர் முதல்வர் ஆகி அரியலூர் மாவட்டத்தை பிரித்து வழங்குகினார். நான் மீண்டும் அரியலூர் மாவட்ட செயலாளராகிறேன். அண்ணன் முருகேசனே மாவட்ட துணை செயலாளர். மற்ற எல்லாப் பொறுப்புகளிலும் புதிய நபர்கள்.

நான்காவது முறையாக மாவட்ட துணை செயலாளர், காரணம் அவ்வளவு எளிமையான, அன்பான, பிறரை மதிக்கின்ற மனிதர்.

சிறு மூளை சுருங்க ஆரம்பித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் ஞாபக மறதி, நினைவிழப்பு ஏற்பட்டது. நேற்று தஞ்சை சென்று சிகிச்சையளித்தும் பலனில்லை. காலை மறைவுற்றார். இரவு 7 மணிக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன்.

அப்போது அவரது மகன் கணேசன் சொன்னது, "நேற்று மருத்துவமனையில், தன்னையறியாமல் வேட்டியில் சிறுநீர் போயிட்டார். ஆனா வேட்டிய மாத்த விடாம, கெட்டியா பிடிச்சிக்கிட்டார். காரணம் கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டி. அவரிடம் வேறு கரை வேட்டியே கிடையாது. இறந்த பிறகு தான் கைலி மாற்றினோம்.

இந்தக் கரை வேட்டிய அவரும் விடல, வேட்டியும் அவர விடல. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த வேட்டி தான் அவர காப்பாத்துச்சு. நோய் பாதிப்பால், ஞாபக மறதியில் வழி தவறி வேறு ஊருக்கு போயிட்டார். அங்க நினைவிழந்து கீழ விழுந்து அடிபட்டு மயக்கமாயிட்டார். கரை வேட்டிய பார்த்த கழகத் தோழர்கள் போய் அடையாளம் தெரிந்து காப்பாற்றினார்கள்."

# முருகேசன்கள் கழகத்தின் வேர்கள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக