பிரபலமான இடுகைகள்

புதன், 26 பிப்ரவரி, 2014

ஊருக்கெல்லாம் இன்ஸ்யூரன்ஸ் செய்து உதவியர்...

மாநாட்டின் இரண்டாம் நாள் அந்த செய்தி. அண்ணன் குமரேசன் மறைவு.

உடல் நலனோடு தானே இருந்தார், எப்படி இறந்தார் என்று விசாரித்தால், பைக் ஆக்சிடெண்ட். அவர் பொறுமையானவர், நிதானமானவர் ஆயிற்றே என்று மனச் சங்கடம். ஊர் வந்தவுடன், அவர் இல்லம் சென்று, துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன். 

                                  

குமரேசன் பொய்யூர் கிராமத்தில், மிக ஏழமையான குடும்பத்தில் பிறந்தவர். படித்து, நண்பர்கள் அறிமுகத்தோடு LIC-ல் இணைந்தார். உழைத்து மெல்ல மெல்ல முன்னேறினார். LIC-ல் ஒரு குறிப்பிடத் தக்க இடத்தை பிடித்தார். செல்வம் சேர ஆரம்பித்தது. அரியலூரில் வீடு கட்டினார்.

ஆனால் அதே அன்போடு, இன்முகத்தோடு எல்லோரிடமும் பழகுவார். LIC குமரேசன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக அரியலூர் பகுதியில் LIC-ல் அவர் தான் நம்பர் 1. உழைப்பை தொடர்ந்தார்.

அன்று வெளிநாடு செல்லும் ஒரு உறவினருக்கு பாலிசி போட கையெழுத்து பெற, உறவினரின் கிராமம் சென்றார். கையெழுத்து பெற்று உறவினருக்கு ரூ 500 செலவுக்கு கொடுத்து விட்டு பைக்கில் திரும்புகிறார். பணம் பெற்ற உறவினர் விளாங்குடி கைக்காட்டி டாஸ்மாக் சென்று உற்சாகம் பெற்று திரும்புகிறார்.

மெயின் ரோட்டில் குமரேசன் பைக் ஏறுகிறது, உறவினர் பைக் நேராக வந்து மோதுகிறது. பின் தலையில் பலத்த அடி. சிகிச்சைக்கு தஞ்சை செல்கிறார்கள். ஆனால் உயிர் பிரிந்து விடுகிறது. இரண்டு மகன்கள். ஒருவர் மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங், அடுத்தவர் முதலாண்டு இன்ஜினியரிங். முக்கிய காலகட்டத்தில் குடும்பத்தாரை தவிக்க விட்டு பிரிந்து விட்டார்.

ஊருக்கெல்லாம் இன்ஸ்யூரன்ஸ் செய்து உதவியர், தன் பைக்கிற்கு இன்ஸ்யூரன்ஸ் செய்யவில்லை. இவர் மட்டுமல்ல, இது போல பல பைக் விபத்துகளில் இதே நிலை தான். பைக் வாங்கும் போது, கம்பெனியில் செய்து கொடுக்கும் இன்ஸ்யூரன்ஸோடு சரி. மீண்டும் பெரும்பாலோர் புதுப்பிப்பதில்லை.

பல குடும்பங்களில் பைக் ஆக்சிடெண்ட்டில் குடும்ப உறுப்பினரை இழந்து பெருத்த அவதிக்குள்ளாகிறார்கள். குறைந்தபட்சம் காப்பீடாவது கிடைத்தால், அவர்கள் இல்லாத சூழலில் வாரிசுகளுக்காவது சிறு உதவியாக இருக்கும். குறைந்தப்பட்ச ஆறுதல்.

செந்துறை ஒன்றிய கழக அவைத்தலைவர் அண்ணன் நமங்குணம் செல்வராஜ் இறந்தபோதே இந்தப் பிரச்சினை வந்தது. அப்போதே இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நீண்ட நாட்கள் புதுப்பிக்கப்படாத இன்ஸ்யூரன்ஸ்களை எப்படி புதுப்பிப்பது என்று இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் விசாரித்தோம்.

அடுத்து இதனை கையில் எடுத்து செயல்பட வேண்டிய சூழலில் பணிச் சுமை காரணமாக, தள்ளிப் போய் விட்டது. இப்போது அண்ணன் LIC குமரேசன் இதனை தள்ளிப் போடக் கூடாது என உணர்த்தியிருக்கிறார்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் இதனை முதலில் செயல்படுத்தி பார்க்கலாம். முதலில் ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு, அங்கு இருக்கும் பைக்குகள் எண்ணிக்கை மற்றும் இன்ஸ்யூரன்ஸ் நிலையை கணக்கெடுக்க வேண்டும்.

பிறகு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்க கம்பெனி நபர்களை அழைத்து வந்து உதவிட வேண்டும். இதை தனி மனிதனாக செய்ய இயலாது. அரசியல் சார்ந்து செய்தால் நோக்கம் விமர்சிக்கப்படும்.

எனவே ஒரே கிராமத்தை சேர்ந்த 4 அல்லது 5 நண்பர்கள் கொண்ட குழு உதவினால் எளிதாக இருக்கும், உங்களோடு நானும் இருப்பேன். அண்ணன் LIC குமரேசனுக்கு 'இன்ஸ்யூரன்ஸ் அஞ்சலியாக' இது அமையட்டும்.

# வாருங்கள், கரம் கோர்ப்போம், கண்ணீர் துடைப்போம் !