பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

மாநாடு என்றே சொல்லக்கூடாது, சொல்லவும் முடியாது....

காலையில் வேப்பூர் ஒன்றியம் நமையூர் கிராமத்தில், ஒரு கழகத் தோழர் மறைவுற்ற செய்தி வந்தது. கிளம்பி போய் அஞ்சலி செலுத்திவிட்டு வரும் போது வழியில் சில வேன்கள் எதிரில் சென்றன. யார் என்று சற்று உற்று கவனித்ததில் இரண்டு அரசியல் கட்சி கொடிகள் கண்ணில் பட்டன. ஒன்று பா.ஜ.க கொடி, மற்றொன்று ஐ.ஜே.கே.

அட எங்கே போகிறார்கள், என்று யோசித்த போது தான் நினைவு வந்தது மோடி விஜயம். போன பிஜேபி வாகனங்கள் பெரும்பாலும் கன்னியாக்குமரி மற்றும் தென் மாவட்டங்கள் தான். ஐ.ஜே.கே வாகனங்கள் லால்குடி மற்றும் குன்னம் தொகுதியை சேர்ந்தவர்கள். எனக்கும் வேண்டியவர்கள்.

இந்த மாநாட்டிற்கு பலத்த எதிர்பார்ப்பு. காரணம் மோடி அலை ஓங்கி ஓங்கி வீசி, அது புயலாக மையம் கொண்டு, எதிர்படுவோரை எல்லாம் தூக்கி வீசும் என கணிக்கப்பட்டது தான். ஆனால் இன்று வண்டலூர் அருகே கரையை கடந்த போது, அதன் வீச்சு எல்லோருக்கும் தெரிகிறது.

நாங்கள் அப்போது திருச்சி கழக மாநாடு ஏற்பாடு பணிகளுக்காக சென்று கொண்டிருந்தோம். பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரைசாமி அவர்களோடு நானும் குன்னம் தொகுதி தோழர்கள் முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மதியழகன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கரிகாலன், ரசூல் அகமது, மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் சன்.சம்பத், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோரும் சென்றோம்.

திருச்சியில் ஏற்பாடு செய்யப்படுவது மாநாடு. வண்டலூரில் நடைபெறுவது பொதுக்கூட்டம். இது மட்டுமல்ல, கேப்டன் கூட்டியதும் பொதுக்கூட்டம் தான்.

அரியலூர் மாவட்ட திமுக தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்த போது கூடிய கூட்டத்தை கணக்கில் கொண்டால், தேமுதிக கூட்டிய கூட்டம் மூன்று மடங்கு இருக்கும். பா.ஜ.க கூட்டமும் அதே கதை தான். இவை எல்லாம் மாநாடு என்றே சொல்லக்கூடாது, சொல்லவும் முடியாது.

திருச்சியில் நடைபெற போகும் மாநில மாநாட்டின் ஏற்பாடுகளை பார்த்தவர்கள் பிரமித்து போயே உள்ளனர். நேற்றும், இன்றும் மாநாட்டு பணிகளில் பங்கேற்றோம்.

மாநாட்டு மேடை, கொட்டகை மற்றும் ஏற்பாடுகளை பார்வையிட திமுக தோழர்கள் வருவதை தாண்டி பொதுமக்கள் வரத்து அதிகமாகவே இருக்கிறது. குடும்பம் குடும்பமாக கட்சி சார்பற்றவர்களும் வந்து பார்வையிட்டு, பிரமித்து போகின்றனர். ஏதோ பொருட்காட்சி போல உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வந்து, வந்து செல்கின்றன. சின்ன வயதில் குடும்பத்தாரோடு பங்கேற்ற மாநாடு, நினைவு தெரிந்த பிறகு கலந்து கொண்ட மாநாடு, அரசியலுக்கு வந்த பிறகு பங்கேற்ற மாநாடு என பல மாநாடுகள்.

# வரலாற்று நினைவுகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக