பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 7 மார்ச், 2014

கூட்டணிக் குழப்பங்கள் குறித்து, லெஃப்ட் டுடே இணைய இதழில் என் கட்டுரை....

எதையும் தாங்கும் இதயங்கள்

 
ஏ.பி.பரதன்  பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர். பொதுவாக தேசிய அளவில், எல்லோராலும் மதிக்கப்படுகிற தலைவர். ஆனால் அவரை, இப்படியும் கையாளமுடியும் என்று காட்டியவர் முதல்வர் ஜெயலலிதாதான்.
நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் தொடர்பாக, தன்னை சந்திக்க சென்னை வந்தவரை, சந்திக்காமல் இழுத்தடித்து, டெல்லி சென்று, அங்கு சந்திக்க நேரம் அளித்து, சென்னையில் இருந்து டெல்லிக்கு அவரை  அலைய வைத்தவர்.
அதே நிலைதான் இப்போதும். இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் காத்திருக்கிறார்கள், கூட்டணி அறிவிப்பிற்காக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெயலலிதா, கூட்டணி மக்களவைத் தேர்தலிலும் தொடர்வதாக அறிவிக்கிறார்கள்.
இந்திய கம்யயூனிஸ்ட் தலைவர்களை சந்திக்கிறார், கூட்டணியில் இருப்பதாக அறிவிக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறார், நாற்பது தொகுதிக்கும். கூட்டணி கட்சிகளின் நிலை அந்தரத்தில்.
நிருபர்கள் கேட்டதற்கு ஜெயலலிதா சொல்கிறார்,"கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுக்கள் தொடர்கிறது. முடிவுற்றவுடன் அவர்களுக்கான தொகுதிகளில் வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள்." 
தா.பாண்டியன் சொல்கிறார், "அதிமுக வேட்பாளர் அறிவிப்பு... எங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு அல்ல"
இந்த நிகழ்வு இப்போது மட்டுமல்ல, 2011 சட்டமன்றத் தேர்தல் போதும் இதை விட மோசமான நிலை ஏற்பட்டது. ஆனால் அத்தனையையும் தாங்கிக் கொள்கிற,"எதையும் தாங்கும் இதயத்தோடு" இருக்கிறார்கள் பொதுவுடமைக் கட்சிகள். இந்தியாவிலேயே இந்த அனுபவம் தமிழகத்தில் மட்டும் தான் கிடைத்திருக்கும் கம்யயூனிஸ்ட்களுக்கு.
கம்யூனிஸ்ட்கள் மாத்திரமல்ல, சரத்குமாரின் 'சமத்துவ மக்கள் கட்சியும்', 'வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும்' காத்திருக்கிறார்கள், அம்மா மனம் இரங்குமா என.
திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் போது கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும் கூட்டணியில் இணைந்துள்ளன.
திமுக மாநாட்டில், காங்கிரஸோடும் கூட்டணி இல்லை, பா.ஜ.க-வோடும் கூட்டணி இல்லை என்பதை திமுக தலைவர் கலைஞர் தெளிவாக அறிவித்துவிட்டார். 
தே.மு.தி.க மாத்திரம் திமுக கூட்டணியா, பா.ஜ.க கூட்டணியா, காங்கிரஸ் கூட்டணியா என்ற கண்ணாமூச்சி விளையாட்டில் இருக்கிறது. தே.மு.தி.க-வை கலைஞர் வலிய அழைத்த போது, எல்லோரும் ஏகடியம் செய்தார்கள். ஆனால் அவர் அழைப்பின் சூட்சுமம் இப்போதுதான் புரிகிறது.
திமுகவே அழைத்தவுடன், அதையே தனது மார்க்கெட்டிங் உத்தியாக்கிக் கொண்டார் விஜயகாந்த். உச்சாணிக் கொம்பில் ஏறியவர் இறங்க முடியாமல் தவிக்கிறார். ஒருபுறம் பா.ஜ.கவோடு பேசத் துவங்கினார், இன்னொரு புறம் காங்கிரஸோடு பேசத் துவங்கினார். இன்று வரை பேச்சு தொடர்கிறது, ஏலம் போடுவது போல. 
இப்போது திமுக கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார். பேரறிவாளன் மற்றும் மூவர் விடுதலை பிரச்சினைக்கு பிறகு, தே.மு.தி.க காங்கிரஸ் கூட்டணிக்கு போகமுடியாத நிலை. இப்போது பா.ஜ.க மட்டுமே ஒரே வழி.
பா.ஜ.கவுடைய நிலை அதற்கு மேல். தமிழருவி மணியனின் கனவுப்படி மெகா கூட்டணிக்காக படாதபாடு படுகிறது பா.ஜ.க. ம.தி.மு.க மாத்திரமே வெளிப்படையாக பா.ஜ.க கூட்டணி என்று அறிவித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியும் தே.மு.தி.க போல ஒளிந்து பிடிக்கும் விளையாட்டை தொடர்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி, பத்து தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணியை துவங்கிவிட்டது.  அந்த இடங்களே தனக்கு ஒதுக்க வேண்டுமென்பதும், தங்கள் சமுதாயக் கூட்டணிக்கும் நான்கு இடங்கள் வேண்டுமென்பதும் அவர்கள் நிலைப்பாடு. 
பா.ம.கவின் தளமான வட மாவட்டங்கள்தான், தே.மு.தி.கவிற்கும் வலுவான பகுதி. தே.மு.தி.கவின் உள்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தாலும், இடங்களை பகிர்வது ஒரு போராட்டமாகத்தான் அமையும். அப்புறம் பாரிவேந்தரின் ஐ.ஜே.கேவும், ஈஸ்வரனின் கொங்கு கட்சியும் கூட்டணியில் ஏற்கனவே இணைந்து காத்திருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைகள் எதுவுமே இல்லாத கட்சி காங்கிரஸ்தான். 
இந்த முறை ஈ,வி.கே.எஸ்.இளங்கோவன் விருப்பப்படி, நாற்பது தொகுதியிலும் காங்கிரஸே நிற்கக் கூடிய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 
அதிலும் வியாழக்கிழமை ஒரு இஸ்லாமிய அமைப்பு ஞானதேசிகனை சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு மாரல்பூஸ்ட்டாக அமையும்.
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வரும் என்று எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில், தமிழக தேர்தல் களம் சூடாகிக் கொண்டே போகிறது.  கூட்டணி குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே போவது போல ஒரு தோற்றம்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகள் தேர்தல் தேதி அறிவிப்பின் போது தெளிவாகிவிடும். காரணம், தி.மு.க எப்போதும் கூட்டணி கட்சிகளை மதித்து அரவணைத்து விடும். அ.தி.மு.கவோடு இருப்பவர்களுக்கு வேறு வழி கிடையாது, அவர்கள் அ.தி.மு.கவை மதித்து அரவணைத்துக் கொண்டாக வேண்டும்.
பா.ஜ.க நிலைதான் சிரமம். ம.தி.மு.கவை கூட சமாளித்துவிடலாம், வைகோ பல தேர்தல் களம் பார்த்தவர். பா.ம.கவுக்கு அறிவித்த தொகுதிகளை விடமுடியாது. 
ஆனால் கேப்டன் நிலைதான் பாவம். ஒரு மாதமாக கூட்டணிப் பிரச்சினையில் மீடியாக்களின் லைம்லைட்டில் இருந்தார் விஜயகாந்த். அவருக்கு, நேற்று ஒரு தே.மு.தி.க எம்.எல்.ஏவை தன்னை சந்திக்க வைத்து ஷாக் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. தனது சினிமாக்களில் எளிதாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை சமாளிக்கிறவர், இந்த அரசியலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

written by சிவசங்கர் எஸ்.எஸ்.for LeftToday.in



( இப்போ கொஞ்சம் தெளிஞ்சிருக்கு, அதை அடுத்து பார்ப்போம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக